Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

சிலப்பதிகார ஆராய்ச்சி
ஒளவை துரைசாமி




சிலப்பதிகார ஆராய்ச்சி


1. சிலப்பதிகார ஆராய்ச்சி
2. பதிப்புரை
3. பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!
4. நுழைவாயில்
5. தண்டமிழாசான் உரைவேந்தர்
6. சிலப்பதிகார ஆராய்ச்சி

 


நூற் குறிப்பு
  நூற்பெய : சிலப்பதிகார ஆராய்ச்சி
  தொகுப்பு : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 7
  ஆசிரியர் : ஒளவை துரைசாமி
  பதிப்பாளர் : இ. தமிழமுது
  பதிப்பு : 2009
  தாள் : 16 கி வெள்ளைத்தாள்
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 24 + 416 = 440
  நூல் கட்டமைப்பு: இயல்பு (சாதாரணம்)
  விலை : உருபா. 275/-
  படிகள் : 1000
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  தி.நகர், சென்னை - 17.
  அட்டை ஓவியம்: ஓவியர் மருது
  அட்டை வடிவமைப்பு: வ. மலர்
  அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா
  ஆப்செட் பிரிண்டர்சு
  இராயப்பேட்டை, சென்னை - 14.

பதிப்புரை


ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை
தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார்.

வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.

இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராக வும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந் தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை.

“ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு.துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும்,

“இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான்
தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு”

என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம்.

அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம்.

இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி

தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின்
107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள்.

நன்றி
பதிப்பாளர்

பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்!


பொற்புதையல் - மணிக்குவியல்
“ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன்
மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள்
உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன்
அள்ளக் குறையாத ஆறு”

என்று பாவேந்தரும்,

“பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே
 பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு
நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே
 நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில்
கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல்
 காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும்
தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே
 தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!”

என்று புகழ்ந்ததோடு,

    “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால்  
    அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே  

புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்”

எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும்.

பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து
வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்
பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடைய
வராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன.

உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார்.

பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டு கிறது.பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்
களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டா யிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது.

கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன.

“இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற்
 பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து,
கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த
 பெரும்புலமைக் கல்வி யாளர்!
விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல்,
 வடமொழிநூல், மேற்பால் நூல்கள்
நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய
 நற்றமிழ் தழைக்க வந்தார்!”

என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும்.

கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார்.

ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம்.

ஒளவை நடராசன்

நுழைவாயில்


செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்
களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம்.

எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை.

எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார்.

சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார்.

பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது.

சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச்செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார்.

தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர்.

ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று.

ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை
நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக் கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரைவரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும்.

ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார்.

ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன.

அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர்.

ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது.

ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர் களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர்.

“தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர்.

ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப் பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம்.

ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.

**rமுனைவர் இரா.குமரவேலன்

தண்டமிழாசான் உரைவேந்தர்


உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும்.

ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும்.

நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு
தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று.

எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார்.

“ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
அமைபவன் நூலுரை ஆசிரியன்”

எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர்.

உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார்.

தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர்.
எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார்.

“இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு,

“ வாதம் வெல்லும் வகையாதது வென்னில்
ஓதி வெல்ல லுறுவார்களை என்கை
கோதுகொண்ட வடிவின் தடியாலே
மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’

என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன.

சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன.

நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

“ தாயாகி உண்பித்தான்; தந்தையாய்
 அறிவளித்தான்; சான்றோ னாகி
ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்
 அவ்வப் போ தயர்ந்த காலை
ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்;
 இனியாரை யுறுவேம்; அந்தோ
தேயாத புகழான்தன் செயல் நினைந்து
 உளம் தேய்ந்து சிதைகின்றேமால்”

எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார்.

இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும்பங்காற்றியவர். அவர்தம் பெரு முயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம்.

உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும்.

“ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக்
கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன்
பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை
வாயார வாழ்த்தாத வாய்”

எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக!
வாழிய தமிழ் நலம்!

முனைவர் வேனிலா ஸ்டாலின்
உரைவேந்தர் தமிழ்த்தொகை
தொகுதி - 1
ஞானாமிர்த மூலமும் பழையவுரையும்

தொகுதி - 2
சிவஞானபோத மூலமும்சிற்றுரை

தொகுதி - 3
சிலப்பதிகாரம் சுருக்கம்
மணிமேகலைச் சுருக்கம்

தொகுதி - 4
சீவக சிந்தாமணி - சுருக்கம்

தொகுதி - 5
சூளாமணி சுருக்கம்

தொகுதி - 6
பெருங்கதைச் சுருக்கம்

தொகுதி - 7
சிலப்பதிகார ஆராய்ச்சி
மணிமேகலை ஆராய்ச்சி
சீவகசிந்தாமணி ஆராய்ச்சி

தொகுதி - 8
யசோதர காவியம்

தொகுதி - 9
தமிழ் நாவலர் சரிதை

தொகுதி - 10
சைவ இலக்கிய வரலாறு

தொகுதி - 11
மாவை யமக அந்தாதி

தொகுதி - 12
பரணர்
தெய்வப்புலவர்
The study of thiruvalluvar

தொகுதி - 13
சேரமன்னர் வரலாறு

தொகுதி - 14
நற்றிணை -1

தொகுதி - 15
நற்றிணை -2

தொகுதி - 16
நற்றிணை -3

தொகுதி - 17
நற்றிணை -4

** தொகுதி - 18**
ஐங்குறுநூறு -1

** தொகுதி - 19**
ஐங்குறுநூறு -2

** தொகுதி - 20**
பதிற்றுப்பத்து

** தொகுதி - 21**
புறநானூறு -1

** தொகுதி - 22**
புறநானூறு -2

** தொகுதி - 23**
திருக்குறள் தெளிவு - பொதுமணித்திரள்

** தொகுதி - 24**
செந்தமிழ் வளம் - 1

** தொகுதி - 25**
செந்தமிழ் வளம் - 2
** தொகுதி - 26**
வரலாற்று வாயில்

** தொகுதி - 27**
சிவநெறிச் சிந்தனை -1

** தொகுதி - 28**
சிவநெறிச் சிந்தனை -2
கிடைக்கப்பெறாத நூல்கள்
1.  திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை
2.  தமிழகம் ஊர்ப் பெயர் வரலாறு
3.  புதுநெறித் தமிழ் இலக்கணம்
4.  மருள்நீக்கியார் (நாடகம்)
5.  மத்தவிலாசம் (மொழியாக்கம்)

சிலப்பதிகார ஆராய்ச்சி


சிலப்பதிகாரம் ஆராய்ச்சி
" நீடிருங் குன்ற நிழல்காலு மண்டிலத்துக்
கோடுகோ டாய்த் தோன்றுங் கொள்கைத்தே - கூடலார்
கொண்டாடுஞ் செஞ்சொற் குடக்கோ முனிசேரன்
தண்டா உரைமுத் தமிழ்."

சிலப்பதிகாரம் என்பது செந்தமிழ் இலக்கியங்களுள் மிகத் தொன்மையும் சிறப்பும் அமைந்த பேரிலக்கியமாகும். இது, பண்டைத் தமிழ் மக்களின் நுண்மாண் நுழைபுலப் பன்மாண் பினை இனிது விளக்குவது; தமிழில் முப்பெரும் பிரிவுகளான இயல், இசை, நாடகம் என்ற மூன்றன் உயர் நிலைக்கு ஒப்பற்ற எடுத்துக்காட்டாகவுள்ளது; தமிழ் வேந்தரின் ஆட்சி நலனும், அவர் காலத்தே அவர்களால் தமிழ் மகளிர் கற்புநிலை நன்கு மதிக்கப்பெற்று வந்த திறனும், தமிழர்க்கு அவர்கள் ஆற்றிய தொண்டின் பெருமையும் நமக்கு உணர்த்துவது; தமிழ் மக்களிடையே நிலவிய பல்வகை வாழ்க்கைக் குறிப்புக்களையும் வாணிப நலத்தையும் அறம்பயின் றொழுகும் மனப்பாங்கையும் தெளியவுரைக்கும் சீர்மையுடையது; தமிழ் நன்மக்களின் இசை நாடகக் கலையுயர்வும், அவற்றின் கண் அவர்கள் கொண்டிருந்த நன்மதிப்பும் இப்பெற்றிய என்று காட்டும் திறத்தால் தமிழ் நாட்டின் பண்டைச் சிறப்பினை எடுத்தோதும் இனிமையுடையது; தமிழ்த் தொண்டு புரிதற்கண் உயர் நிலையோர் தாழ்நிலையோர், அரசர், வணிகர், வேளாளர் என்ற வேறுபாடின்றிப் பண்டை மக்கள் அனைவரும் கருத்தூன்றி யிருந்த காட்சியினை நம் கருத்திற்காட்டி மகிழ்வுறுத்துவது; மலைகளின் மாண்பும் காடுகளின் காட்சியும், வயல்வெளிகளின் வனப்பும், கடற்கானலின் கவினும் உள்ளக் காட்சிக்கு உருக்கொள வழங்கும் உயர்வுடையது; பண்டையோர் எடுத்த விழா வகையும், விழாவிடை மகிழும் மக்கள் மாண்பும், காலினும் கலத்தினும் மக்கள் வழங்கும் வரவு செலவும்; மனை மகளிர் மாலைப்போதினும் காலைப்போதினும் ஒழுகும் வாழ்க்கை நிலையும் பிறவும் உயிரோவியம் போலக் காட்டும் ஒட்ப முடையது. சுருங்கச் சொல்லின், இற்றைக்கு ஆயிரத்தெண்ணூா றுயாண்டு கட்குமுன் நம் ஆருயிர்ச் செந்தமிழ் நாடிருந்த செல்வ நிலையின் செம்மைக் காட்சியை இன்று நம்மனோர் இனிது கண்டு மகிழ்ந்து அந்நிலையினை யெய்தி மேம்படுதற்கு முயலுமாறு ஊக்கும் முத்தமிழ்ப் பெருங்கலை நிலையம் என்பது சாலும்.

“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என இந்நூற் றாண்டில் வாழ்ந்திருந்து மறைந்த தேசிய கவி, சுப்பிரமணிய பாரதியார் பாராட்டினர். பண்டைய ஆசிரியன் மாரும் இவ்விலக்கியத்தை மிக்க சிறப்பாகக் கருதியுரைத்துள்ளனர். சென்ற நூற்றாண்டில் இருந்த ஒரு சான்றோர், “சிந்தாமணியாம் சிலப்பதிகாரம் படைத் தான்” என ஒரு நயந்தோன்றக் கூறியது, இன்று நாம் நினைக்குந் தோறும் நம் நெஞ்சத்தே இன்பம் நிறைவிக்கின்றது.

இச்சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகம் என்ற முத் தமிழும் விரவிவரும் பேரிலக்கிய மாதல்பற்றி, இதனைப் பண்டையாசிரியன் மார், இயலிசை நாடகத் தொடர் நிலைச் செய்யுள் என்றும், நாடகக் காப்பியம் என்றும் உரைப்பர். இதன்கண் இடையிடையே உரை நடையும் விரவுதலால், இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும் சான்றோர் கூறுவர்.

1.  நூலாசிரியர்:- இவ்விலக்கியத்தை இயற்றிய சான்றோர் இளங்கோவடிகள். இவர் சேரர்குடியில் பிறந்தவர். இவருடைய தந்தை “ஆராத்திருவின் சேரலாதன்” என்னும் வேந்தர் பெருந்தகை; தாயார் - நற்சோணை எனப்படுவார். சேரலாதனுக்கும் நற்சோணைக்கும் செங்குட்டுவன், இளங்கோ என மக்கள் இருவராவர்; இவருள் செங்குட்டுவன் மூத்தவன். ஒரு நாள் மக்கள் இருவரும் தம் தந்தையுடன் இனிதிருக்குங்கால், நிமித்திகன் ஒருவன் வந்தான். வந்தவன், இளங்கோவை முடிமுதல் அடிகாறும் ஏற இறங்க நோக்கி, “இவனே அரசுரிமை பெறுவன்” என்றான். அது கேட்ட செங்குட்டுவன் சினந்து எரிதவழ நோக்கினன். மூத்தோன் இருப்ப, இளையவனான தான் அரசுரிமை யெய்துதல் ஆகாதெனக்
    கொண்டு, இளங்கோ இளமையிலேயே துறவு பூண்டார் அதனால், இவ்விளங்கோ, இளங்கோ அடிகள் எனச் சான்றோரால் சிறப்பிக்கப்படுவாராயினர். இவ்வரலாறு, இச்சிலப்பதிகாரத்துக்கு உரைவிரித்த ஆசிரியர் அடியார்க்கு நல்லாரால் பின்வருமாறு உரைக்கப்படுகிறது:

" குமரியொடு வடஇமயத்து,
ஒருமொழி வைத்து உலகாண்ட
சேரலா தற்குத் திகழொளி ஞாயிற்று
ஏழ்பரி நெடுந்தேர்ச் சோழன் தன்மகள்
நற்சோணை ஈன்ற மக்கள் இருவருள்
முன்னோன் தன்னைப் பின்னர் இயற்றிப்
பின்னோன் தன்னையும் பெருநம்பி யாகஎன
அன்னவர் தம்மொடு தென்னர் செம்பியர்
தன்னடி போற்றத் தமனிய மண்டபத்துச்
சிங்கம் சுமந்த பொங்கணை மீமிசை
உவரித் திரையின் கவரி இரட்ட
வேந்தன் இருந்துழிச் சார்ந்த நிமித்திகன்
அடிமுதல் முடிவரை நெடிது நோக்கி
“இன்தோள் கழியப் பொன்திகழ் உலகம்
சேர்தி நீ” எனச் சேரலற்கு உரைத்தவன்
மைந்தரை நோக்கி, “நந்தாச் செங்கோல்
அந்தமில் இன்பத்து அரசாள் உரிமை
இளையோற்கு உண்டு” என,
உளைவனன் நனிவெகுண்டு
அழுக்காற்று ஒழுக்கத்து இழுக்கும் நெஞ்சினன்
கண்ணெரி தவழ அண்ணலை நோக்கிக்
கொங்கவிழ் நெடுந்தார்க் கொடித்தேர்த் தானைச்
செங்குட் டுவன்தன் செல்லல் நீங்கப்
பகல்செல் வாயில் படியோர் தம்முன்
அகலிடப் பாரம் அகல நீக்கிச்
சிந்தை செல்லாச் சேண்நெடுந் தூரத்து
அந்தமில் இன்பத்து அரைசாள் வேந்து
ஆயினன்.

II. நூலாசிரியரின் காலம்:- இவ்விலக்கியத்துட் கூறப்படும் கண்ணகி வரலாற்றினை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத் தனார் என்னும் நல்லிசைப் புலவர், இந்நூலாசிரியரான இளங்கோ அடிகட்கு உரைத்தனர்; அதுகேட்ட அடிகள் இந்நூலை இயற்றி அவரைக் கேட்பித்தனர். சாத்தனார் கடைச்சங்கப் புலவராதலின், இளங்கோவடிகளும் கடைச்சங்க காலத்தவர் என்பது பெறப்படுகிறது.

இனி, இலங்கைநாட்டு வரலாற்றினை விளக்கும் மகா வம்சம் என்ற நூல் இற்றைக்குச் சற்றேறக்குறைய 1800 ஆண்டுகட்குமுன் இலங்கையைக் கயவாகு என்றொரு மன்னன் ஆட்சிபுரிந்தான் என்று கூறுகின்றது. அவனுக்குப் பின் எண்Qறு ஆண்டுகள் கழிய, வேறொரு வேந்தன் கயவாகு என்னும் அப்பெயருடன் இலங்கையை ஆண்டனன் என்றொரு செய்தியும் தெரிகிறது. இச்சிலப்பதி காரமும் சேரன்செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழி பட்டபோது, கயவாகு என்னும் இலங்கை வேந்தன் ஒருவன் வந்திருந்து வழிபட்டு வரம்பெற்றான் என்று கூறுகிறது. இவ்வேந் தனுடன் நூற்றுவர் கன்னர் என்னும் வடநாட்டு அரசர் பெயரும் இச்சிலப்பதிகாரத்திற் காணப்படுகிறது. அவர்கள் வடநாட்டு வரலாற்றுட் காணப்படும் சதகரணிகள் என்பர். அவர் காலம் கி.பி. 77-ம் 133 மாகும். ஆகவே, இவர் காலத்துக்கயவாகு முதற் கயவாகுவே என்பது தெற்றென விளங்குகிறது. எனவே, இளங் கோவடிகள் காலம் முதற்கய வாகுவின் காலமான கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும் என்று கொள்ளப்படுகிறது.

இனி, வேறு சிலர் இச் சிலப்பதிகாரக் காலம் மூன்றாம் நூற்றாண்டு என்றும், வேறுசிலர் ஆறாம் நூற்றாண்டு என்றும் கூறுவர்.

இக் கூற்றுக்களை நோக்கின், இப் பேரிலக்கியத்தின் கால ஆராய்ச்சி இன்னும் முற்றுப்பெறாதிருத்தல் தெரிகிறது. இது நன்கு தெளிவாகி வரையறுக்கப்படுந் துணையும், இளங்கோவடிகள் இற்றைக்குச் சற்றேறக்குறைய ஆயிரத் தெண்Qறு யாண்டு கட்கு முன் இருந்தவர் என்று கோடல் சிறப்புடைத்தாம்.

III. நூலாசிரியரின் சமயம்:- இவர் காலத்தே நம் தமிழ் நாட்டில் இந்திரன் முதலிய சிறுதெய்வ வழிபாடும், வேள்வி செய்தலுமாகிய வைதிக சமயமும், புத்த சமணசமயங்களும் பரவி இருந்தன. தமிழ் நாட்டிற்கே உரிய சிவ வழிபாடாகிய - இக்காலத்தே சைவம் எனப்படும் தமிழ்ச் சமயமும் இருந்து வந்தது. இளங்கோ வடிகள் இச்சமயங்களிடத்தே காழ்ப்புச் சிறிதுமின்றி, அவ்வவற்றின் தகுதியினைத் தக்காங்கு அறிந்
    திருந்தனர். அவற்றைக் கூற வேண்டு மிடங்களில், அவ்வற்றிற்
    குரியவர் போலவே கூறுவது கொண்டு, இவரைச் சமணர் என்பாரும், வைதிக சமயத்தவர் என்பாருமாகப் பல திறத்தர் உளராயினர். ஆயினும், இவரைச் சைவரென்றே துணியுமாறு டாக்டர் உ.வே. சாமிநாதையர் கூறுகின்றார். அஃதாவது:

“கால்கோட்காதையில், செங்குட்டுவன் இமயம் செல்லப் புறப்பட்டபொழுது, “நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி, உலகுபொதியுருவத் துயர்ந்தோன் சேவடி, மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து, இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு” எனவும், “ஆடக மாடத்து அறிதுயிலமர்ந்தோன், சேடங்கொண்டு சிலர் நின்று ஏத்தத், தெண்ணீர் கரந்த செஞ் சடைக்கடவுள், வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின், ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கினன்” எனவும், செங்குட்டு வனை நோக்கி இமயத் தினின்றும் வந்த முனிவர்கள் கூறியதாகச் “செஞ்சடை வானவன் அருளினில் விளங்க, வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்” எனவும், வரந்தருகாதையில், மாடலன் கூறியதாக “ஆனேறு ஊர்ந்தோன் அருளினில் தோன்றி, மாநிலம் விளக்கிய மன்னவனாதலின்” எனவும் இவரே (இளங்கோ வடிகளே) கூறியிருத் தலாலும், இவர் அவனுடைய (அச்செங்குட்டு வனுடைய) தம்பியாதலாலும், இவரது சமயம் சைவமென்று தோற்றுகின்றது.”

IV. நூல் வரலாறு:- இளங்கோ அடிகள் துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னும் தவவிடுதியில் உறைந்து வந்தனர். அவர்பால், ஒருகால், தண்டமிழாசானாகிய சீத்தலைச் சாத்தனார் வந்திருந்தார். அப்போது குறவர் பலர் கூட்டமாக வந்து, தமது குன்றத்தே நிற்கும் ஒரு வேங்கை மரத்தின் அடியில் கண்ணகியார் வந்து நின்று ஆங்கு அப்போது விண்ணவர் கொணர்ந்த வான வூர்தியில் ஏறி விண்ணுலகிற்குச் சென்றதைத் தாம் கண்டதாகக் கூறினர். அதனைக் கேட்ட அடிகள் பெருவியப்புக் கொள்ள, சாத்தனார், “யான் அறிகுவன் அதுபட்டது” என்று கூறலுற்று, கண்ணகியின் வரலாறு முற்றும் எடுத்துரைத்து, கண்ணகி மதுரையைத் தீயூட்டிய போது மதுராபதி அவள் முன் தோன்றி அவள் பழம் பிறப்பையுணர்த்தி, ‘இன்றைய பதினான்காம்நாள் நின் கணவனை வானவர் வடிவில் காண்பாய்’ என்று சொல்லிற்று; அதனை யான் கேட்டேன்” என்றார். கேட்டதும் அடிகள் மனமகிழ்ந்து.

“ அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்,
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்”

என்று மொழிந்தனர். அதற்கு அச் சாத்தனார் “இந் நிகழ்ச்சி முடிகெழு வேந்தர் மூவர் நாட்டினும் நிகழ்ந்த தாதலால், அவ்வேந்தர் குலத்து அடிகளாகிய நீரே இதனை அருளுக” என்றார். அவ்வாறே, அடிகள் இச்சிலப்பதிகாரப் பேரிலக்கியத்தைச் செய்தருளினர். பின்பு, இதனை அடிகள் சொல்லச் சாத்தனார் கேட்டனர்.

V. நூற்பொருள்:- இச்சிலப்பதிகாரம் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்று மூன்று காண்டங் களாகப் பகுத்தோதப்பெற்றுள்ளது. கண்ணகியார் வரலாற்றுள், சோழநாட்டில் நிகழ்ந்தன புகார்க் காண்டத்தும், பாண்டி நாட்டில் நிகழ்ந்தன மதுரைக்காண்டத்தும், சேரநாட்டில் நிகழ்ந்தன வஞ்சிக் காண்டத்தும் கூறப்படுகின்றன. புகார் என்பது காவிரிப் பூம்பட்டினம்; இது சோழநாட்டிற்குத் தலைநகர். மதுரை பாண்டி நாட்டின் தலைநகரம். வஞ்சி சேரநாட்டின் தலைநகரம். வஞ்சி நகரமென்பது, இப்போது கோயமுத்தூர் சில்லா விலுள்ள கரூர் என்பாரும், மலையாளத்திலுள்ள அஞ்சைக் களம் என்பாருமாகப் பலதிறத்தர் ஆராய்ச்சியாளர். வஞ்சிக் காண்டத்து வரும் பேரியாறும், குறவர் செயலும், பிறவும் நோக்கின், வஞ்சிநகர் இக்காலத்துக் கரூர் என்று துணிதற்கு இடந்தரவில்லை. இதனை ஈண்டு விரிப்பிற் பெருகும்.

1.புகார்க்காண்டம்:- புகார் நகரத்தே, கோவலனும் கண்ணகியும் பெற்றோர் உவப்பத் திருமணம் புணர்ந்து மனையறம் செய்து வருகின்றனர். அந்நகரத்து நாடகக்கணிகையான சித்திரா பதியின் மகள் மாதவி, ஆடலும் பாடலும் வல்லளாய் அழகு மேம்பட்டுத் திகழ்கின்றாள்; அவள் தன் நாடகக் கலைத்திறத்தைச் சோழன் கரிகாற் பெருவளத் தானுக்குக் காட்டக் கருதி அரங்கேற்று கின்றாள். அவளது கலைநலங் கண்ட கரிகாலன் “ஆயிரத்தெண் கழஞ்சு பொன் அவட்குத் தலைவரிசை” என அருள்செய்கின்றான். அச்செய்தி யறிந்த கோவலன், அவட்கு அப்பொன்னைப் பரிசமாகத் தந்து, அவள் மனையை யடைந்து அவள் பான்மையனாகித் தன் மனையை மறந்து ஒழுகுகின்றான். மாதவி அவனொடு கூடி அந்திமாலையின் இன்பம் நுகர்ந்து நகரத்தார் இந்திரவிழா அயர, தன் ஆடல் பாடல்களால் அதனைச் சிறப்பிக்கின்றாள். விழாக் கழித்த உவாநாளில் மக்கள் கடலாடச் செல்கின்றனர். மாதவியும் கோவலனும் கடற்கரைக்குச் சென்று, புன்னை நீழற் புது மணற் பரப்பில் இனிதிருக்கின்றனர்; அப்போழ்து, வசந்தமாலை யென்னும் தோழி, யாழொன்றை மாதவியின் கையிற் கொடுக்க, அதனை அவள் கோவலன்பால் தந்து பாடவேண்டுகின்றாள்;அவனும் தான் ஒன்றின்மேல் மனம் வைத்துக் காவிரிபற்றியும் கடற்கானல் பற்றியும் பல்வகை வரிப் பாட்டுக்களைப் பாடுகின்றான். பாட்டைக் கேட்ட மாதவி, ஊழ்வினையால், அவன் வேற்றுக் குறிப்புடன் பாடினா னெனப் புலந்தாள் போல் அவ்யாழைத் தான் வாங்கி, வேறு குறிப்புத் தோன்ற இசைக் கின்றாள். அக்குறிப்புணர்ந்த கோவலன் நெஞ்சிற் புலந்து அவளை நீங்கித் தன் மனையை அடைகின்றான். மாதவியோ, அவன் பிரிவாற்றாது பெருந்துயர் எய்துகின்றாள்.

இதுநிற்க, கோவலன் பிரிவாற் பெருந்துயர் உழந்து, கற்புநெறி வழுவாது, மனையறம் ஓம்பிவந்த கண்ணகி, தீக்கனா ஒன்று கண்டு நெஞ்சுகலுழ்ந்து தன் தோழி தேவந்தியுடன் சொல்லாடியிருக் கின்றாள். கோவலன் அவள்பாற் போந்து,

“ சிலம்பு முதலாகச் சென்ற கலனோடு
உலந்தபொருள் ஈட்டுத லுற்றேன் மலர்ந்தசீர்
மாட மதுரை யகத்துச் சென்று,”

என்னோடு வருக” என்று மொழிகின்றான். “அவன் வரம்பு இறத்தல் அறம் தனக்கு அன்மையின்” கண்ணகியாரும் உடன் செல்ல இசைகின்றனர். இருவரும் விடிவதற்குள் புகார் நகர் நீங்கி, மதுரை நோக்கி நடந்து செல்கின்றனர். வழியிற் கவுந்தி யடிகளின் துணை அவர்கட்குக் கிடைக்கின்றது. அவருடன் செல்லும் இருவரும் புனல் நாடு நல்கிய இயற்கைக்காட்சியின் இன்பத்தை ஆர நுகர்ந்துகொண்டே உறையூரை அடைகின்றனர்.

2.  மதுரைக் காண்டம்:- உறையூரை யடைந்த மூவரும் ஆங்கிருந்த அருகன் கோயிலைச் சார்ந்து சமண முனிவர்களைக் கண்டு அன்றைய பகற் போதினைப் போக்கி, மறுநாள் மதுரையை நோக்கிச் செல்லத் தொடங்குகின்றனர்; வழியில் மறையவன் ஒருவனைக் காண்கின்றனர். அவன் கோவலனுக்கு மதுரைக்கு ஏகும் நெறியின் திறத்தை விரியக் கூறுகின்றான். பின்னர், தெய்வம் ஒன்று போந்து, மாதவியின் தோழிபோல் உருக்கொண்டு நின்று, கோவலனை மருட்ட முயல்கின்றது. அவன் ஒரு மறைமொழி யோதி அத் தெய்வ மயக்கைப் போக்குகின்றான். வேனில் வெப்பம் மிகுகின்றது. கோவலன் கவுந்தி யடிகட்கும் கண்ணகிக்கும் நீர் கொணர்ந்து தருகின்றான். பின்பு மூவரும் ஐயை கோட்டமடைந்து ஆங்கே ஒரு புறத்தே தங்குகின்றனர்.

அக்காலத்தே, அக்காட்டில் வாழ்ந்த வேட்டுவர் தமக்கு வேட்டம் வாய்த்தல் வேண்டி, ஐயைக்கு வழிபாடு செய்ய வருகின்றனர். அவருள் ஐயையின் கோலத்தில் வந்த சாலினி, தெய்வமருள் கொண்டு கண்ணகியைப் பார்த்துப் பலபடப் பாராட்டுகின்றாள். கண்ணகி நாணி நிற்ப, அவ்வேட்டுவர் பல்வகைப் பாராட்டுகளைப் பாடிக் கூத்தாடுகின்றனர்.

பின்னர் மூவரும் பார்ப்பனர் உறையும் ஓர் ஊரை அடை கின்றனர். அவர்களை ஓரிடத்தே இருத்திக் கோவலன் தன் காலைக் கடன்களைக் கழிக்கச் செல்கின்றான். சென்ற விடத்தே கவுசிகன் என்னும் பார்ப்பனன் மூலம். மாதவி ஆற்றாது விடுத்த ஓலை காண்கின்றான். அதனையே தன் பெற்றோர்க்கு எழுதிய ஓலையாக விடுக்கின்றான். பின்பு அம்பணவர் என்னும் இசைப்பாணர் காட்டிய நெறியால் மதுரை அண்மையில் இருப்பதை அறிகின்றான்.

அன்றைப் பகற்போது கழிதலும் மூவரும் மதுரை மூதூரையண்மி, வையை யாற்றைக் கண்டு, அதன் கரை வழியே சென்று, மதுரைப் புறஞ்சேரியை அடை கின்றனர். அங்கே மாதவர் உறையும் தவப் பள்ளியில் கவுந்திபால் கண்ணகியை விடுத்துக் கோவலன் மட்டில் மதுரை நகர்க்குட் புகுந்து பல்வேறு தெருக்களையும் கண்டு பெயர் கின்றான். பின்பு, மாதரி என்னும் ஆய்ச்சியொருத்தி அங்கே வருகின்றாள். அவளைக் கண்ட கவுந்தியடிகள், கண்ணகியை அவள் பால் அடைக்கலப் படுத்த, அவள் கண்ணகியையும் கோவலனையும் தன் ஆயர் சேரிக்கு அழைத்துச் சென்று தன் மனையில் ஒரு புறத்தே இருக்கச் செய்கின்றாள். கண்ணகியார் இனிய உணவு சமைத்துக் கோவலனை உண்பிக்கின்றார்.

உணவு கொண்டபின் கோவலன் கண்ணகிபால் விடை பெற்றுக்கொண்டு அவரது சிலம்பொன்றை விற்கும் கருத்துடன் மதுரைக் கடை வீதியில் சென்று பொற் கொல்லன் ஒருவனைக் காண்கின்றான்; அவன் சூழ்ச்சியால் அரசன் முறைகெட, கோவலன் கொலை செய்யப்படுகின்றான்.

ஆய்ச்சியர் சேரியில் தீக்குறி நிகழக் கண்டு அவர்கள் குரவை யயர்கின்றனர்; அவர்களால் கோவலன் கொலையுண்ட செய்தி கண்ணகியாருக்குத் தெரிகிறது. உடனே, திடுக்கிட்ட அவர், ஞாயிற்றை வினவிக் கோவலன் குற்ற மிலனாதலைத் தெளிந்து, கோவெனக் கதறியாற்றிக் கொண்டு ஊர்க்குட்புகுந்து, கொலைக்களம் அடைந்து அங்கே கோவலன் உடல் துணிபட்டுக் கிடப்பது கண்டு பெருவருத்த முற்றுப் புலம்பி அவ்வுடலைத் தழுவுதலும், அவன் எழுந்து “ஈண்டே இருக்க” எனப் பணித்து விண்ணகம் செல்கின்றான். தீராத் துயரத்தால் மனம் திண்ணியராகிய கண்ணகியார், பாண்டியன் கோயிலுக்கு வந்து அவன்முன் வழக்குரைத்துக் கோவலன்பால் குற்றமின்மையை மெய்ப்பிக்கப் பாண்டியன் தனது ஆராயாமை யுணர்ந்து ஆவி விடுகின்றான்; அவன் மனைவியும் உடன் உயிர் துறந்தாள். உடனே, கண்ணகியார் வெளிப் போந்து தமது இடப்பக்க மார்பைத் திருகி நகர்மீது எறிகின்றார்; மதுரை மூதூரில் பெருந்தீ எழுகின்றது.

மதுரையை எரித்தும் செற்றம் தணியாது திரிந்த கண்ணகியை மதுராபதி என்னும் தெய்வம், கோவலனது பழம்பிறப் புணர்த்தி, “இன்றைய பதினாம்காம் நாளில் நீ நின் கணவனை வானவர் வடிவிற்கண்டு கூடுவை” என்று சொல்லுகின்றது. கண்ணகியார் பின்பு ஐயை கோயிலையடைந்து, தன் கை வளையை உடைத் தெறிந்துவிட்டு வையைக் கரை வழியே சென்று திருச்செங்கோடு என்னும் இடத்தை யடைந்து ஒரு வேங்கை மரத்தின்கீழ் நிற்கின்றார். பதினான்கு நாட்களும் கழிந்தன. விண்ணவர் வந்து தாம் கொணர்ந்த வானவூர்தியில் கண்ணகியாரை ஏற்றிக்கொண்டு, தம் விண்ணாடு செல் கின்றனர்.

3.  வஞ்சிக் காண்டம்:- கண்ணகியார் விண்ணாடு ஏகியது கண்ட வேடுவர், அவ்விடத்தே அவரைப் பரவித் தெய்வம் கொண்டாடி மகிழ்கின்றனர். இஃதிவ்வாறாக, சேரன் செங்குட்டுவன் இலவந்தி வெள்ளி மாடத்தில் தேவியோடு எழுந்தருளியிருக் கின்றான். ஒரு நாள் மலைவளம் காணவிரும்பித் தேவியும் உரிமைமகளிரும் அரசியற்சுற்றமும் உடன் வரச் சென்று பேரி யாற்றங் கரையை யடைந்து ஓரிடத்தே தங்குகின்றான். அவனைக் காணவிரும்பிய குறவர் யானைக்கோடும், அகிலும், கவரியும் பிறவும் கொணர்ந்து வழிபட்டுக் கண்ணகி விண்ணுலகு புக்க செய்தியை விளம்பு கின்றனர். அங்கே, அப்போது, உடனிருந்த தண்டமிழ்ப் புலவோராகிய சாத்தனார், கண்ணகியின் வரலாறு முற்றும் விரிவாக எடுத்தோதி வாழ்த்துகின்றனர். பின்பு, குட்டுவன், அவரும் பிறரும் கேட்ப, அரசியலின் அருமையை யுரைத்துத் தன் தேவியை நோக்கி, “பாண்டிமாதேவியோ, கண்ண கியாரோ, வியத்தற்கு உரியோர் யாவர்?” என்று வினவ, அரசமாதேவியாகிய வேண்மாள், “கண்ணகியாரைப் பரவுதலே வேண்டுவது” என்று கூறுகின்றாள். அதனைச் செங்குட்டுவன் உடன்பட்டு நோக்க, அவனுடைய அமைச்சர், “கண்ணகியின் படிமம் சமைத்தற்குப் பொதியிலிலாவது இமயத்திலாவது கல்கொணர்ந்து காவிரியிலாதல் கங்கையிலாதல் நீர்ப்படை செய்தல் தகவுடைத்து” என் கின்றனர். செங்குட்டுவன், “இமயத்துக் கல்கொண்டு கங்கையில் நீர்ப் படை செய்தல் சீரிது” எனச் செப்பலும், அமைச்சர் உடன் பட்டுத் தகுவன கூற, வடநாடு செல்வது குறித்து வஞ்சி நகர்க்கண் முரசு அறையப் படுகின்றது.

இமயச் செலவு கருதிய செங்குட்டுவன் கணிகள் மொழிந்த நன்னாளில் புறப்படுகையில், வடநாட்டு அரசரான கனக விசயரென் பார் தமிழரசரை இகழ்ந்தனரென்று ஒரு செய்தி வரக் கேட்டுச் சினம் மிகுந்து, தான் கொணரக்கருதும் சிலையை அக்கனகவிசயர் தலைமேலேற்றிக் கொணர்வதாக வஞ்சினம் கூறிப் புறப்பட்டுச் செல்கின்றான். அவற்கு நட்பரசர்களான நூற்றுவர் கன்னர் அவனை வரவேற்றுக் கங்கையைக் கடத்தற்கு ஓடம் அமைத்துத் தருகின்றனர். கங்கையை இனிது கடந்து சென்ற செங்குட்டுவன், தன்னை யெதிர்த்த கனக விசயரை வென்று, அவர்கட்குத் துணை யாய் வந்து தோற்றோடிய பிற அரசர்களையும் பற்றி வருமாறு வில்லவன் கோதை யென்பானை ஒரு பெருஞ் சேனையுடன் செலுத்துகின்றான். தான் இமயத்திலிருந்து, வேண்டும் சிலை யொன்றை வருவித்துக் கனக விசயர் முடித்தலையில் ஏற்றிக் கங்கையில் நீர்ப்படை செய்து தன் வஞ்சினம் முடிக்கின்றான்.

அக்காலையில் மாடலன் என்பான் குட்டுவன்பால் வந்து, கோவலன் வரலாறும், பாண்டியனுக்குப் பின் இளங்கோ வேந்தன் நாடாளும் திறமும் கூறுகின்றான். அவற்குக் குட்டுவன் ஐம்பது துலாம் பொன்னை நிறுத்துத் தந்து, கனகவிசயரை ஏனைத் தமிழரசர் கட்குக் காட்டி வருமாறு நீலன் முதலிய தானைத் தலைவர்களைப் பணிக்கின்றான். சின்னாளில் தானும் புறப்பட்டு, இடையே இருந்த நாடுகளின் பல்வகை வளங்களையும் கண்டு மகிழ்ச்சியுடன் வஞ்சி மாநகர் வந்து சேர்கின்றான்.

கனக விசயரைக் கொண்டு சென்ற நீலன் முதலியோர் திரும்பப் போந்து, “அஞ்சியதனால் மாறுவேடம் பூண்டு ஓடிய இவரைப் பற்றிவருதல் தூய வீரமன்று எனச் சோழரும் பாண்டி யரும் இகழ்கின்றன.” ரென்று கூறுகின்றனர். அது கேட்டலும் செங்குட்டு வனுக்குச் சினத்தீ மூண்டு எழுகின்றது. அருகே, ஆங்கு வந்திருந்த மாடலன், இளமை, யாக்கை, செல்வம் முதலியவற்றின் நிலையாமையை எடுத்தோதி வேள்விசெய்து உயர்நிலை யுல கத்துக்கு உறுதிசெய்து கோடலே தக்கதென மொழிந்து அவ் வெகுளித்தீயைத் தணிக்கின்றான். செங்குட்டுவன், மாடலனுக்கு வேள்விக்கு வேண்டியவற்றை உதவுமாறு ஏற்பாடுசெய்து, கண்ணகி யாருக்குக் கோயில் எடுப்பித்து, இமயத்துச் சிலையாற் செய்த கண்ணகிப் படிமத்தைக் கோயில் கொள்ள நிறுவிச் சிறப்புப் பலவும் செய்து வழிபாடு ஆற்றுகின்றான்.

சில நாட்கள் கழிகின்றன. கோவலன் மாண்டதை மாடலன் சொல்லக்கேட்டு அறிந்த தேவந்தியும், கண்ணகியின் செவிலித் தாயும், அடித்தோழியும் மதுரைக்கு வந்து, மாதரி மகளான ஐயையைக் கண்டு அவளுடன் வையைக் கரை வழியாக மலைநாடு வருகின்றனர். அங்கே கண்ணகியாரின் கோயிலைக் கண்டு, அங்கிருந்த செங்குட்டுவனுக்குத் தம்மை இன்னாரென்று தெரிவித்துக் கண்ணகியின் பிரிவாற்றாது வருந்திப் புலம்புகின்றனர். அப்பொழுது, கண்ணகியார் தெய்வவடிவிற் போந்து அவர்கட்குக்காட்சி வழங்கிச் செங்குட்டுவனை வாழ்த்தி மகிழ்விக்கின்றார். அவ்விடத்தே, கண்ணகி, கோவலன் என்ற இருவருடைய நற்றாயரும் மாதரியும் என்ற இவர்தம் பிறப்பு வரலாறு வெளியாகின்றது. மாதவிக்கும் கோவலனுக்கும் பிறந்த மகளான மணிமேகலை துறவுபூண்டதும் அங்கே தேவந்தியால் சொல்லப்படுகிறது. அங்கே வந்திருந்த ஆரியமன்னரும் மாளவ மன்னரும், இலங் கைக் கயவாகு வேந்தனும் தம் நாட்டில் கண்ண கியைக் கோயில் கொண்டு அருளுமாறு வேண்டி வரம்பெற்றுச் செல்கின்றனர்.

இந்நூலாசிரியரான இளங்கோவடிகளும் கண்ணகி கோயிற்குச் செல்கின்றார். அங்கே இவர்க்கும் இவரது முன் பின் நிகழ்ச்சி தெரிவிக்கப்பெறுகிறது. முடிவில், சோழவேந்தனான பெருநற் கிள்ளியும் கயவாகு மன்னனும் தத்தம் நாட்டில் கண்ணகியாருக்குக் கோயிலெடுத்து வழிபாடு செய்கின்றனர். பாண்டி வேந்தனும் கண்ணகி கோயிலில் ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டு வழிபட்டான் என்று சொல்லப்படுகிறது.

VI. நூற்பயன்:- ஒரு நூலைச் செய்யும் புலவன், தான் செய்யும் நூலைப் படிப்பவர், படிப்புக்காகச் செலவிடுங் காலம் அவர் வாழ்நாளின் ஒரு பகுதி யென்பதை நன்கு உணர்ந்து, அப்பகுதி நல்லமுறையில் செலவாதல் வேண்டும் என்னும் குறிக்கோள் உடையவனாவான். அதனால், அவன் தான் எழுதும் நூலின் நோக்கம் இன்னதெனத் தொடக்கத்தே சுட்டிக்காட்டுதல் சிறந்த தொரு கோட்பாடாகும். இது குறித்தே, நூற்குப் பாயிரமாவன வற்றுள் நூற்பயன் என்பதை ஓர் இன்றியமையாத உறுப்பாகச் சான்றோர் வரையறுத்தனர்.

இந்நெறியை நன்குணர்ந்த சான்றோராதலின், இந்நூலாசிரியரான இளங்கோ அடிகள், தொடக்கத்தே, தாம் இந்நூலைச் செய்வதன் நோக்கம் இதுவென்பாராய்,

“ அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்,
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்”

(சிலப் - பதிகம்)
என்று எடுத்தோதுகின்றார். “சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும்” என்பதனால், இவர் தாம் பாடும் நூற்குப் பெயர், “சிலப்பதிகாரம்” என்பது என்று கூறுதல் காண்க.

இவ்வாறு நன்னெறி காட்டித் தொடங்கிய இவர், தமது நூலின் ஈற்றிலும் வறிதே முடித்தாரல்லர். ஆங்கும் பல நன்னெறி களை வற்புறுத்தி யோதுகின்றார்.

“ தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்,
பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்; தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;
பொய்க்கரி போகன்மின்; பொருள்மொழி நீங்கன்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர்மனை அஞ்சுமின்; பிழையுயிர் ஓம்புமின்;
அறமனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும் களவும் காமமும் பொய்யும்”
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்;
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா;
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது.
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்;

என்று இவ்வாறு கூறுகின்றார். இவற்றால், இவர் தமது நூல், படிப்போர்க்கு அறிவுநலமும், ஒழுக்கநலமும், அறவுணர்வும், பெருக வழங்கும் பேரிலக்கியமாய்த் திகழ்தல் வேண்டு மென்ற குறிக் கோளுடன் அதனைச் செய்துள்ளார் என்பது தெளியப்படும்.

VII. நூல்நுவலுந் திறம்:- தன் உள்ளக் காட்சியிற் புலப்படும் கருத்துக்களை உள்ளவாறே விளங்கவுரைப்பதால் மட்டும் ஒரு புலவனது புலமை ஏற்றமெய்தாது; தான் உணர்த்தக் கருதுவன வற்றை நன்கு ஆராய்ந்து பலநெறிப் படப் பகுத்தும், தொகுத்தும், செம்மை செய்து இலக்கண வரம்பு கடவாது உரைக்கும் மாண்பே, புலவனது புலமை நலத்துக்குச் சீரிய குறியாகும் என அறிஞர்* கூறுவர். அது நம் அடிகளார்பால் மிகச் சிறந்து நிற்கிறது என்றற்கு ஒன்று காட்டுதும்.

காண்டப் பிரிவு
கோவலன் கண்ணகியுடன் வாழ்பவன், மாதவியொடு கூடியிருந்து, பின் அவளின் நீங்கி, தன் மனைவியுடன் மதுரை சென்று கொலையுண்டு இறத்தலும், கண்ணகி, ஆராயாது கொலை புரிவித்த பாண்டியன்முன் வழக்குரைத்துக் கோவலன் பால் குற்றமின்மை காட்டி மதுரைமாநகரைத் தீக்கிரையாக்கி, மலைநாட்டுச் செங்குன்றத்தில் தேவர் கொணர்ந்த ஊர்தியேறி விண்ணுலகு செல்லுதலும், சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபடுதலும் இச்சிலப்பதிகாரத்தின் பிண்டித்த கருப்பொருள் என்பது மேலே கூறிப் போந்த நூற்பொருளால் இனிது விளங்கும்.

இதனை மூன்று காண்டமாக வகுத்துச் சீரிய முறையில் பெயரிட்டு, அடிகள் உரைக்கும் திறம் ஆராய்வார்க்குமிக்க இன்பம் தருகின்றது. தொடக்கமுதல் கோவலன் கொலை யுண்பதுவரை ஒரு காண்டமாகவும், கண்ணகி கோவலனையிழந்து வருந்தி முடிவில் விண்புகுவதுவரை ஒரு காண்ட மாகவும், செங்குட்டுவன் இவ் வரலாற்றினையறிந்து கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபடுவது வரை ஒரு காண்டமாகவும் வகுத்து ஓதலாம்; அவ்வாறு ஒதியவழியும், பொருட் பாகுபாடு பொலிவு குன்றாது.

இனி, இதனையே, தொடக்கமுதல் கோவலன் இறப்பது வரை அவனது செயலே மிக்கு நிற்றலால், அவன் பெயரால் ஒரு காண்டமும், அவன் இறந்தது முதல் விண்புகுமளவும் கண்ணகியார் செயலே மிக்குச் சிறத்தலால் அவர் பெயரால் ஒரு காண்டமும், இவ்வரலாறு கேட்டதுமுதல் கோயிலெடுத்து வழிபடுதல்வரைச் சேரன் செங்குட்டுவன் வெற்றிச் சிறப்பும் பிறவும் மேம்பட்டு நிற்றலின் அவன் பெயரால் ஒரு காண்டமும் வகுத்தோதினும் பாகுபாட்டு நெறி பிழையுறாது.

இக்காட்டிய நெறியேயன்றி வேறுதிறத்தால் பகுத்தோதினும் பகுப்பு முறையேயாகும். இவ்வாறு, நெறி பல இருக்கவும், இளங்கோவடிகள், புகார்க்கண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக் காண்டம் எனப் பகுத்துக்கொண்டிருக்கும் முறையொன்றே அவரது உயர்வற உயர்ந்த புலமைக்குச் சீரிய சான்று பகருகின்றது. இவர் கூறியதுபோலப் புகார்க் காண்ட மென்னாது கொலைவினைக் காண்டமென்றோ, கோவலற் காண்டமென்றோ பிறிதொன்றென் றோ வகுத்துப் பெயர் கூறலுறின், அமங்கலத் தலைப்பு, குறையுறக் குறியிடல் முதலிய பல குற்றம் நிகழக் காண்கின்றோம்.

மேலும், ஒரு நிகழ்ச்சி நிகழுமிடத்து, அதற்குரிய வினைமுதல், வினை, செயப்படுபொருள், காலம், இடம், முதலியன இன்றியமை யாது ஆராயப்படும். இதனோடு, இந்நிகழ்ச்சிதானும், ஏதுவும் பயனுமாக வரும் பல உள்நிகழ்ச்சிகளை யுடையதாகவும் இருக்கும். இந் நிகழ்ச்சிகளை ஒரு பெயரால் குறிக்க வேண்டின், மேற்கூறிய வினைமுதல் முதலியவற்றையும் உள் நிகழ்ச்சிகளையும் தேர்ந்து அவற்றுள் யாதேனும் ஒன்றைத் தலைமைபற்றியோ பன்மை பற்றியோ வரைந்துகொண்டு அதனால் பெயர் குறித்தல் மரபாம். அன்றியும், வினைமுதல் முதலியவற்றுள், வினைமுதல் நூற் பெயரிலாதல் பிறவாற்றாலாதல் உணரப்படுமாதலின், வினை, செயப்படு பொருள், காலம், இடம் என்ற இவையே சிறப்பாக வேண்டப்படுகின்றன.

முதற்கண், புகார்க் கண்டத்தை எடுத்துக்கொள்வோம். இதன்கண் நிகழும் வினை, கோவலன் தன் மனையை நீங்கி, மாதவிபால் தங்கிப் பொருளிழந்து, கண்ணகியுடன் மதுரைக்கு ஏகுகின்ற செய்தியாகும். கோவலன் தன் மனையை நீங்குவது மாதவிபால் தங்குதற்கும், அவ்வாறு தங்குதல் பொருள் இழத்தற்கும், அவ் விழப்பு மதுரைக்கு ஏகுதற்கும் ஏதுவும் பயனுமாய் வரும் உள் நிகழ்ச்சிகளாகும். சுருங்கிய சொல்லால் இவ்வனைத்தும் தோன்றக் கூறுதல் ஆகாமையால், வினைவகை தேர்ந்து இக் காண்டத்திற்குப் பெயர் குறித்தல் அமையாதாகின்றது. இவ் வினைகளாற் செயப்படு பொருள், கோவலன் உயிரிழத்தலும், கண்ணகி ஆறாத் துயருழத் தலுமேயாதலின், கேடுபற்றிய முடிபால் பெயர் குறித்தல் தக்கதன்று. இந்நிகழ்ச்சிகட்குச் செலவாகிய காலமும் பலவாதலால், காலத்தாற் பெயர் குறிப்பது ஆகாது. இவ்வெல்லாத் திறங்களையும் நன்கு தேர்ந்தே, அடிகள், இந் நிகழ்ச்சிகள் பலவும் நிகழ்தற்கு இடனாகிய புகார் நகரத்தால், புகார்க்காண்டம் எனப் பெயர் குறித்துள்ளார். இவ்வாறே ஏனைக் காண்டங்களும் பெயர் குறிக்கப்பெற்றுள்ளன.

கோவலன் புகார் நகரத்தில் இருந்து, பின் மதுரை நகரை நோக்கிச் சென்று சோழநாட்டின் நலம்பலவுங் கண்டு கொண்டே உறையூரையடைவது கூறும் பகுதி புகார்க் காண்டம். இதனை உரைக்கப்புகுந்த அடிகள் பத்துப்பகுதிகளாக வகுத்துக் கொள் கின்றார். கோவலன் கண்ணகியொடு பூண்ட திருமண நிகழ்ச்சியும், இருவருமனையறம் புரிதலும், மாதவி ஆடல்பாடல்களில் வல்லளாய் அரங்கேறுதலும், கோவலனைக் கூடியிருக்கும் மாதவியின் இன்பமும், பிரிந்துறையும் கண்ணகியின் இடும்பையும், இந்திரவிழாவும், அதன் இறுதியாய கடலாட்டும். இவற்றால் இன்புற்ற கோவலனும் மாதவியும் பிரிந்து நீங்குவதும், மாதவி படும் பிரிவுத் துயரும், கோவலன் மனமாற்றமும், கோவலன் சென்று கண்ணகியோடு கூடி மதுரைக்குச் செல்ல ஒருப்படுதலும், செல்பவர் சோழநாட்டின் நலமும் கவுந்தியடிகளின் துணையும் பெறுதலும் எனப் பல திறமாய் வரும் நிகழ்ச்சிகளை மங்கல வாழ்த்து முதலாக நாடுகாண்காதை ஈறாகப் பத்துப்பகுதிகளால் உரைக்கின்றார். மாதவி கோவலனுடன் கூடி இன்புறும் நிகழ்ச்சியை அந்திமாலைச் சிறப்புச்செய் காதை, இந்திரவிழவூரெடுத்த காதை, கடலாடுகாதை என்ற மூன்று காதை களிலும், அவள் அக்கோவலனைப் பிரிந்து வருந்தும் நிகழ்ச்சியை வேனிற் காதையிலும் விரித்து உரைக்கின்றார். இஃதேபோல், கண்ணகி கோவலனையிழந்து வருந்திய வருத்தத்தை, துன்ப மாலை, ஊர்சூழ்வரி, வஞ்சினமாலை முதலிய பல பகுதிகளில் விரித்துக் கூறுகின்றார்.

** காதை என்ற சொல்லாட்சி**
இப்பகுதிகளுள் பல காதை என்ற சொல்லால் பெயர் குறிக்கப் படுகின்றன. காதை யென்று பெயர் பெறுவன இருபத்திரண்டாகும். இவை பெரும்பாலும் வேற்றிசை விரவாது செந்தூக்குத் தனிப் பாட்டுக்களாகவே இருத்தலால், ஒரு தனிப்பாட்டையே காதை என்று வழங்குவது முறை யென்று தெரிகிறது. இவ்வாறே மணி மேகலையின் ஒவ்வொரு பகுதியும் காதை யென்றே பெயர் பெற்றுள்ளது. அக்காதைகள் முப்பதையும், அந்நூலாசிரியரான சாத்தனார் முப்பது பாட்டுக்களில் உரைத்தனர் என்று அம்மணி மேகலையின் பதிகம் கூறுகின்றது. “வளங்கெழுகூல வாணிகன் சாத்தன், மாவண் தமிழ்த்திறம் மணிமேகலைத் துறவு, ஆறைம் பாட்டினுள் அறியவைத்தனனென்” என்பது அப்பதிகக் கூற்று. இனி, இச்சிலப்பதிகாரப் பதிகம், “இவ்வாறைந்தும், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” என்றே உரைக்கின்றது. மேலும், மங்கலப் பாட்டும், வரிப்பாட்டும், குரவைப் பாட்டும் பிறவுமாய் வரும் ஏனைய எட்டனுள் பல்வகைப் பாட்டுக்கள் உரையிடையிட்டு இசையும் நாடகவுறுப்பும் விரவிவந்ததனால் அவற்றை ஆசிரியர் இளங்கோவடிகள் “காதை” என்று குறித்தாரல்லர். ஆகவே, ‘காதை’ என்பது வேற்றிசை விரவாது செந்தூக்காய் வரும் பாட்டு என்று பொருள்படுவதொரு சொல்லாக அடிகள் முதலி யோரால் வழங்கப் பெற்றுள்ளது என்பது முடிபாகிறது. இனி, நீலகேசி உரைகாரரான சமயதிவாகரவாமன முனிவர், அடிகள் கூறியவாறே காதையென்னும் சொல்லைச் செய்யுள் என்னும் பொருளில் வழங்கியுள்ளார். “மானொத்த நோக்கி” (நீல. 117) என்னும் செய்யுளில் வரும், “உயிராதிய உள்பொருள்கள்தான் நற்கு உணர்தல் இதுவாம்” என்பதன் கருத்தை, அதனை அடுத்து வரும், “காண்டலு மல்லதே” (நீல. 118) என்னும் செய்யுளுரையில், “மானொத்த நோக்கி என்னும் காதையுள் உயிராதி பொருள் நற்குணர்தல் நன்ஞான மென்றார்” என்று கூறுதலால், செய்யுள் என்னும் பொருளில் காதை என்ற சொல்லை அவர் வழங்குவதைக் காணலாம்.

இனி,டாக்டர். உ. வே. சாமிநாதையரவர்கள், “காதை யென்பதை, இசையோடு பாடப்படுவதாகிய செய்யுள் என்று பொருள்படுகிற ‘காதா’ என்னும் வடமொழிச்சிதைவென்று கொண்டால் யாதோர் இழுக்குமின்று என்று வடமொழியாளர் கூறுவர்” என்று கூறுகின்றார். இசையும் நாடக வுறுப்பும் விரவிவரும் பகுதிகளைக் ‘காதை’ என்று குறியாது, பிறவற்றையே அக்‘காதை’ யென்னும் சொல்லால் அடிகள் குறித்திருத்தலின், அவ்‘வட மொழியாளர்’ கூறுவது, நூலாசிரியர் கருத்துக்கு முற்றும் மாறாக இருத்தலின், அது கொள்ளத்
தக்கதன்று. மேலும், திரு. ஐயரவர்களும், “இதனாலேயே, இந்நூலின் பல பகுதிகள் காதையென்று பெயர் பெற்றன போலும்” என ஐயப்பாட்டுடன் கூறிச் சென்றனர்.

இனி, “வாழ்த்துக் காதை”யுள், பலவகை இசையும் கூத்தும் விரவிய பாட்டுக்கள் வந்திருத்தலால், காதையென்னும் சொல் இசையொடு விரவிய பாட்டுக்கும் உரித்தாம் என்பது அடிகள் கருத்தாமன்றோ எனின், ‘வாழ்த்துக்காதை’ என்பது அடிகள் இட்ட பெயரன்று ஆதலின் அடிகட்கு அது கருத்தன்மை இனிது துணியப் படும். வாழ்த்துக் காதைக்கு “வாழ்த்து” என்பதே பெயரெனப் பதிகம் கூறுகின்றது.

பதிகத்துப் பொருளையும், சிலப்பதிகாரப் பகுதிகளின் பெயரையும் ஆராய்ந்து நோக்கின், காடுகாண் காதை புகார்க் காண்டத்தும், குன்றக் குரவை மதுரைக் காண்டத்தும் இருக்கற் பாலனவாம் என்பாரும் உளர். * இப்பிறழ்ச்சியை ஈண்டு விரிப்பிற் பெருகும்.

VIII. நூற் புணர்ப்பு:- இச் சிலப்பதிகார நிகழ்ச்சி ஆற்றொழுக் காகச் செல்கின்றதனால், இதன் புணர்ப்பு வகையில் மயங்கி நிற்பது ஏதும் இல்லை. கோவலன் கண்ணகி முதலாயினார் பிறப்பு வளர்ப்புக்களில் புனைவுரை ஏதும் இல்லை; அவ்வரலாறுகளை விடுத்து, திருமணம் புணரும் செயலையே எழுவாயாக அடிகள் மேற்கொள்கின்றார். மணத்துக்குப்பின் இருவர்க்கும் மனையறம் இனிது நடைபெறுகிறது. கோவலனைக் கண்ணகியிடமிருந்து பிரித்து மாதவிபால் கூட்டற்குக் காரணமான, மாதவியின் அரங்கேற்றத்தால், அவளை இலக்கியக் காட்சிக்குக் கொணர்கின்றார். மாதவி அரங்கேற்றம், பேரரசனான கரிகாற் பெரு வளத்தானை நமக்குக் காட்டி, அவனால் அவள் பரிசமாலை தரப்பெற்ற சிறப்பினை யுணர்த்துகிறது. கோவலன் “நகர நம்பியர் திரிதரும் மறுகில்” வந்துபடுகின்றான். அவ்விடத்தே மாதவியின் பரிசமாலை அவன் கண்ணுக்கு விருந்து செய்ய, அவன் நிறைபொருள் கொடுத்து வாங்கி மாதவி பால் சென்று சேர்கின்றான்.

ஈண்டுக் கூறற்பாலன கண்ணகியின் பிரிவுத்துன்பமும் மாதவியின் புணர்ச்சியின்பமுமே யாகின்றன. மாதவியை அரங்கேற்றி, கோவலனைக் கூடச் செய்தபின்பு, அக் கூட்டவின்பத்துக்குச் சிறப்புச் செய்வது அந்திமாலையாதலின், அதனை அடிகள் எடுத்தோதுகின்றார். ஓதுமிடத்து மாதவியின் இன்பத்தை முதற்கண் விதந்தோதி, கண்ணகி துன்பத்தைப் பிற்கூறுகின்றார். இருவர் நிலைக்கும் உரிய காலம் அந்திமாலையாதலின், அதனையே வரைந்து கொண்டு, “தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்த, காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ் வெய்த… மல்லல் மூதூர் மாலை வந்திறுத்தது” என்று தொடங்கி, “நிலவுப் பயன் கொள்ளும் நெடு
நிலா முற்றத்துக் , கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரிக் கோலம் கொண்ட மாதவி” என்று மாதவியின் இன்பச் சிறப்புக் கூறி, கண்ணகியின் துன்ப நிலையைச் சிறிது விரித்து, “செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப, பவள வாள் நுதல் திலகம் இழப்ப, தவள வாள் நகை கோவலன் இழப்ப, மையிருங்கூந்தல் நெய்யணி மறப்ப, கையறு நெஞ்சமொடு கலக்க முற்றனள்” என்று கூறுகின்றார். இதற்குப் பின், புது மணம் புணர்ந்து இன்புறுவார்க்கு அவ்வின்பத்தை மிகுவிக்கும் விழாச் செய்தி கூறுவார். ‘இந்திரவிழவூர் எடுத்த காதை’ உரைக் கின்றார். அதன் இறுதிக்கண், பின்னர் நிகழ இருக்கும் பிரிவுக்குத் தோற்றுவாயாக, “கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும், உள்
நிறை கரந்து அகத்தொளித்து நீர் உகுத்தன, எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன” என்கின்றார். கடலாடு காதைக்கண் கோவலன் உள்ளத்தில் தோன்றும் ஒரு சிறு மாறுதலைக் காட்டுகின்றார். அஃதாவது இந்திரவிழாவில், மாதவியின் “ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள, ஊடற் கோலமொடு” கோவலன் இருப்ப மாதவி, அவனுவக்குமாறு தன்னை மிக்க சிறப்புடன் புனைந்து கொண்டு, அவனுடன் கடலுக்குச் செல் கின்றாள். கானற்சோலையில், இருவரும், பாடிய பாட்டு வாயிலாக இருவர்க்கும் கருத்து வேறு
படுகின்றது. கோவலன் மாதவியைப் பிரிந்து நீங்குகின்றான்.

வேனிற் காதையில் கோவலனது மனவன்மையும் அவன் பிரிவாற்றாது துயருறும் மாதவியின் கற்பு மாண்பும் எடுத்தோதி, அவள் வரலாற்றை ஓராற்றால் முடித்துக், கோவலனைக் கண்ணகி பால், ‘கனாத்திற முரைத்த காதை’ யில் சேர்ப்பித்து மதுரைக்குப் புறப்படுவிக்கின்றார். ‘நாடு காண் காதை’யில் கவுந்தியடிகளோடு தொடர்பு எய்துவித்து அவரது தவப்பெருமையும், கோவலன் கண்ணகியிருவரது அருள் நிலையும் தெரிவித்து, உறையூரை அடைவிக்கின்றார்.

இவ்வாறு மதுரைக் காண்டத்து, ‘காடுகாண் காதை’க் கண், வழிகூறும் மறையோன் வாயிலாகப் பாண்டியர் குடிச்சிறப்பும், திருவேங்கடம், திருவரங்கம் முதலியவற்றில் திருமால் எழுந்தருளிய இயல்நலமும் கூறி, ‘வேட்டுவவரி’ க்கண், கண்ணகிக்குப் பின்னே விளைய இருக்கும் துயர்நிலையைக் குறிப்பாகக் காட்டி, ‘புறஞ்சேரி இறுத்த காதை’யில்’ மாதவியின் மாறாக் காதன்மையும், கோவலனுக்குப் பெற்றோர் பாலுள்ள அன்புடைமையும் உணர வைத்து வையை யாற்றின் வனப்பும் மதுரை மூதூரின் மாண்பும் கூறுகின்றார். ‘ஊர்காண் காதை’யில் கோவலன் தனக்கு நேர்ந்த வருத்தத்தை யெண்ணிமயங்க, கவுந்தியடிகள் தகுவனகூறித் தேற்றரவு செய்ய, அவன் தேறி மதுரை மூதூர் சென்று அதன் கடைத் தெரு, வாணிக வளம் முதலியன கண்டு வருகின்றான். ‘அடைக்கலக் காதையில்,’ அடிகள் கோவலனுக்கு மாதரியின் வேளாண் பகுதியின் தொடர்பு எய்துவிக்கின்றார். ‘கொலைக்களக் காதை’யில் பிரிந்திருந்து கூடியபின் கண்ணகி கோவலன்பாலும், கோவலன் கண்ணகிபாலும் கொண்டிருந்த மெய்க்காதற் சிறப்பைத் தெரிவித்து, அவனைக் கண்ணகியை விட்டு நீங்குவித்துக் கொலையுண்டு இறக்கச் செய்கின்றார். இதன்கண் பொற்கொல்லனது களவு வன்மையை அவன் கூறும் களவுநூற் குறிப்பால் இனிது விளக்குகின்றார். ‘ஆய்ச்சியர் குரவை’ தீக்குறி காட்ட, ‘துன்பமாலை’ கண்ணகியின்- கடவுளும் ஏவல் செய்யும் - கற்பு மேன்மை புலப்படுத்த, ‘ஊர்சூழ்வரி’ அவளது ஆறாத்துயர் தெரிவிக்க, ‘வழக்குரை காதை’யால் பாண்டியனது கோடிய அரசு முறைக்குக் கழுவாய் பிறப்பிக்குமாற்றால் அவனையும் வீழ்வித்து, ‘வஞ்சினமாலை’க் கண், கண்ணகியின் தீராத் துயர்ப்பட்ட நெஞ்சம் கொதிக்க அவளைச் சீறிய கற்புடையளாகத் திகழ்வித்து நகரைத் தீக் கொளுவுதல் கூறி, ‘அழற்படுகாதை’யில் அவளது சினத்தீயின் வெம்மை தெரிவித்து, ‘கட்டுரை காதை’யால் அவட்கு எய்திய துன்பத்துக்கு ஏது பழம்பிறப்பில் தோன்றிய வினையாம் என்பது காட்டி நம்மனோர் மனத்தை அமைதி பெறுவிக்கின்றார்.

வஞ்சிக் காண்டத்துக் ‘குன்றக் குரவை’யில், கண்ணகியின் கடவுட்டன்மைக்குரிய இயைபுகாட்டி, ‘காட்சிக் காதை’யால், செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத் துப் படிமம் சமைத்தற்கு இமயம் செல்லும் செலவுக்குத் தோற்றுவாய் பிறப்பித்து, ‘கால்கோட் காதை’யில், செங்குட்டுவனது சிவபத்தியும் வட ஆரிய மன்னர்க்கும் தமிழ் வேந்தர்க்கும் உள்ள போர் மாண்பும் வெற்றிச் சிறப்பும் விளக்கி, கோவலன் நீங்கியபின் புகார் நகரத்தே நிகழ்ந்த பிறவற்றையும் தெரிவித்து, கண்ணகிப் படிமத் திற்குரிய சிலையைக் கங்கையில் நீர்ப்படை செய்தது கூறி, ‘நடுகற்காதையில்’ கண்ணகிக்குக் கோயிலெடுப்பதும், மாடலன் வாயிலாக வேள்வி வேட்டலின் சிறப்பும் பிறவும் விளக்கி, ‘வாழ்த்துக் காதை’க் கண், மாசாத்துவான் துறவும், அவன் மனைவி இறத்தலும், காவற்பெண்டும், அடித் தோழியும், தேவந்தியும் பிறரும் வந்து கண்ணகி கோயிலைக்கண்டு பாராட்டலும் உரைத்து, ‘வரந்தருகாதை’’யில் மணிமேகலை துறவும், செங்குட்டுவன் வரப்பேறும் இளங்கோவடிகளின் வரலாறும் பிறவும் குறிக்கின்றார்.

இனி, இடையிடையே, அடிகள் தொடுத்திருக்கும் உரை நடைகள் மிக்க அழகுவாய்ந்தவை. ஆயினும், அவை, இக்காலத்து நாம் எழுதும் உரைநடை போலாது செய்யுட் போக்கைத் தழுவி யுள்ளன. இது கருதியே இவற்றை உரைப்பாட்டு1 என்று கூறு கின்றனர். இவ்வுரைப்பாட்டுக்களைச் சில இடங்களில் கட்டுரை யென்றும் இந்நூல் வழங்குகின்றது.

இராமாயணம் முதலியவற்றுள் உத்தரகாண்டமென்பது நின்று எஞ்சிய பகுதிகளை உரைப்பதுபோலச், செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபட்டதன்பின் இலங்கை வேந்தனான கயவாகு என்பானும் சோழபாண்டிய வேந்தரும் வழிபட்டதும், மதுரை எரியுண்டபின் நிகழ்ந்த பாண்டிநாட்டு அரசியல் நிகழ்ச்சியும் உரைபெறு கட்டரை2 யென்னும் பகுதி உரைத்து நிற்கின்றது. இதுவும், மேலே கூறிய உரைப் பாட்டு வகையைச் சேர்ந்ததேயாகும்.

IX. இந்நூற்கண் வரும் பெருமக்களின் குணமாண்புகள்

1.  மாசாத்துவான்: மாசாத்துவான் என்னும் பெயர் குடிப் பெயர் என்று அரும்பதவுரைகாரர் கூறவும், அடியார்க்கு நல்லார் இயற்பெயர் என்றே கூறுகின்றனர். இளங்கோவடிகளும், “மாசாத்து வான் என்பான்” என்றே கூறியிருத்தலால், அடியார்க்கு நல்லார் கூறுவதே பொருத்தமாகத் தோன்றுகிறது.

இம் மாசாத்துவான் கோவலனுக்குத் தந்தை; உயர்ந்த குடிப்பிறப்பும், மிக்க செல்வமும் உடையன்; சுற்றம் சூழ வாழும் பெருமாண்பினன். கண்ணகி, பாண்டியன் முன் வழக்குரைத்த போது, இவன் குடிமைச் சிறப்பையேவிதந்து, “ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன்” என்றனள். இவன் செல்வச் சிறப்பு, கோசிகமாணி யென்பான், “இருநிதிக் கிழவன்” என்று கூறியதனால் விளங்கும். முடிவில் கோவலன் இறந்தது கேட்டு இவன் துறவு பூண்டுவிடுகின்றான்.

இனி, கண்ணகியின் தந்தை பெயர் தெரிந்திலது. மாநாய்கன் என்பது இயற்யெரன்று; குடிப்பெயர் என்றே உரைகாரர் கூறு கின்றனர். “மாகவான் நிகர் வண்கை மாநாய்கண்” என்றே அடிகள் கூறி மொழிந்தனர். இவன் தன் மகளுற்றது கேட்டவனாய் ஆசீவகப் பள்ளியில் அறம் கேட்டுத் துறவு பூண்டான்; இவன் மனைவியும் உயிர் துறந்தாள். இவனைப் பற்றி வேறே செய்தியொன்றும் அடிகள் குறித்திலர். கண்ணகியாரின் கற்பு மாண்பே ஓராற்றால் இவன் குடிப் பெருமையை விளக்குதலால், அடிகள் வேறொன்றும் குறியா தொழிந்தார் போலும்!

2.  கோவலன்: இவன் சிலப்பதிகாரத்துக்குத் தலைம களாகிய கண்ணகிக்குக் கணவன். உயர்குடிப் பிறப்பும் செல்வ மிகுதியும் வாய்த்தவன். பிறர்க்குத் தன்னால் இயன்ற உதவிபுரியும் அருளுள்ளம் நிறைந்தவன். மதயானையின் கைப்பட்ட முதுவேதியனைக் காத்ததும், பார்ப்பனியைக் கைவிட்டுச் சென்ற பார்ப்பனன் ஒருவற்கு மிக்க பொருள் தந்து இல்லிருந்து அறம் செய்யச் செய்ததும், மகனை யிழந்து தாயொருத்தியின் வருத்தம் கண்டு ஆற்றாது தன்னுயிரை இவன் கொடுக்கத் துணிந்ததும், பிறவும் இவனுடைய அருளுடை மையைப் புலப்படுத்துகின்றன. கவுந்தியடிகளால் குறுநரியாக்கப் பட்ட இருவர் பொருட்டு, அடிகள்பால், “நெறியின் நீங்கியோர் நீரல கூறினும், அறியாமை யென்றறிதல் வேண்டும்” என்று நினைந்தது இவனது ஈரநெஞ்சின் இயல்பை விளக்குகின்றது.

மேலும், இக்கோவலன் இசைத்துறையிலும் கூத்து வகையிலும் நல்லபயிற்சி யுடையன். கானற் சோலையில் மாதவியுடன் இவன் வரிப் பாட்டுப் பாடியே நீங்கினான். அன்றியும், இவன், மதுரைக்குப் போம்போது இடைவழியில் கோசிகாமணி யென்பானைக் கண்டு, மாதவி தந்த ஓலையையே தன் பொற்றோருக்கும் செலுத்திவிட்டு வருபவன், ஆங்கு வந்திருந்த அம்பணவரைக் காண்கின்றான். அவர்கள் கொற்றவையின் அந்தரி கோலத்தை வியந்து பாடு கின்றனர். அவர்களைக் கண்ட கோவலற்குத் தானும் அவருடன் கலந்து பாடவேண்டும் என்ற விருப்பம் எழுகின்றது. இவன்,

    ஆடியல் கொள்கை அந்தரி கோலம்  

பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து
செந்திறம் புரிந்த செங்கோட்டு யாழின்
தந்திரி கரத்தொடு திவவுறுத்து யாத்து
ஒற்றுறுப் புடைமையின் பற்றுவழிச் சேர்த்தி
உழைமுதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி
வரன்முறை வந்த மூவகைத் தானத்துப்
பாய்கலைப் பாவை பாடற் பாணி
ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டுப்
பாடற் பாணி

(சிலப். 13: 104-113)
கலந்து பாடுகின்றான். இவன் கூத்து வகையில் வல்லுநன் என்பது, மாதவியைக் கடற்கானலிடத்தே பிரிந்து வந்தபின் இவன் கூலமறுகில் இருக்கையில், இவன்பால், மாதவி பிரிவாற்றாது விடுத்த திருமுகத்தை வயந்த மாலை கொணரப் பெற்று, அதனைப் படித்துப் பார்த்தவன், அம்மாதவி “ஆடல் மகளே யாதலின்,” பல்வகைக் கூத்தும் அவட்குப் “பாடு பெற்றன” என்று சொல்லி மாதவி மனைக்குவர மறுத்தபோது அவன் வரிக்கூத்து வகைகளான, கண்கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக் கோள்வரி என்ற எட்டனையும் விரித் தோதுமாற்றால் இனிது விளங்குகின்றது.

இன்ன நலம் பலவும் உடையனாயினும், இக்கோவலன் கண்ணகிபால் தீராக் காதற்காமம் கொண்டு அவளது நலம் புனைந்தும் பாராட்டியும் ஓதுவதை நோக்கின், பெருங் காமத்தான் என்பது புலனாகின்றது. ஒருவரையொருவர் முன்னுறக் காண்டலும், காதல் கொளலும், பின்பு கடி மணம் புணர்தலுமாகிய காதற் காமத்துறை இவன் வாழ்வில் காணப்பட வில்லை. மாதவியிடத்தும் இவனது காதல் உயிரொடு கிடந்து தொடரும் உயர்காதலாக இல்லை. மாதவியின் மாலையை விலைகொடுத்து வாங்கிக் கொண்டு அவள் மனைக்குச் சென்று,

“ மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுத லறியா விருப்பின னாயினன்”

என்றே அடிகள் கூறுகின்றார். மாதவியினின்று பிரிந்த போதும் இவற்கு அவளது தொடர்பு ஒரு வருத்தமும் பயக்கவே இல்லை. கருத்து வேறுளது போலத் தோன்றிய குறிப்பேதுவாக மாதவியை அறவே வெறுத்துப் பேசும் இவன் மனக்குறிப்பு, பின்னர் மாதவியைப் பற்றிப் பேச்சு நிகழுந் தோறும் முற்பட்டுத் தோன்றுகிறது. கொலையுண்டு கிடந்த போது கண்ணகியாரால் உயிர்பெற்று விண்ணுலகு சென்ற போதும், இவன், கண்ணகிக்கு, “உண் கண்ணாய், நீ ஈண்டே இருக்க” என்கின்றான்; இதனால், இவன் கண்ணகிபால் கொண்டிருந்த காதலும் உயர்ந்த காதலாகத் தோன்ற வில்லை. மாதரியின் மனையில் இருந்து, கண்ணகி சமைத்திட்ட உணவுண்டு இனி திருக்கும் போது, கண்ணகியை நோக்கி, “பொன்னே, கொடியே, புனைபூங்கோதாய்” என்பன முதலாகப் பல பாராட்டுரை களை இவன் வழங்குகின்றான். அவை முற்றும் கண்ணகியின் கற்பு மாண்பு கண்டு தெளிந்து பிறந்த வியப்புரையாமே தவிர, காதற் கட்டுரையாகா.

“ குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்,
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோ ரேத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்து என்துயர் களைந்த
பொன்னே, கொடியே, புனைபூங் கோதாய்”

என்ற இக் கூற்று, கோவலன் மனத்தெழுந்த வியப்பும் நன்றி யறிவும் தோன்ற நிற்றல் காண்க.

ஆயினும், தான் செய்த தவற்றினை நன்கு உணர்ந்து வருந்து கின்றான். “தேற்றா ஒழுக்கத்தால் தீநெறிப்பட்டேன்” என்றும்,

“ இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்
சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்
வழுவெனும் பாரேன்”

என்றும் கூறுவன உருக்கமாக உள்ளன.

இனி, இவன் பொற்கொல்லன் சூழ்ச்சியால் காவலருடைய கைப்படுத்தப்பட்ட போதாவது, கொலைக் களத்தாவது ஒன்றும் கூறவேயில்லை. காவலரிடம் பொற்கொல்லன் கள்வர் செயல் பலவும் வகுத்து விரித்து உரைக்கின்றான். அதனைக் கோவலன் அறிந்துமிருக்கலாம். அக்காலை இக்கோவலன் தன்பாற் களவின் மையை இனிது கூறியேனும் இருக்கலாம்; அஃதும் இல்லை. அப்போது தன் நிலைமை யையோ, கண்ணகியையோ, பெற்றோரையோ, கவுந்தியடிகளையோ, யாரையாவது, எதனையாவது நினைந்து சில கூறியிருக்கலாம். அவன்பால் ஒரு பேச்சும் நிகழவே இல்லை. எதிர்பாராவகையால் நிகழ்ந்த இந்நிகழ்ச்சி கண்டு அறிவு மயங்கி நினைவு, சொல், செயல்யாவும் மழுங்கிச் செயலற்று விட்டான் போலும். இன்றேல், ஏதேனும் ஒன்று மொழிந்திருப்பன்; வினைப்பயன் என்றுகூட அவன் எண்ண வில்லை; எண்ணியிருப்பின், அதனையேனும் விதந்து ஓதி யிருக்கலாமே!

2.  மாடலன்: இவன் தலைச்செங்கானம் என்னும் ஊரிற் பிறந்த வேதியன்; நான்மறையும் வல்லோன்; மறை யோதி ஒழுக்கம் நிரம்பியவன். குமரியாடி வருமிடத்தே கவுந்தியடிகளுடன் இருந்த கோவலனைக் கண்டு அளவளாவி, கோவலன் தனக்கு மாதவிபாற் பிறந்த மகட்கு மணிமேகலை யென்று பெயர் வைத்த சிறப்பினை நாமறியச் செய்கின்றான். மேலும், இவனாற் கோவலன் முதுமறை யோன் பொருட்டுக் “கடக்களிறடக்கிய கருணை”யும், பார்ப்பனி யொருத்தியை அவள் கணவனுடன் கூட்டி, “நல்வழிப்படுத்த செல்வ” நிலையும், மகன் பூதத்துக் கிரையா கியதால் வருந்திய தாய் ஒருத்தியின் பொருட்டு, அம் மகனுடைய

“ சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைக்கும்
பற்றிய கிளைஞரிற் பசிப்பிணி யறுத்துப்
பல்லாண்டு புரந்த”

பண்பும் நமக்குத் தெரிகின்றன. கோவலனை இவன் தேற்றுங் கால்,

“ இம்மைச் செய்தன யானறி நல்வினை;
உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது”

என்று கூறுவது இவனது இனிய செஞ்சொல் வன்மையைக் காட்டு
கின்றது. கோவலன் தான் கண்ட தீக்கனவு கூறிய வழி, அதற்குத் தக்க விடை கூறாது வேறு கூறுவது அவனது அறிவின் மேம்பாட்டைக் காட்டுகின்றது.

இனி, செங்குட்டுவன் கங்கைப் பேரியாற்றின் தென் கரையில் ஆரிய மன்னர் அழகுற அமைத்த பாடிவீட்டில் இனிதிருந்தபோது, இம்மாடலன் வந்து அவனைக் காணும் திறம் மிக்க இன்பம் தருவது. கோவலன் மாதவியைப் பிரிந்தது முதல், செங்குட்டுவன் கண்ணகிக்குச் கிலை கொணர்வான் கங்கையிடை நீர்ப்படுத்தது ஈறாகக் கிடந்த வரலாறு முற்றும் உள்ளடக்கிக் கேட்போர் உளம் வியக்குமாறு,

“ வாழ்க எங்கோ, மாதவி மடந்தை
கானற் பாணி, கனக விசயர்தம்
முடித்தலை நெரித்தது”

என்கின்றான். இவனன்றோ “சொல்லின் செல்வன்.” இதனால் குட்டுவன் அவ் வரலாறு முற்றும் அறிய அவாக் கொள்ள, அவன் பின்பு விரித்துக் கூறலுறுகின்றான்.

இவனாற்றான், பின்பு, செங்குட்டுவன், கண்ணகியாரின் முழுவரலாறுமே யன்றி, மாதரி தீயிற் புகுந்ததும், கவுந்தி யடிகள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்ததும், மாசாத்து வான் துறவு பூண்டதும், அவன் மனைவி உயிர் துறந்ததும், மாநாய்கன் ஆசீவகப் பள்ளியில் அறம் பூண்டு துறவு மேற் கொண்டதும் கண்ணகியின் நற்றாய் உயிர்விட்டதும், மாதவி புத்தசமயம் மேற்கொண்டதும் பிறவும் அறிந்து கொள்கின்றான். கோவலன் கொலையால், கோல் வழுவிற்றென உயிர் இழந்த பாண்டியற்குப் பின் வெற்றிவேற் செழியன், பொற்கொல்லர் ஆயிர வரை உயிர்ப்பலி யூட்டி, மதுரை மூதூரில் அரசு கட்டில் ஏறினன் என்ற சொல்லும் மாடலன்,

“ உரைசெல வெறுத்த மதுரை மூதூர்
அரைசுகெடுத்து அலம்வரும் அல்லற் காலைத்
தென்புல மருங்கின் தீதுதீர் சிறப்பின்
மன்பதை காக்கும் முறைமுதற் கட்டிலில்,
நிரைமணிப் புரவி ஓரேழ் பூண்ட
ஒருதனி யாழிக் கடவுட் டேர்மிசைக்
காலைச் செங்கதிர்க் கடவு ளேறினன்என
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்
ஊழிதோ றூழி உலகம் காத்து
வாழ்க எங்கோ வாழியர் பெரிது”

என்பது மிக்க இறும்பூதும் இன்பமும் பயத்தல் காண்க.

பின்பு அச் செங்குட்டுவன், தன் மைத்துன வளவனான கிள்ளி யென்பானது ஆட்சிமுறை எத்திறமென வினவிய போது மாடலன்,

“ வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப
எயில்மூன் றெறிந்த இகல்வேற் கொற்றமும்
குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர,
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க
அரிந்துடம் பிட்டோன் அறந்தரு கோலும்
திரிந்துவே றாகும் காலமும் உண்டோ?
தீதோ இல்லை செல்லற் காலையும்
காவிரி புரக்கும் நாடுகிழ வோற்கு”

என்று உள்ளுதோ றினிக்கும் உரை பகர்கின்றான். அப்போது, பெரு மகிழ்வுற்ற குட்டுவன் தன் நிறையான ஐம்பது துலாபாரம் பொன்னை அம்மாடலனுக்கு அளிக்கின்றான்.

பிறிதொருகால், செங்குட்டுவன் சோழ பாண்டியர் மேல் ஆறாச் சினங் கொள்கின்றான். அப்போது அங்கிருந்த மாடலன், அவன் சீற்றந் தணியுமாறு தகுவன கூறி, மேலும்,

“ அரைச ரேறே! அமைகநின் சீற்றம்;
மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள்
தண்ணான் பொருநை மணலினும் சிறக்க;
அகழ்கடல் ஞாலம் ஆள்வோய் வாழி!
இகழாது என்சொல் கேட்டல் வேண்டும்:
வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு
ஐயைந் திரட்டி சென்றதன் பின்னும்
அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோன் ஆயினை”

என்று தொடங்கி, யாக்கை, செல்வம், இளமை முதலிய வற்றின் நிலையாமை விளங்கக் கூறி,

“ விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்;
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய்! விலங்கின் எய்தினும் எய்தும்;….
ஆடுங் கூத்தர் போல் ஆருயிர் ஒருவழிக்
கூடிய கோலத்து ஒருங்குநின் றியலாது;
செய்வினை வழித்தால் உயிர்செலும் என்பது
பொய்யில் காட்சியோர் பொருளுரை; ஆதலின்…

நீ பெரிய வேள்வி செய்தல் வேண்டும்;

     நாளைச் செய்குவம் அறம், எனின், இன்றே  

கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்;
இதுவென வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்
மூதுநீ ருலகில் முழுவதும் இல்லை”

என்று கூறி முடிக்கின்றான். செங்குட்டுவனும் வேள்வி செய்கின்றான்.

முடிவில், கண்ணகி கோயிற்கு வந்த தேவந்தி, செட்டி மகளிர் முதலியோரால் நிகழ்ந்தவற்றைக் கண்டு செங்குட்டுவன் பெருவியப் பெய்த, மாடலன் அதுவே வாயிலாக, அவனுக்கு அறமுரைக்கக் கருதி, “கோவலன் தாயும், கண்ணகி தாயும் மாதரியும் நல்லறம் செய்யாமையின் செட்டி யொருவனுக்குச் சிறுமகளாயினர்;”

    நற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்,  

அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்
அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்
பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும்
புதுவ தன்றே; தொன்றியல் வாழ்க்கை.”

என்று தெளிவித்து, மீண்டும் அச் செங்குட்டுவனை நோக்கி, “அரசே,

    ஆனேறு ஊர்ந்தோன் அருளின் தோன்றி,  

மாநிலம் விளக்கிய மன்னவ னாதலின்,
செய்தவப் பயன்களும் சிறந்தோர் படிவமும்
கையகத் தனபோல் கண்டனை யன்றே

என்று சொல்லி, அவனை அறத்தாற்றில் நிற்கப் பண்ணு கின்றான்.

4.  செங்குட்டுவன்:- இவன் வரலாறு இந்நூலாசிரியர் வரலாறு கூறுமிடத்தும், மாடலன் செய்தி கூறுமிடத்தும் ஓராற்றால் விளங்குகின்றன. இவன் மறம் மிக்க வேந்தன். இவன் தன் தம்பி இளங்கோவுடன் தந்தைபால் இருக்கும் போது, கணி யொருவன் போந்து, இளங்கோவுக்குள் அர சாளும் குறிப்புண்மை யறிந்து கூறக், கேட்ட மாத்திரையே கண் சிவந்தது. காய் சினம் பொங்கிற்று. தன் உடன் பிறந்து உடன் வளர்ந்து உடனொழுகும் இளங்கோவின் உள்ளப் பான்மையை உணராது இவன் சினங்கொண்டான். இதனை, “அரசாளுரிமை இளையோற் குண்டென உளைவனன் நனி வெகுண்டு அழுக்காற் றொழுக்கத்து இழுக்கும் நெஞ்சினன், கண் எரி தவழ அண்ணலை நோக்கும்” என அடியார்க்கு நல்லார் அறிவிக்கின்றார்.

இதுவேயன்றி, தான் பற்றிக் கொணர்ந்த ஆரியமன்னரை ஏனைச் சோழ பாண்டிய வேந்தர்க்குக் காட்டி வருமாறு விடுப்ப, அவர்களைக் கொண்டு சென்றோர் அவ்வண்ணமே காட்டித் திரும்ப வந்து, “சோழ மன்னனும் பாண்டிய வேந்தனும்”

‘அமர்க்களம் அரசன தாகத் துறந்து
தவப்பெருங்கோலம் கொண்டோர் தம்மேல்
கொதியழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்
புதுவது என்றனர்’

என்று கூறினர். அது கேட்டலும், “தாமரைச் செங்கண் தழல் நிறம் கொள்ள” அச் செங்குட்டுவன் கொண்ட சினம் சொல்லும் தரத்ததன்று; அக்காலை மாடலன் ஆங்கிருந்து தகுவன கூறி அவன் கருத்தை மாற்றாதிருந்திருந்தால், இவ் வரலாறே வேறு வகையாகச் சென்றிருக்கும்.

தமிழ் வேந்தரை ஆரிய மன்னர் இகழ்ந்து பேசினர் என மாதவர் சிலர் கூறக் கேட்டதும் செங்குட்டுவனுக்கு உண்டாகிய சினம்; காலம் கருதி அமைந்து கிடந்து. கண்ணகிக்குக் கல் கொணர நேர்ந்தபோது எழுந்து நிற்கிறது. அப்போது அவன்,

“ இமையத் தாபதர் எமக்கு ஈங்குணர்த்திய,
அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி
நம்பால் ஒழிகுவ தாயின் ஆங்கஃது
எம்போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம்.”

என்று கூறி, மறனிழுக்கா மானமுடைமையைப் புலப்படுக் கின்றான். அவன், அக்காலை கூறிய வஞ்சினம், நெஞ்சிற்கு மிக்க மருட்கையைப் பயக்கின்றது.

“ வடதிசை மருங்கின் மன்னர் முடித்தலைக்
கடவுள் எழுத ஓர் கற்கொண் டல்லது
வறிது மீளும்என் வாய்வா ளாகின்,
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பில்
குடிநடுக் குறூஉம் கோலேன் ஆகுக”

என்பது அவ் வஞ்சின வாய்மொழியாகும். அவ் வஞ்சினமும் தப்பாமே செய்து முடித்தான் இச்செங்குட்டுவன்.

இவ் வஞ்சினம் மொழிந்தபோது மாடலன் ஆங்கில்லை. ஆசான் வேறொருவன் இருந்து பொருந்தாக் கூற்றொன்று புகலு கின்றான். “அது அவ்வடவாரிய மன்னர் இகழ்ந்து பேசியது நின்னையன்று; ஏனைச் சோழ பாண்டியரையே யாகும்” என்பது.

“ அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல், நின்
வஞ்சினத் தெதிரும் மன்னரும் உளரோ?
இமைய வரம்ப! நின் இகழ்ந்தோ ரல்லர்:
அமைகநின் சினம்”

என்பது அவ்வாசானுடைய உரை. ஆனால், அவன் உரையை இச் செங்குட்டுவன் ஏற்றுக் கொள்ளவில்லை யென்பதை வரலாறு கூறுகின்றது.

இனி, இவன் பெற்றுள்ள ஏனை வெற்றிச் சிறப்புக்களை உரைக்கின் இவ்வுரை பேருரையாய் விரியும். அவை மிகப் பலவாகும்.

இவன் சிவனிடத்தில் மாறா அன்புடையவன். இவன் இமயம் நோக்கிப் புறப்பட்டபோது, திருமாலின் சேடம் கொணர்ந்து சிலர் கொடுப்ப, அதனைத் தன் மணிப்புயத்தே பெய்து கொண்டான். அதற்குக் காரணம் கூறப்புகுந்த இளங்கோவடிகள்,

“ ஆடக மாடத் தறிதுயி லமர்ந்தோன்
சேடம் கொண்டு சிலர்நின் றேத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்,
ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கின னாகித் தகைமையின்”

சென்றான் என்று கூறுகின்றார். மாடலன் ஒருகால் இச் செங்குட்டுவனை நோக்கிக் கூறுமிடத்து, “ஆனேறு ஊர்ந் தோன் அருளினில் தோன்றி, மாநிலம் விளக்கிய மன்ன வனாதலின்” என்று கூறுகின்றான்.

இவன் அறிஞருடன் சொல்லாடுங் காலத்துப் பெருந் தன்மை பொருந்தப் பேசும் பண்பு படைத்தவன். மாடலன், கண்ணகி வரலாற்றை மிக்க சுருக்கமாகக் கூறக் கேட்டதும்.

“ பகைப்புலத் தரசர் பலர்ஈங் கறியா
நகைத்திறங் கூறினை, நான்மறை யாள!
யாது நீ கூறிய உரைப்பொருள் ஈங்கு”

என்கின்றான் இதன்கண், “நான் அறியாத நகை யென்னாது மன்னர் பலரும் அறியாத என்றான், இராசபாவத்தாலே” என்று உரைக்கின்றார் அரும்பத வுரைகாரர்.

செங்கோல் கோடிய பாண்டியன் செய்தி கேட்டதும், இச்செங்குட்டுவன் கூறும் கூற்று அவனது பெருமிதத்தைக் காட்டு கின்றது. அது,

“ எம்மோ ரன்ன வேந்தர்க்கு உற்ற
செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன்
உறுபதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென
வல்வினை வளைத்த கோலை, மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது”

என வருவதாகும். இம்மட்டில் நில்லாது, இன்னோரன்ன வழுக்கிற்கு இடனாகி, அரசரை வாட்டும் அரசியலின் தன்மையைச் செங்குட்டுவன் நன்கு உணர்ந் திருக்கின்றான். சீத்தலைச் சாத்தனார் மதுரை நிகழ்ச்சியை விரியக் கூறக் கேட்டு மனம் வருந்திய இவன், பாண்டியன் உயிர் துறந்ததை நினைந்துக் காட்டியவாறு கூறி,

“ மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம்,
பிழைஉயி ரெய்தின் பெரும்பே ரச்சம்,
குடிபுர வுண்டும் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதகவு இல்”

என்று கூறுகின்றான்.

5.  கண்ணகி* : கண்ணகியாரின் காற்சிலம்பே இப் பேரிலக் கியத்துக்குப் பெயரைத்தந்தது. இவர் வடிவில் திருமகளையும், கற்பில் வடமீனையும் நிகர்ப்பர் என அவரையொத்த மகளிரால் பாராட்டப்படுவர். நற்குண நற்செய்கை மிக உடையவர். இவரது உருநலனும் மனை மாண்பும் கோவலனுக்கு மிக்க இன்பத்தைத் தருகின்றன. அவன் இவரை, “அரும்பெறற்பாவாய், ஆருயிர் மருந்தே, பெருங்குடிவாணிகன் பெருமடமகளே” எனப் பாராட்டிப் பரவுகின்றான். இவர் கற்புக்கடம்பூண்ட பொற்புடைத் தமிழ்மகள் என்பதைப் பலவிடங்களில் இவர் கூறும் சொற்களால் இனிது தெளியலாம்.

கணவனாகிய கோவலன், காதலொழுக்கத்து விழுமிய நெறியால் வாராது, பெற்றோர் புணர்ப்பவந்த காதலனாயினும், அவன்பால் இவர் கொண்டொழுகிய காதலொழுக்கம் தமிழ் கமழும் காதலின்ப ஒழுக்கமாகவே திகழ்கின்றது. அவன் மாதவி வயப்பட்டு மயங்கித் தன்னைப் பிரிந்து ஒழுகிய காலத்து, கண வருவப்ப அணியும் அணிகலன்களை இவர் அணியவேயில்லை. இதனை அடிகள்,

“ அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய,
மென்துகில் அல்குல் மேகலை நீங்க,
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிதணி அணியாள்
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்”

என்று கூறுகின்றார்.

மேலும் கூறியவாறு, தன்காதற் கொழுநன் பரத்தைமை பூண்டது காரணமாக நம் கண்ணகியார்க்குப் பெருவருத்த முண் டாயிற்றெனினும் அவர் அவனையாதல், பரத்தை யாகிய மாதவி யையாதல் புலந்து ஒரு மொழியும் கூறவே யில்லை. தமிழ்மக னொருவன் இல்லிருந்து நல்லறம் புரியுங்கால், பரத்தைமை யொழுக்கம் பூண்பானாயின், அதனைப் பொறாது அவன் இல்லக் கிழத்தி அவன் கேட்பவும், அவன் பரத்தையர் அறியவும் புலந்து கூறுவதுண்டு. அதனால், அவர் கற்புநெறி வழுப்படுதலும் இல்லை. புலந்து கூறுவன பலவும் “அழிவில் கூட்டத்து அவன் பிரிவாற்றாமை” என்றே தொல்காப்பியர் முதலிய பண்டைச் சான்றோர் கருதினர். தன் கொழுநன் பரத்தை வயத்தனாய் ஒழுகிவரக் கண்ட தமிழ நன்மகள் ஒருத்தி, அவன் தன்பால் ஒருகால் வரக்கண்டதும், அவனைச் சேர மறுத்து, “ஊர, எம் நலம் தொலைவதாயினும், துன்னலம், பெரும, பிறர்த்தோய்ந்த நின் மார்பே” (ஐங். 63) என்றாள். கணவன் எதிரிலே, அவன் காதலித் தொழுகும் பரத்தையைப் பற்றிப் புலந்து கூறுவாளாய், நீ இங்கு வாரற்க; நின் வருகையை அப்பரத்தை, “செவியிற்கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள், கண்ணிற்காணின் என்னா குவள் கொல்” (ஐங்கு. 84) என்றும், “மடவள் அம்மநீ இனிக் கொண்டோளே, தன்னொடு நிகரா என்னொடு நிகரிப், பெருநலம் தருக்கும் என்ப” (ஐங்.67) என்றும்.

“ மாநீர்ப் பொய்கை யாண ரூர,
தூயர் நறியர் நின் பெண்டிர்;
பேஎய் அனையம்யாம், சேய் பயந்தனமே” (ஐங். 70)

என்றும் கூறக் காண்கின்றோம். இக்குறிப்பு, கானற் சோலையிடத்தே கோவலனும் மாதவியும் பாடிய வரிப்பாட்டினும் ஒளிர்கின்றது. இக்கற்பு நெறியைக் “கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயற்கண்ணாய், மங்கை மாதர் பெருங்கற் பென்று அறிந்தேன் வாழி காவேரி” என்று பாடுதலால், கோவலனும் நன்கு அறிந்திருக்கிறான் என்று அறியலாம். இதனை இக்கோவலன் அறிதற்கு இடம் யாது? மாதவியோ பரத்தை; அவள் பாட்டில், “கருங்கயற் கண் விழித் தொல்கி நடந்த எல்லாம் நின் கணவன், திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன், வாழி காவிரி” என்று கூறுதலால், காதலன் தன் காதலிபால் அன்பு கோடாதிருத்தலே வேண்டுமென்பது பெறப்படுகிறது. படவே, இக்கற்பு நெறியைக் கண்ணகியார்பால் தெரிந்து கொண்டானாம். அவர், மங்கல மொழிய ஏனைய அணிகளை அணியாதிருந்தனர். தேவந்தியிடத்திலோ பிறரிடத்திலோ தம் பிரிவாற்றாமையை வாய்விட்டுரைத்திலர்; தன் காதலனையோ, மாதவியையோ எவ்விடத்தும் இகழ்ந்தோ புலந்தோ கூறவேயில்லை. அவரது வாடிய நிலையைக் கண்ட, தேவந்தி யென்னும் தோழி, கண்ணகியார் தம் கணவனைப் பெறல் வேண்டு மென்று, வந்தாள் என்றற்கு, “வாட்டருஞ்சீர்க் கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறையுண்டு என்று, எண்ணிய நெஞ்சத்து இணையளாய்” வந்தாள் என்றே அடிகள் கூறுகின்றார். கண்ணகியார் தாம் கண்ட தீக்கனவையும், அத்தேவந்தி, “பெறுக கணவனொடு” என்று உரைத்ததனால் தான் எடுத்துக் கூறுகின்றார்; இன்றேல் அதனையும் கூறியிரார்; “உரை யாடேன்” (9:51) என்றே கூறுகின்றார்.

இதனால், இவர் தமக்குற்ற துன்பத்தைத் தாம் பொறுத்துக் கொள்வதே தக்கதென்று கருதிப், பிறரை நோவதும் செய்யாது, தன் துன்பத்தைப் பிறர்க்குரைத்து அவரையும் தன் துன்பத்தைப் பங்கு கொள்ளச் செய்யாது ஒழுகினாரென்பது இனிது விளங்குகின்றது. அன்றியும், தன்துயர், தன் மாமன் மாமியர் அறியின் பெரிதும் வருந்துவரென்று கருதி அவர்கட்கு மறைத்து ஒழுகிய திறத்தைப் பின்னர்க் கோவலற்கு உரைக்கும்போது “முந்தை நில்லா முனிவிகந் தனனா….. எற்பாராட்டயான் அகத் தொளித்த நோயும் துன்பமும் நொடிவது போலும், என் வாயல் முறுவதற்கு அவர் உள்ளகம் வருந்த” (16:78-80) என்று வெளிப்படுக்கின்றார். தன் வாடிய நிலைகண்டு, மாசாத்துவான் வருந்துவன் என்பது உணர்ந்து, “முந்தை நில்லா”மல் ஒழுகியதையும் அப்போதுதான் உரைக் கின்றார். இவ்வாற்றால், தமக்குறுந் துயரத்தை மகளிர் புறத்தே புலப்படுக்காது பொறுத் தாற்றுதலே பெண்மை யெனக் கருதும் பெற்றியராதல் தெரிகிறது. இதுவே, பின்பு, அவர், கோவலன் கொலையுண்டது கேட்டுப் புலம்பிக் கொண்டே மதுரை நகர்க்குட் சென்று அரற்றுமிடத்து,

“ பெண்டிரு முண்டுகொல் பெண்டிரு முண்டுகொல்
கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரு முண்டுகொல்”

(சிலப்.99:51-53 )
என்பதன்கண் தெற்றென விளக்கப்படுகிறது. கொழுநரால் உறும் குறைகளைத் தாங்குபவரே பெண்டிர் என்று இதனால் இவர் வற்புறுத்துவது காண்க.

கோவலனது பிரிவாற்றாது வருந்தி மெலிந்த கண்ணகி யார் ஒருநாள் தீக்னாக்கண்டு தன் தோழி தேவந்திக்குத் தெரிவிப்ப, அவள், “பிரிந்த கணவனைப் பெறக்கருதும் மகளிர்,” கானற் கண் உள்ள சோமகுண்டம் சூரிய குண்டமென்னும் துறை மூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுவர்;

‘காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாமின் புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியினும் போய்ப் பிறப்பர்’

(சிலப்9:60-62)
யாம் ஒரு நாள் ஆடுதும், வருக” என்கின்றாள். அவட்கு நம் கண்ணகியார், ‘கணவனையல்லது பிற தெய்வங்களைத் தொழுதல் கற்புடைய மகளிர்க்கு ஏலாது’ என்ற கருத்தால், “அது பீடன்று” என்று மறுத்துவிடுகின்றார்.

அக்காலை, திரும்பப் போந்த கோவலன், தன் காதற் குறிப்புத் தோன்றும் மொழிகள் சிலவேனும் கூறலாம்; கூறிற்றிலன். துவண்ட மேனியும் சோர்ந்த முகமும் கொண்டு அவர் எதிரில் நிற்பவன், கண்ணகியார் செய்யும் வழிபாட்டையும் நோக்கிற்றிலன்; அவன் உள்ளம் கண்ணகியின் “வாடிய மேனி வருத்தங் கண்டு” பெருங் கலக்கம் எய்துகின்றது. உடனே, அவன் மனத்தே மிக்க நாணம் தோன்றி அலைக்கின்றது;

“ சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடிக்
குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைத்த
இலம்பாடு நாணுத் தரும்எனக்கு”

(சிலப். 9:69-71 )
என்று சொல்கின்றான். காமக்களியாட்டில் மயங்கினார் க்கு வேறு நாணமேது; நல்ல காதலேது. பொருளின்மை யொன்றே அவரை வருத்தக்கூடியது. அவன் வருத்தத்தின் பெற்றியை யறிந்த கண்ணகியார்.

“ நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச்
சிலம்புள கொள்ளும்”

(சிலப்.9:72-73 )
என்று மொழிகின்றார். செவிவழிச் சென்று அவன் நெஞ்சு துளைத்து வருத்தும் சுடுசரம் இதனிற்காட்டில் அக்கோவலற்கு வேறு வேண்டாவே.

இவ்விடத்தே, தன்பால் வந்த கோவலன் கண்களில் காதற் குறிப்பில்லை. ஆகவே, நம் கண்ணகியார் மனத்தில் புலவி எழ வில்லை. மேலும், கோவலன் கடையகத்தான் என்று குற்றிளை யாள் ஒருத்தி போந்து சொல்லி முடித்தற்குள், அவன் உள்ளே வந்து “பாடமை சேக்கை” யடைகின்றான்; கண்ணகியாரும் சென்று அவனை யடைகின்றார். அவன்பால் உள்ள காதலால் ஈர்ப்புண்டு சென்று அவன் அருகே நிற்கும் அவரைக் கண்ட அவன் கண்கட்கு அவர்பால் உள்ள காதல் நிலை தெரிந்திலது. அவரது ‘மங்கை மாதர் பெருங் கற்பே’ புலனாகிறது. அப் பெருமை முன் அவனது சிறுமை விளங்கித் தோன்றவே, அவன் நாணம் தலைக் கொள்
கின்றான். ஆயினும் கண்ணகியார், தான் அவனது புறத்தொழுக்கத்தை இகழ்ந்து வெகுண்டு புலப்பேன் எனக் கருதுகின்றான் போலும் என்று நினைந்து, “நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டி” மகிழ்விக் கின்றார். ‘பின்பு, அவனுக்குக் “காசு பெரிதேயன்றிக் காதல் பெரிதன்று” என்று, ‘சிலம்புள கொள்ளும்’ என்று செப்புகின்றார். மாதவியை, அவன், “சலம்புணர் கொள்கைச் சலதி” என்று தன்முன் இகழ்கின்றபோது, கண்ணகியார், தானும் புலந்து சில கூறலா மன்றே; ஒன்றும் கூறவேயில்லை; கூற நினைக்கவே இல்லை. ஆய்ச்சியர் சேரியிற் சொல்லாடு மிடத்தும், “போற்றாவொழுக்கம் புரிந்தீர்” என்கின்றாரேயன்றி, மாதவியை மனத்திடையே சிறிதும் நினைக்கவே இல்லை. இதனால் அவர் நினைவும், சொல்லும் செயலும் யாவையும் அக்கோவலனை மகிழ்வித்தலையே நாடியிருப்பது இனிது புலனாகிறது.

ஆனால், அவன், இச் சிலம்பையே முதலாகக் கொண்டு, மதுரைக்குச் சென்று பொருளீட்டக் கருதித் தன்னுடன் வருமாறு அழைக்கின்றான். இவ்வாறு தன் மனைவியையும் உடன் அழைத்தது இவன் வரலாற்றில் தான் புதுமையாய்க் காணப்படுகிறது. அக் கண்ணகி யாரும் அவன் சொற்படியே புறப்பட்டுவிடுகின்றார்.

நெடிது நடந்தறியாப் பெருஞ் செல்வத் திருமகளாகிய கண்ணகியார் அவனுடன் ஒரு காவதம் சென்று, ஆங்கிருந்த கவுந்தியடிகளின் தவப்பள்ளியை யடைந்து கோவலனை அன்பு கனிய நோக்கி, முள்ளெயிறு இலங்கமுறுவலித்து,

“மதுரை மூதூர் யாது?” என வினவ,
கோவலன்,

“ ஆறைங் காதம் அகல்நாட் டும்பர்,
நாறைங் கூந்தல், நணித்து”

(சிலப். 10:42-43)

என்று விடையிறுக்கின்றான். அவனது நயமென் மொழியினை கேட்டு உவகை நகை செய்து, கவுந்தியடிகளை வணங்கி வழிபடு கின்றார். வழியில் கோவலன் கண்ணகியார்பால் காட்டிய காதல், சான்றோராகிய கவுந்தியடிகள் உணர்ந்து, “கயல்நெடுங் கண்ணி காதற் கேள்வ” எனப்பாராட்டப் பெறும் பேறு பெறுகின்றது.

உயிரினும் சிறந்த நாணும், அதனிற் சிறந்த கற்பும் உருக் கொண்டாற்போலும் உயர்மகளாதலின், கண்ணகியார், வம்பப் பரத்தையும் வறுமொழியாளனும் கவுந்தியடிகள்பால் தீமொழி பகரக் கேட்டதும், உடல் நடுங்கி மனங்கூசித் தம் செவி புதைத்து நிற்கின்றார். அது காணப்பொறாமையால் கவுந்தியடிகள் அத் தீயோர் இரு வரையும், “முள்ளுடைக் காட்டில் முதுநரியாக” எனச் சபிக்கின்றார். மேலும், வேட்டுவர் கூட்டத்துட் சாலினி தெய்வமருள் கொண்டு, கண்ணகியாரைப் பார்த்து, “இவளோ ஒருமாமணியாய் உலகிற் கோங்கிய திருமாமணி” என்று சிறப்பித்துப் பாராட்டிக் கூறு கின்றாள். அது கேட்டதும், கண்ணகியார், “பேதுறவு மொழிந்தனள் மூதறிவாட்டி” என்று கோவலற்குப் பின்னே சென்று ஒடுங்கி நிற்கும் தோற்றம் உள்ளக்காட்சியில் உவகை செய்கின்றது.

கண்ணகியார் மாதரியென்னும் ஆய்ச்சி வீட்டில் இருந்து, அவள் உதவிய காய், கனி, அரிசி முதலியவற்றால் இனிய உணவு சமைத்துக் கோவலற்கு இடும் திறம் மிக்க இன்பம் தருவதாகும். கோவலனைப் பனையோலைத் தடுக்கில் அமர்வித்து,

“ தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்துஈங்கு
அமுதம் உண்க, அடிகள்! ஈங்குஎன” (சிலப்.16:41-43)

அவர் மொழியும் மொழிகள் இற்றை நாளை மகளிர்க்கு இனிய எடுத்துக் காட்டாகும்.

உணவு கொண்டபின் கோவலன், கண்ணகியாரின் வழிநடை வருத்தத்திற்கு வருந்தியும் தன் பெற்றோரை நினைந்தும் சில கூறுகின்றான். அவற்குக் கண்ணகியார் தம் பேரறிவுடைமை சிறக்க ஒரு நல்லுரை கூறுகின்றார்.

“ அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”

நும் பெற்றோர், அன்பு சிறந்து அருள்மொழி வழங்கி இனிது பாராட்டி வந்தனர். என் பொய்முறுவல் கண்டு, என் உள்ளுறு வருத்த முணர்ந்து வருந்தினர். அவர் அவ்வாறு வருந்தவும் நீவிர்,

“ போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின்,
ஏற்றெழுந் தனன்யான்” (சிலப். 16:81-83)

என்று கூறித் தெருட்டுகின்றார்.

கண்ணகியாரின் பெற்றோர் அவர்க்கு மணம் முடித்த சின்னாட்குப் பின், அவரைக் கோவலனுடன் மனையறம் படுத்து கின்றனர். அப்போது அவர்கள், கண்ணகியாருக்கு,

“ மறப்பருங் கேண்மையோ டறப்பரி சாரமும்,
விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்ற மொடு” (சிலப். 2 : 85-88)

ஒரு தனியாகப் புணர்க்கின்றனர். இதன்கண், அவர்கள், அறப் பரிசாரமும் விருந்து புறந்தருதலும் பிறவும் வற்புறுத்தி யிருத்தலின், கண்ணகியார் அவற்றை வழுவாது ஆற்றலையே குறிக்கொண்டு மனையறம் புரிந்து வந்தமை தெரிகிறது.

கோவலன் பிரிந்தபின், தான் தனித்திருந்து அவ்வறத்தை முட்டாது செய் தொழுகிப் போந்தாராயினும் அவரது கற்புடை யுள்ளம் அமைதி பெறவே இல்லை. கோவலுடன் மதுரைக்குப் போந்து மாதிரி மனைக்கண் தங்கி, அக்கோவலனை யுண்பித்து இனிதிருக்குங்கால், தமது இவ்வுள்ளக் குறிப்பை ஒருவாறு வெளிப்
படுத்தி விடுகின்றார்.

“ அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”

(சிலப். 16:71-73)
என்று ஓதுவதால், இஃது அவர் உள்ளக் கிடையாதல் தெரிகின்றது. இது “புரையறந் தெளிதல்” என ஆசிரியர் தொல்காப்பியனார் காட்டும் கற்புநெறி.

இதன் கண், விருந்து புறந்தருதலைப் பெற்றோரும் கண்ணகி யாரும் பெரிதும் போற்றுதலை நோக்கின் இவர் காலத்துக் கற்பு நெறிக்கண், இப்பேரறம் பெரிதும் போற்றப் பட்டு வந்தமை தெற்றெனத் தெளிவாகிறது. இதனை வற்புறுத்திச் சிறப்பித்தற்குப் போலும், இளங்கோ வடிகளும் பிறாண்டும் கற்புடை மகளிரை,

“ விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு
உடனுறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த
வடமீன் கற்பின் மனையுறை மகளிர்” (சிலப். 5:227-9 )

என்று பாராட்டியிருக்கின்றனர்.

இதுகாறும் காட்டியவற்றால் கண்ணகியாரின் கற்பும், நற்பா லொழுக்கமும், மெல்லியற் பொறையும் யாம் தெளியக் காண நிற்பது விளங்கும். கோவலனது பரத்தைமையும், பிரிவும் பெரிது ஆற்றியிருந்த இக்கண்ணகியார், கோவலன் கொலையுண்டது கேட்டதும் , ஆற்றாமையின் வரம்பு கடந்துவிடுகிறார். அவரது ஆறிய கற்பு சீறிய கற்பாக மாறுகிறது; மெல்லியற் பொறை வல்லியல்வீரமாகின்றது; மென்மொழி வழங்கிய மலர்வாயில் வன்மொழி வருகிறது; அருள்கிடந்த உள்ளத்தே மருட்கை இடம் பெறுகிறது; அழுகையும், அவலமும் அவரைக் கவர்ந்து கொள்கின்றன; பெண்மையின் வரம்பாகிய பெருநாண் நெகிழ்ந்து நீங்குகின் றது.

“ பொங்கி எழுந்தாள், விழுந்தாள், பொழிகதிர்த்
திங்கள் முகிலொடும் சேண்நிலம் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுதாள், தன் கேள்வனை
எங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்”

(சிலப். 18:30-33)
என அடிகள் அழகுறக் காட்டுகின்றார்.

கண்ணகியார்க்கு இவ்வுலகமே புல்லிதாகத் தோன்றுகிறது; எதிர்காலம் புலனாகிறது; கணவனை இழந்த மகளிர் கைம்மை நோன்பு நோற்று வாழும் காட்சி தெரிகிறது; மன்னவன் ஆட்சியில் நேர்ந்த தவறும் இனிது விளங்கு கின்றது. தன்னை நோக்குகின்றார்; “அன்பனை இழந்தேன் யான்” என வாய்விட்டு அரற்றுகின்றார்; கைம்பெண் எனத் தான் ஆவது கண்டு அருவருக்கின்றார்; அவலம் மிக மிக அவருள்ளம் திண்ணிதாகின்றது. அறிவு சிறிது அவர் வசம் வருகிறது. ஏனை மகளிர் காணத் தம் கணவனான கோவலன் கள்வனல்லன் என்பதனை, செங்கதிர்ச் செல்வனைக் கேட்டுத் தெளிகின்றார்; பிறரையும் தெளிவிக்கின்றார்.

மதுரை நகர்க்குட் கையிற் சிலம்பேந்திப் புகுந்து, தெருவில் தம்மைக் கண்டு வியந்து நிற்கும் நன்மகளிர் அறிய வன்மொழி சில கூறுகின்றார்.

“ முறையில் அரசன்தன் ஊரிருந்து வாழும்
நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள்!….”

------------------------------------------------------------------------

    கள்வனோ அல்லன் கணவன், என் காற்சிலம்பு  

கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே,
ஈதொன்று. (சிலப். 9: 3-8)

என் கணவனைச் சென்று காண்பேன்; கண்டு அவன்வாயில் “தீதறு நல்லுரை கேட்பேன்” என்கின்றார். கோளாதொழியின், அது நன்மகளிர் எள்ளி இகழ்தற்கு இடனாகுமன்றே; அதனையுணர்ந்து,

“ தீதறு நல்லுரை கேளா தொழிவனேல்,
நோதக்க செய்தாள் என்று எள்ளல்” (சிலப். 19:13-14)

என்று இனைந்து கூறுகின்றார்.

பின்பு இவர் நேரே கொலைக்களம் சென்று கோவலன் உடல் கொலையுண்டு குருதி நிறைந்து பொடியாடிக் கிடப்பது கண்டு ஆறாத் துயரமுற்று அவலித் தழுகின்றார். பத்தினிப் பெண்டிர், சான்றோர், தெய்வம் என்ற இவர்களை நினைந்து நோகின்றார். கோவலன் உடலை எடுத்துத் தழீஇக் கொள்கின்றார். அவன் உயிர் பெற்று, கண்ணகியாரின் “நிறைமதி வாண்முகம் கன்றியது” என்று அவர் கண்ணீரைக் கையால் மாற்றுகின்றான். அவர் அவன் திருந்திய அடியைத் தன் வளைக்கையால் பற்றுகின்றார். உடனே, அவன், “இருக்க” என்று சொல்லிவிட்டு விண்ணுலகு சென்று விடுகின்றான். கண்ணகியார்க்குக் கலக்கம் பெரிதாகின்றது; கண்ணீர் ஆறாகச் சொரிகிறது; உள்ளம் கொதிக்கின்றது; உடல் நடுங்குகின்றது; சுற்று முற்றும் கண் களைப் பரக்க விழித்துப் பார்க்கிறார்; “போய் எங்கு நாடுகேன்” என்று புகல்கின்றார். கோவலன் கொலைக்காரணத்தை நினைக்கின்றார். அவர் முகம் சிவக்கின்றது; வாயிதழ் துடிக்கின்றது; கண்கள் சிவந்து காய் சினங் காட்டுகின்றன; கணவன் நினைவும் இடையே நிகழ்கின்றது.

“ காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்;
தீவேந்தன் றனைக்கண்டுஇத் திறம்கேட்பல் யான்”

(சிலப்.19: 70-71)
என்று சொல்லிக்கொண்டு அரசன்பால் வருகின்றார்.

இவரது காய்சினக் கோலத்தைக் கண்டு அச்சமும், வியப்பும் அடையக்கொண்ட, அரசனது வாயிற் காவலன் அரசன்பால், “கொற்றவையோ, பிடாரியோ, பத்திரகாளியோ என்று கூறற்குரியளல்லள்; கணவனையிழந்த ஒரு நங்கை” என்கின்றான். இதுகுறிப் பறியாத, கல்லா நாடகமாக்கள், நம் பத்தினிக் கடவுளாகிய கண்ணகியாரை, உயிர்க்கொலை வேட்டுத் திரியும் கூளியாக்கி நடித்துத் திரிகின்றனர். இஃது அறிஞர்க்கு எத்துணை அருவருப் பையும் வருத்தத்தையும் தருகிறது, ஓர்மின்.

அரசன்பால் இவர் வழக்குரைக்கும் திறம் மிக்க நயமும் இலக்கிய நலமும் நிரம்பியது.

தன் கணவனான கோவலன் “போற்றாவொழுக்கம் புரிந்து” ஒழுகியது குறித்து ஒரு சொல்லும் கூறாது, அவன் கொடுமைக்கு நாணி ஒடுங்கியிருந்தவர், பாண்டி வேந்தனால் கொலையுண்டது கேட்டலும், வேந்தன்பால் ஆறாச் சினங் கொண்டு எழுகின்றார். கோவலன் தவறு, அவனை அக்கண்ணகியினின்றும் பிரியச் செய்தது; பாண்டி வேந்தன் தவறு அவனை உயிர் பிரிவித்தது என்று கொண்டிலர். கோவலன் செய்த தவறு ஆடவர்க்கு இயல்பு என்றும், வேந்தன் தவறு அன்னதன்று என்றும் அவர் நினைக்கின்றார். ஓதல், காவல், பொருள், பகை தணிவினை முதலியவற்றோடு ஒப்பவைத்து ஓதப்படும் பரத்தையில் பிரிவு தவறாகக் கருதப்படவில்லை போலும். இன்றேல், அரசன் முன் வழக்குரைத்து, அவன் தவற்றினை அஞ்சாது எடுத்துக் காட்டும் உரன் படைத்த நம் கண்ணகியார், அக்கோவலனை எவ்வகையாலேனும் தெருட்டியிருப்பர். “அவன் சோர்பு காத்தல் கடன்” (தொல்) என்றும், “எள்ளின் இளிவாம் என் றெண்ணி, அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு,”( குறள்) என்றும், “எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து” (குறள்) என்றும் வருவன சான்றோர் கூறியுள்ள பொருளுரைகளன்றோ? அவர் அவனைத் தெருட்டிக் கூறியதாக ஓர் உரையினையேனும் அடிகள் நமக்குக் காட்டினா ரல்லர். கண்ணகியாரின் கற்புமாண்பைக் காட்டுதற்கு மாதவியிற் பிரிந்து வந்த கோவலனக்கு,

“ நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச்
சிலம்புள கொள்ளும்” ( சிலப். 9:72-73)

என்றதும், மாதரிமனைக்கண் இருந்து, சிலம்பு பெற்றுச் செல்வது குறித்துக் கோவலன் கூறிய பாராட்டுரைக்கு விடையிறுப்பார் போல்,

“ போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ” (சிலப். 16:81-82)

என்றதும் ஆகிய இவ் விரண்டுமே போதிய நல்லுரையாகின்றன. மாற்றாவுள்ள வாழ்க்கையேன் என்றது தன்வயின் உரிமையும், போற்றா வொழுக்கம் புரிந்தீர் என்றது அவன் வயிற் பரத்தைமையும் சுட்டி நிற்றல் காண்க.

இடுக்கண் அடுக்கிவரினும் பொறுக்கும் கற்புமிடுக் குடைய கண்ணகியார், வேந்தன் செய்த தவற்றால் கோவலன் கொலை யுண்டானாயினும், அதனை வினைப்பயன் என்றாதல், அறியாமை என்றாதல்நினைந் தொழியாராகின்றார். கோவலன் தனக்குச் செய்த கொடுமையினும், பாண்டி வேந்தன் செய்தது அவர்க்கு மிகப் பெரிதாகத் தோன்றுகிறது; அஃது அவரது மென்மைத் தன்மையை மாற்றி வன்மை யெய்துவிக்கிறது; “யாவதும் மாற்றாவுள்ள வாழ்க்கையேன்” என்று அவர் கூறிய கூற்றை மெய்ப்பிக்கிறது.

கோவலனது கொலை இரண்டு குறிப்புக்களை அவர் மனக் கண்களுக்குக் காட்டுகிறது. கோவலன் அரசன் கோயிலில் சிலம்பு கவர்ந்த கள்வனாம் என்று கேள்விப்படுவதும், தான் அக் கள்வன் மனைவி யென்பதும் ஒன்று. மானமுடைய தமிழ்க் குடியில் பிறந்த மறமகளாதலின், கண்ணகியின் கருத்தில் இக்குறிப்புப் பெரு வருத்தத்தைச் செய்கிறது. இப்பழிப்பு அவர் அறிவைப் பேதுறு விக்கின்றது. அரசன் இதனைச் செம்மையாக ஆராய்ந்திலன் என்பதை உலகத்தார்க்குக் காட்டித்தானும் செஞ்ஞாயிற்றைக் கேட்டுத் தெளிகின்றார். மேலும், கோவலன் கள்வனென அயலார் கூறியது அவர் நெஞ்சைச் சுடுகிறது. அவர், “மன்பதையலர் தூற்ற மன்னவன் தவறிழைப்ப, அன்பனை இழந்தேன் யான்” என்று அவலங் கொண்டு உள்ளம் அழிகின்றார். ஆகவே, முதலாவது, தவறு அரசன்பால் இருப்பதை வெளிப்படுத்தி, கோவலன் கள் வனல்லன் என்பதை உலகறியச் செய்யுமாற்றால், தன் குடிக்கு நேர்ந்த பழிப்பினை ஒழிப்பதையே கடனாகக் கருதுகின்றார்.

இரண்டாவதாக, பண்டைத் தமிழ் மகளிர் தம் கற்பு நெறிகளுள் தம் நாட்டு அரசன் செங்கோலனாதல் வேண்டு மென்னும் வேட்கையுடையராதலை ஒன்றாகப் பேணி வந்தனர். தன் கணவன் பரத்தைமை யொழுக்கம் பூண்டொழுகுவது தன் ஒருத்திக்கே வருத்தம் தருவதாகும்; அரசு முறை கோடின், அரசன் மரபிற்கும், அவன் ஆட்சியின் கீழுள்ள நாட்டிற்கும் பெருங் குற்றமும் கேடுமாம் என்பது தமிழ் நாட்டுக் கற்புடை மங்கையின் கருத்தாகும். இக் கருத்தினை ஆசிரியர் ஓரம்
போகியார், “வாழியாதன் வாழிய வினி, அறம் நனி சிறக்க அல்லது கெடுக, என வேட்டோ ளேயாயே” என்றும், “அரசு முறை செய்க களவில்லாகுக, என வேட்டோ ளேயாயே” (ஐங். 7.8) என்றும் கூறிக் காட்டுகின்றார். மேலும், “அருந்திறலரசர் முறை செயின் அல்லது, பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச்சிறவாது” என்று இளங்கோவடிகள் வற்புறுத்து கின்றார். இளம் பெண்ணொருத்தி செய்த சிறு பிழையைப் பொறாது, நன்கு ஆராய்வதும் செய்யாது, அவளைக் கொலை புரிந்த நன்னன் என்னும் வேந்தன், “பெண் கொலை புரிந்த நன்னன்” (குறுந்) என்று சான்றோரால் இழிக்கப்பட்டதும், அவன் வழிவந்த இளவிச்சிக்கோ என்பான், பெருந்தலைச் சாத்தனார் என்னும் சான்றோரால், “நன்னன் மருகன்” என்றும் “நம் மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே” (புறம். 151) என்றும் பழிக்கப் பட்டதும் நாடறிந்த செய்திகளாகும். ஆகவே, நாட்டில் நல்லரசு நிலவுதலில், பண்டைத் தமிழ்மக்கள் பேரூக்கம் கொண்டிருந்தமை விளங்கத் தெரிகிறது.

பண்டைத் தமிழ் மகளிருள் முடிமணியாகத் திகழும் கண்ணகியார் இந்நெறியினை நன்கறிந்து ஒழுகிவந்தவராதலின் பாண்டி வேந்தன் முறை வழுவினான் என்பதைச் செஞ்ஞாயிற்றால் தெளிய அறிந்து கொண்டமையினாலும், அமைச்சர் முதலிய சான்றோர் அரசவைக்கண் இருந்தும் பயனின்றி யொழிந்தமையினாலும் தானே தனது வழக்கினை அரசற் குணர்த்தி அரசு முறையினைச் செம்மை செய்யக் கருதுகின்றார். தன் சிலம்பைக் கையிலேந்தி மதுரை மூதூர்த் தெருக்கண்ணே வரும் கண்ணகியார், மகளிரைப் பார்த்து, “முறையில் அரசன் தன் ஊர் இருந்து வாழும், நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்கள்” என்று கூறுகின்றார். கவுந்தியடிகள், கண்ணகியாரை மாதரியிடத்தே அடைக்கலப்
படுத்த போது, “நீணில வேந்தர் கொற்றம் சிதையாது, பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு” என அம் மாதரிக்கு உரைத்தது அவர் நினைவில் இருத்தல் இதனால் புலனாகிறது. அரசனோடு அமைச்சர் முதலியோரையும் உளப்படுத்தி வழுவுரைத்தல் கண்ணகியார் கருத்தென்பது, “என் காற்சிலம்பு; கொள்ளும் விலைப் பொருட்டால் கொன்றாரே” எனப் பன்மைச் சொல்லால் கூறுவதால் விளங்குகிறது.

தன் கணவன் கள்வனல்லன் என்பதும், அவனைக் கொலை புரிவித்த பாண்டி வேந்தன் தவறுடையன் என்பதும் கண்ணகியார் நன்கறியத் தெளிதலும், அவருள்ளம் மிகத் திண்ணிதாகின்றது. அரசன்முன் சென்று, உண்மை யுணர்த்தி அவனது கொடிய அரசு முறையைச் செம்மை செய்தற்கு வேண்டும் வீரத்தீ கொழுந்து விட்டெரிகிறது. ஆடவர் மகளிர்யாவராயினும் அறம் செய்தற்கண் அஞ்சுதல் பெரும்பழியாகு மன்றோ; அஞ்சாமையல்லால் துணை வேறு வேண்டாமை யின், கண்ணகியார் அறம் கிடந்த நெஞ்சம் மறம் கிடந்த கற்பும் துணை செய்ய, அரசன் வாயிலை அடைகின்றார்.

அரசவை வாயிலில் வாயிலோன் கஞ்சுக மணிந்து, வாளேந்தி நிற்கின்றான். அறம் நிலவா விடத்தில் ஆயிரம் படையும் படை வீரரும் இருப்பினும் யாது பயன்? வெறும் ஆரவாரந்தானே! அவ்வாயிலோனைக் காண்டலும் கண்ணகியார் கண்கள் சிவந்து தீப்பறக்க, “வாயிலோயே, வாயிலோயே” என்றவர்,

“ அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே” (சிலப்.20:25-26)

எனச் செவி கைக்குஞ் சொற்களைச் சொல்லிச் சீறுகின்றார். அதுகேட்டு, வாயிலோன் திடுக்கிட்டுத் திகைப்புண்டு நிற்கின் றான். கண்ணகியார், அவனை நோக்கி,

“ இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்
கணவனை யிழந்தாள் கடையத்தாள் என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே” (சிலப்.20:27-29)

என்று தம் விரைவும் வெகுளியும் தோன்ற அடுக்கி யுரைக் கின்றார். அவன் நெஞ்சில், கண்ணகியாரின் கடிய தோற்றம், கொற்றவை, பிடாரி, பத்திரகாளி, காளி, துர்க்கை என்ற இவர்களை நினைப்பிக் கின்றது. அவன் இக் காலத்து நாடக மாக்களைப் போலக் காளி யென்றே துணிந்து நடிக்கக்கூடிய மடமை யுடையனல்லன்; அதனால், அவன் அரசன் முன்னே, உரிய வழிபாடும் வாழ்த்தும் செய்து நின்று,

“ அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி,
வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை யல்லள்”

(சிலப்.20:34-36)

பிடாரியும் அல்லள்; பத்திரகாளியும் அல்லள்; காளியும் அல்லள்; தாருகன் பேருரம் கிழித்த பெண்ணாகிய துர்க்கையும் அல்லள்.

“ செற்றனள் போலும், செயிர்த்தனள் போலும்,
பொற்றொழில் சிலம்பொன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளே,
கணவனை இழந்தாள் கடையகத் தாளே” (சிலப்.20: 41-44)

என்று ஒரு முறைக்கு இருமுறை அரசனுக்கு உரைக்கின்றான். அரசன், “அவளை ஈண்டுத் தருக” என்று கூற, அவ்வாயிலோன், அதனைக் கண்ணகியார்க்கு உரைப்ப, அவரும் அவன் பின்னே சென்று, அவன் காட்ட, அரசனைக் கண்டு, குறுகச் சென்று நிற்கின்றார். அவரது கரியகுழல் அவிழ்ந்து சோர்ந்து அலைகின்றது; மேனி புழுதி படிந்திருக்கிறது; ஊதுலைபோலப் பேருயிர்ப்பு வருகிறது; உடல் நடுங்குகிறது; கண்கள் செக்கர்ச்செவேரெனச் சிவந்து ஆற்றாமையும் வெகுளியும் அடையக் காட்டுகின்றன; கண்ணீர் ஆறாக ஒழுகுகிறது. அரசர்க்குச் செய்யும் வழி பாட்டினையும் அவர் செய்கின்றிலர். அவர் நிலையினைக் காணும் அரசன் உள்ளத்தில் இரக்கம் பிறக்கவில்லை. அவர்தம் கண்ணீரொன்றே அவன் கருத்தைப் பிணிக்கின்றது.

“ நீர்வார் கண்ணை, எம்முன் வந்தோய்!
யாரையோ நீ, மடக்கொடியோய்!” (சிலப்.20:48-49)

என்று அவன் வினவுகின்றான்.

அவன் மருங்கிருந்த அமைச்சர் முதலியோரும் வாய் திறந்தார் இல்லை; அவரும் அரசனேபோல அறிவு மழுங்கி விட்டனர் போலும். மேலும், அரசன், தன்பால் முறை வேண்டியும் குறை வேண்டியும் வருவோர் குறிப்பை யறிந்து ஆவன செய்யும் அத்துணை அறிவு நுட்பமுடையவனாகத் தோன்றுகின்றிலன். “முகம் நோக்கி நிற்க அமையும், அகம் நோக்கி யுற்றது உணர்வார்ப் பெறின்” என்றார் திருவள்ளுவனார். அவ்வாறே, அவனைக் குறுகச் சென்று “முகம் நோக்கி நின்ற கண்ணகியார், தம் அகம் நோக்கி யுற்றதை யுணரும் உணர்வு வன்மை அவன்பால் இல்லாமை அறிகின்றார். அது குறித்தன்றோ, இளங்கோவடிகளும், கண்ணகி, “கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி” என்று குறித்தருளினர். “குறிப்பால் முன்நிற்பார் அகம் நோக்கி உற்றது தேரும் செயல் நின்பால் இல்லையே,” என்பார், “தேரா மன்னா! செப்புவது உடையேன்” என்று தொடங்கி தன்நாட்டுச் சோழவேந்தர்தம் அரசியற் சிறப்பும் அருளாட்சியும் எடுத்தோதி, தன் வரலாறும் உடன் கூறுகின்றார்.

முதற்கண், தான்பிறந்த ஊர் புகார் நகரம் என்பார், கண்ணகியார்,

    எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்  

புள்ளுறு புன்கண் தீர்த்தோன், அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியில் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார் என்பதியே” (சிலப்.20:51-56)

என்கின்றார். இதன்கண், தன்பால் புகலடைந்த புறா ஒரு புல்லிய பறவையென எள்ளி இகழாது, அதன் பொருட்டுச் சோழவேந்தரின் முன்னோர் உடம்பரிந்து தந்தும், ஆன் கன்றைக் கொன்றது குறித்து குலத்துப் பிறந்த அருமந்த மைந்தனைத் தேராழியிற் கிடத்தி மடித்தும் செங்கோன்மை புரிந்த திறத்தைச் சுருங்கிய சில சொற்களால் பாண்டி வேந்தன் உள்ளம் கொள்ளுமாறு உரைக்கின்றார். புறாவின் புன்மை கருதி எள்ளி யிகழாமையினை, “எள்ளறு சிறப்பின்” என்றும், உடல் கொடுத்த செயலருமையோர்ந்து தேவரும் வியந்த சிறப்பை, “இமையவர் வியப்ப” என்றும் சுட்டுகின்றார். கன்றை யிழந்து ஆ, தன் அகத்துற்ற குறையை வாய்விட்டுரைக்க மாட்டாது அரசன் முக நோக்கி நின்று கண்ணீர் சொரியக் கண்டதும், அச் சோழ வேந்தன், அதன் குறையுணர்ந்து, மணம் பெரிதும் வருந்தினன்; நீயோ, என் அகத்துற்றதை யுணராது, என் கண்ணீர் கண்டு சிறிதும் இரக்கமுறாது “நீர்வார் கண்ணை” என்கின்றாய் எனக் குறிப்பால் உரைப்பாராய், “ஆவின் கடை மணி யுகு நீர் நெஞ்சு சுட” என்கின்றார். எனவே, தன்னாட்டு வேந்தர் சிறப்பைமிகுத்தோதிய தனால், கண்ணகியார்,“குறைவேண்டி வருவோர் எளியராயினும், அரியராயினும்,கேளிராயினும், பிறராயினும் அவர்தம் தகுதி நோக்காது செங்கோலின் செம்மையே நோக்கி ஒழுகினர் எங்கள் சோழ மன்னர்; நீயோ அது செய்யாது கொலை புரிந்தனை; எளியள், புதியள், இளையள் என்று என்னை இகழ்ந்து, ‘நீர் வார் கண்ணை எம்முன் வந்தோய்,’ என்றும், ‘யாரையோ நீ’ என்றும், ‘மடக்கொடி யோய்’ என்றும் வினவு முகத்தால், முறைவேண்டி நிற்கும் என் தகுதியே நோக்கு
கின்றனை; புதியோளாகிய யான் கண்ணீர் விடுதற்கு நேர்ந்த குறையினை நோக்கு கின்றிலை” என இடித்துக் கூறும் குறிப்புடையராதலை யறிகின்றோம்.

இனி, தன் தகுதியும் இது வென்பாராய், கண்ணகியார்,

“ ……………………………………………… அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா! நின்நகர்ப் புகுந்திங்கு
என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக் களப்பட்ட கோவலன் மனைவி
கண்ணகி என்பது என் பெயரே” (சிலப். 20:26-63)

என மொழிகின்றார். இங்கே, முதற்கண் தன் தகுதி விளங்க, மாசாத்துவான் சிறப்பை, “ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன்” என்கின்றார்.

பெருங்குடி வாணிகன் மகனான கோவலன் புகாரி னின்றும் மதுரை மூதூர்க்கு வந்த காரணத்தை மிகச் சுருக்கமாக, “வாழ்தல் வேண்டி” யென்றும், “ஊழ்வினைதுரப்ப” என்றும் கூறி விளக்குபவர், தான் அரசவைக்குப் போந்தது குறித்து “என் காற்சிலம்பு பகர்தல் வேண்டி நின்பாற் கொலைக் களப்பட்ட கோவலன் மனைவி கண்ணகி யென்பது என் பெயரே” என்று கூறிவிடுகின்றார். “கோவலன் கள்வனல்லன்; அவன் கொணர்ந்த சிலம்பு என்காற் சிலம்பு; அவன் செய்தது நின் நகரத்துட் புகுந்து என் காற்சிலம்பை விற்க முயன்றதே” என்பது தோன்ற, “நின்நகர்ப் புகுந்து ஈங்கு, என் காற்சிலம்பு பகர்தல் வேண்டிக்” கொலைக்களப்பட்டான் என்று குறிக்கின்றார்.

பாண்டி வேந்தற்கு இவற்றைக் கேட்டதும் நல்லறிவு விளங்கு கிறது. கண்ணகியாரின் கற்புச் சிறப்பும் கட்டுரை வன்மையும் அவன் கருத்தைக் கவற்றுகின்றன; சிறிது அச்சமும் உண்டாகிறது. ஒருவாறு தன்னைத் தேற்றிக் கொண்டு,

“ …………………….. பெண்ணணங்கே,
கள்வனைக் கோறல் கடுங் கோலன்று,
வெள்வேற் கொற்றம் காண்” (சிலப்.20:63-65)

என்று உரைக்கின்றான். தான் தீர ஆராயாது பொற்கொல்லன் சொற்கேட்டுக் கோவலன் கள்வனென்றே கருதியிருந்தானா தலின், கண்ணகியார் கோவலன் பெயர் கூறியதும், அவனைக் கோவலன் என்னாது கள்வன் என்றே சொல்கின்றான். ஆனால், அவன் சொற்கள், கோவலன் செய்தியை நன்கு ஆராய்ந்து முடிவு செய்தான் சொற்கள் போலவே இருந்தமையின், கண்ணகியார்க்கு ஆறாப் பெருஞ் சீற்றம் எழுகின்றது. கோவலன், கள்வனல்லன், என்பதைச் செஞ்ஞாயிற்றால் தீதறவுணர்ந்து தெளிந்திருக்கின்றாராகலின், வாய்மையின் பாற்படாத அவன் சொற்களை இகழ்ந்து,

“ நல்திறம் படராக் கொற்கை வேந்தே,
என்காற் பொற்சிலம்பு மணியுடை யரியே” (சிலப். 20:66-67)

என்று சொல்லுகின்றார். அவன் சொற்கள் வேறு வகையில் இருந் திருப்பின், கோவலனைக் கள்வனெனத் துணிந்ததற்குக் கொண்ட ஏது எடுத்துக் காட்டுகளை வினவி வழக்கினை விரிய ஆராய்ந்திருப்பர். நன்னெறியால் ஆராய்ந்து முறை செய்தான் போல், “கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று” என்றும், அது “வெள்வேற் கொற்றம் காண்” என்றும் கூறுதலால், வேறு வகையால் தெருட்ட முயலாது, அவனது மனப் புன்மையை ‘நற்றிறம் படராவேந்தே’ எனக் கண்டித்து, வழக்கு முடிபிற்கு ஏதுவாகிய தன் சிலம்பின் உள்ளீடு மணியாதல் கூறி, அவன் சிலம்பின் உள்ளீட்டினை யுரைக்குமாறு அவன் எதிர்பாரா வகையில், “என்காற் பொற் சிலம்பு மணியுடை அரியே” என்கின்றார்.

என்றலும், அரசற்குச் சூழ்ச்சி பிறப்பதாயிற்று; தன்னைத் தானே ஆராய்கின்றான்; தான் ஆராயாது செய்தது அவன் நினை விற்கு வருகின்றது. கண்ணகியாரின் சொற்களில் உண்மை ஒளி விட்டுத் திகழ்கிறது. மெய்யைப் பொய் வெல்லுதல் இல்லை யன்றோ? முதற்கண் சொல்லில் தோல்வி யெய்துகின்றான். தான் நற்றிறம் படராது சென்றதை எடுத்தோதி, அந்நற்றிறத்தே நிற்கப் பண்ணும் கண்ணகியாரின் நாநலத்தை வியந்து,

“ தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி;
யாமுடைச் சிலம்பு முத்துடை யரியே” (சிலப்.20:68-69)

என்று சொல்லி, அதனைத் தருவித்துக் கண்ணகியார் காண, அவர் முன் வைக்கின்றான். கண்ணகியார் அதனை விரைய எடுத்து உடைக்கின்றனர். அஃது உடைந்து விடவே, அதன் கண் இருந்த மணியரி துள்ளி மன்னவன் முகத்தில் தெறிக்கிறது. அது கண்டு அரசன் பேரவலம் கொள்கின்றான்; பெரிதும் வருந்தித் தலை குனிந்து மெய்சோர்ந்து அயர்ந்து வீழ்பவன், அரசியற் சுற்றத்தா ரோடு நன்கு ஆராயாது, பொற்கொல்லன் சொல்லொன்றே கொண்டொழிந்த தன் தவற்றினை நினைந்து,

“ பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்” (சிலப்.20:74-75)

என வாய்விட்டு அரற்றுகின்றான். அவன் குல முன்னோர் செங்கோல் கோடாத செம்மை வேந்தராதலின், தன் குலத்துக்குத் தன்னால் உண்டான குற்றம் அவன் நெஞ்சைச் சுடுகின்றது. மானம் பொறாது,

“ மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதற் பிழைத்தது; கெடுகஎன் ஆயுள்” (சிலப்.20-76-77)

என்று சொல்லிக் கொண்டே மயங்கி வீழ்ந்து உயிர்விடுகின்றான்.

வழக்குரை முடிவில் அரசன் இறந்ததும், கோப்பெருந் தேவிக்கு உரியன கூற அவள் இறந்ததும் கண்ட பின்னும் கண்ணகி யார்க்குக் காய்சினம் தணிந்திலது;

“ மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்.
பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டேன், அரசோடு ஒழிப்பேன் மதுரையும்”

(சிலப்.21:35-37)
என்று மதுரை நகரைத் தீக்கிரையாக்குகின்றார். எரிக் கடவுள் போந்து, “என்னால் விலக்கற் குரியார் யாவர்?” என்று இரந்து கேட்க, கண்ணகியார், அறத்தாறு நுவலும் பூட்கை குன்றாது,

“ பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்,
மூத்தோர் குழவி எனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க” (சிலப். 21: 33-35)

என்கின்றார்

இவ்வாறு, பாண்டிவேந்தன் இறந்ததும், அவன் தேவி உயிர் துறந்ததும் கண்ணகியார் கண் முன்னே நிகழ்ந்த போதும், மதுரை மாநகர் தீக்கிரை யாகியது கண்டபின்னும், கோவலன் கொலை யுண்டதும், அதுவே வாயிலாகத் தான் வருத்த முறுவதும் முன்னை வினைப்பயன் என்று அவர் துணிந்ததாகத் தோன்றவில்லை. அவர் கோவலனுடன் மதுரைக்கு வருங்கால், சீரங்கத்துக் கருகிலிருந்த பூம்பொழிலில், சாரணர் தோன்றி, கவுந்தியடிகளைப் பார்த்து,

“ கழிபெருஞ் சிறப்பிற் கவுந்தி, காணாய்,
ஒழிகஎன ஒழியாது ஊட்டும் வல்வினை,
இட்ட வித்தின் எதிர்ந்து வந்தெய்தி,
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா:” (சிலப்.10:70-73)

என்பன முதலியவற்றால் வினையுணர்வு கொளுத்த, உடனிருந்து கேட்டிருக்கின்றார். மதுரைப் புறஞ் சேரியில் தங்கி யிருக்குங்கால், கோவலன் கண்ணகியாரைக் கவுந்திபால் அடைக்கலப்படுத்தித் தான் மட்டில் முதற்கண் மதுரை நகர்க்குச் செல்ல விடைபெறும் போது; அவன் வருத்தம் கண்ட கவுந்தியடிகள், கல்லாதவர்,

“ தீதுடை வெவ்வினை யுருத்த காலைப்
பேதைமை கந்தாப் பெரும் பேதுறுவர்;
ஒய்யா வினைப்பயன் உண்ணுங் காலைக்
கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்” (சிலப். 14:31-34)

என்று வினையியல்பை ஓதி, காதலியைக் காட்டில் இழந்து வருந்திய இராமன் கதை, காதலியைக் கானகத்திற் கைவிட்டு நீங்கிய நளன் கதைகளைக் கூறி, நளன் தமயந்தியை,

“ இடையிருள் யாமத்து விட்டு நீக்கியது
வல்வினை யன்றோ, மடந்தைதன் பிழையெனச்
சொல்லலு முண்டேல் சொல்லாயோ, நீ” (சிலப்.14:55-57)

என்று கூறியதையும் கண்ணகியார் கேட்டிருக்கின்றார்.

மேலும், கண்ணகியார் தான் கற்ற நூற்களின் வாயிலாகவும் வினையுணர்வு பெற்றிருக்கின்றார். இவ்வுணர்வு, அவர் அரசன் முன் வழக்குரைக்கு மிடத்தே, கோவலனும் தானும் மதுரைக்கு வரநேர்ந்த வகையினை யுரைத்தற்கண், “வாழ்தல் வேண்டி ஊழ்வினைதுரப்பச், சூழ்கழல் மன்னா நின்நகர்ப் புகுந்து” என்று கூறுதலால், அவர் அறிவில் படிந்திருந்தமை தெரிகிறது.

இவ்வுணர்வு, பாண்டி வேந்தனும் தேவியும் இறந்தது கண்டும், கண்ணகியாரின் மனத்தை யடக்கியதாகத் தோன்ற வில்லை. நகரைத் தீக்கடவுட்கு ஒப்படைத்த பின்பே அவர் சினத்தீயும் தணிகின்றது. கொலை குறித்தது கேட்டுக் குமுறி யெழுந்த அவர் சினத்தீ, வழக்குரைக்கு மிடத்து முறுகி நின்று, இறுதியில், அவரது இயற்கை யறிவையும் கல்விகேள்வி களினாலாகிய செயற்கை யறிவையும் மறைத்து விடுகிறது. அதனால், அவர் வேந்தனும் தேவியும் இறந்த பின்னரும் சினம் தணியாது, நகரைத் தீக்கிரை யாக்கிய பின்பே தணிகின்றார். அன்றியும், “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும் தன், உண்மையறிவே மிகும்” (குறள்) என வள்ளுவனார் கூறியாங்கு, மதுரைநகர் தீக்கிரையாவது குறித்திருந்த ஊழ், அவர் சினத்தீ வாயிலாகப் புகுந்து தன்தொழிலை முற்று வித்துக் கொள்வதாயிற்று என்றும் கருதலாம்.

எனினும், இச்செயல் குற்றமாகவே மணி மேகலையாசிரியரால் குறிக்கப்படுகிறது. அடிகளோ இதைப்பற்றி ஒன்றும் குறித்திலர். கோவலன் கொலையுண்டது அவன் பழவினையென மதுராபதி யுரைப்பக் கேட்டபோதும் கண்ணகியார் இச்செயல் குறித்து வினைப்பயன் எனக் கூறிற்றிலர். மணிமேகலை புத்த பிக்குணியாகி, பல்வகைச் சமய தருமம் கேட்பாளாய், வஞ்சிமாநகர்க்குப் போந்து அங்கே கோயில் கொண்டிருந்த கண்ணகியாரை வணங்கி நிற்க, அவட்குக் கண்ணகியார் கடவுள் வடிவில்

“ எம்மிறைக் குற்ற இடுக்கண் பொறாது
வெம்மையின் மதுரை வெவ்வழற் படுநாள்
மதுராபதி யெனும் மாபெருந் தெய்வம்
இதுநீர் முன்செய் வினையின் பயனால்;”

------------------------------------------------------------------------

    உம்மை வினைவந் துருத்தல் ஒழியாதெனும்  

மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும்
சீற்றம் கொண்டு செழுநகர் சிதைத்தேன்,
மேற்செய்நல் வினையின் விண்ணவர்ச் சென்றேம்;
அவ்வினை யிறுதியில் அடுசினப் பாவம்
எவ்வகை யானும் எய்துத லொழியாது” (மணி 26: 11-37)

என்று உரைப்பதாக மணிமேகலை யாசிரியர் கூறுகின்றார்.

வீரபத்தினியாகிய நம் கண்ணகியார் பின்பு மதுரா பதியால் பழம் பிறப்புணர்ந்து, செங்கோடு அடைந்து, தன்னைக் கண்டு வினவிய வேட்டுவர்க்கு, “மண மதுரையோடு அரசு கேடுற, வல்வினை வந்து உருத்த காலை, கணவனை அங்கு இழந்து போந்த கடுவினையேன், யான்” என்று கூறிவிட்டு, தம்பால் வந்த வானவூர்தி யேறி விண்ணுலகு செல்வதால் தோன்றும் நலம் பலவும் இனி விரிக்கில் மிகப் பெருகும்.

கண்ணகியார் வஞ்சிநாடு சென்று ஆங்கு நின்று விண் ணுலகு சென்றதனோடு அவர் வரலாறு ஒருவாறு முடிவடைகின்ற தெனினும், அவர் அவ்வஞ்சி நாடு சென்ற பயன், தமிழ் மன்னர் தம் பெருந் தன்மையும் வெற்றிச்சிறப்பும் உலகு இனிது அறிந்தும் மகிழ்தற்கு ஏதுவாகின்றது. வேட்டுவராலும், சாத்தனாராலும், அவர் வரலாறு அறிந்த செங்குட்டுவன், உரைசால் பத்தினியை உயர்ந் தோர் ஏத்தல் கடன் எனத் தேர்ந்து கோயிலெடுத்துக் கண்ணகி யாரைக் கடவுட் படுத்தக் கருதி, கல் கொணர வடநாடு செல்வதும், தமிழ்வேந்தரை இகழ்ந்துரைத்து வடவாரியரைவென்று புறங் காண்பதும், இவர்களைப் பிணித்துக் கொணர்ந்து ஏனைச் சோழ பாண்டியர்க்குக் காட்டி அவர் தம் அரசியல் உணர்வு அமைதிகளை விளக்குவதும் பிறவும் இலங்கை வேந்தனான கயவாகு மன்னன் முதலியோர் தமிழ்ப் பெரும் பத்தினியான கண்ணகியாரைக் கடவுள் வடிவில் வைத்துப் பரவுவதும் எல்லாம் கண்ணகியாரின் கற்பு மாண்பின் விளைவாதலை யறிகின்றோம். கண்ணகியார் தமக்கு நேர்ந்த துன்பத்துக் கேதுவாகிய பாண்டி வேந்தன் செயல், தமிழ் நாட்டிற்கே நேர்ந்த பழியாகக் கருதி, அதனை வழக்குரைத்து அவனையும் உணர்வித்து, தமிழ் மகளின் கற்பு மாண்பை நகரைத் தீப்படுத்து நிலைநாட்டி என்றும் பொன்றாத இறைமைநிலை யெய்தியது எண்ணுந்தோறும் நமக்கு இறும்பூது பயப்ப தொன்றாம்.

6.  மாதவி: காவிரிப் பூம்பட்டினத்து நாடகக் கணிகை யருள் சித்திராபதியென்பாட்கு மகள் இம் மாதவி, இவள், ஆடல், பாடல், அழகு என்ற இவற்றுள் ஒன்றிலும் சிறிதும் குறைபாடு இல்லாதவள். ஐந்தாவது வயது தொடங்கிப் பன்னிரண்டாவது வரையில் ஆடலும் பாடலும் அறிவுமிகு கல்வியும் நன்கு பயின்றவள். திருந்திய அறிவும் பொருந்திய கல்வியும் விரிந்த மணமும் உடையவள். கரிகாற் பெரு வளத்தான் முன் ஏற்படுத்திய நாடக அரங்கில், இளங்கோவடிகள், இவளை நமக்குக் காட்டுகின்றார். அங்கே,

“ பொன்னியல் பூங்கொடி புரிந்துடன்வகுத்தென,
நாட்டிய நன்னூல் நன்குகடைப் பிடித்துக்” (சிலப்.3:157-158)

காண்கின்ற நம் மனம் மகிழத் தன் நாடக நூற்புலமையை நன்கு காட்டுகின்றாள்.

மாதவி கோவலனுடைய தொடர்பு பெற்று, அவன் பால் சிறந்த காதல் கொண்டு ஒழுகுகின்றாள். இதனை, அடிகள்,

“ நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துத்
கலவியும் புலவியும் காதலற்கு அளித்துஆங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்ககு எதிரிக்
கோலங் கொண்ட மாதவி” (சிலப்.4:31-34)

என்கின்றதனால் அறிகின்றோம். இவளோடு கூடியிருக்குங்கால் கோவலன் இன்புற்ற திறம்

“ காதற் கொழுநனைப் பிரிந்தலர் எய்தா
மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னோடு”

------------------------------------------------------------------------

    காமக் களிமகிழ் வெய்திக் காமர்  

பூம்பொதி நறுவிரைப் பொழிலாட் டமர்ந்து

------------------------------------------------------------------------

    பூமலி கானத்துப் புதுமணம் புக்கு,  

புகையும் சாந்தும் புலராது சிறந்து,
நகையா டாயத்து நன்மொழி திளைத்துக்
குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன்”

(சிலப்.5:189 - 20)
என்பதனால் இனிது விளங்குகிறது.

இந்திரவிழாவில் இம் மாதவி அரங்கேறி, திருமாற்குரிய தேவபாணிமுதல், திங்களைப் பாடும் தேவபாணியீறாகப் பல வகைத் தேவபாணி பாடி, பாரதி, கொடுகொட்டி, பாண்டரங்கம் முதலாகவுள்ள பதினொரு வகைக்கூத்தும் ஆடி மக்களைக் களிப்பிக் கின்றாள். அவளுடைய பாடலும் ஆடலும் அழகும் மக்கள் மனத்தை இன்புறுத்தக் கண்டு கோவலன் “ஊடற்கோலம்” உறு கின்றான். இங்கேதான், அவன் மாதவியைப் பிரிதற்குத் தோற்று வாயாகிய மனப் பிளவு தோன்றுகின்றது.

இதனை மாதவி தெளிய உணராது, வாளாது கூடற்குரிய ஊடலென்றே கருதி யொழிகின்றாள். அவனுவக்கு மாறு தனது கூந்தல் முதல் சீறடி ஈறாகப் பலவகையுறுப்பும் அழகு திகழப் புனைந்து கொள்ளுகிறாள். இக்கோலம் கொண்டது அவன் உவக்குமாறே யன்றித் தன்னைக் காண்பார் மகிழுமாறு அன்று என்பதை அடிகள், “ஊடற் கோல மொடு இருந்தோன் உவப்ப” (கடலாடு. 75) என்றும், “கூடலும் ஊடலும் கோவலற் களித்துப், பாடமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்” (கடலாடு. 109-110) என்றும் நன்கு வற்புறுத்துவதனால், இம்மாதவி, நாடக மகளாயினும் குலமகட்குரிய கற்பும் பொற்பும் உடையளாய் இருந்தமை தெளிய விளங்குகிறது. கடற்கானற்குச் செல்லும் போதும் இம் மாதவி, கோவலனுடன் ஒரே ஊர்தியிற் செல்லாது, அவன் ஒரு கோவேறு கழுதைமே லிவர்ந்து வர, தானோர் வைய மேறிச் செல்லுகின்றாள்.

மாதவி கடற்கானற் சோலையில் இருந்தபோது, தொடக்கத்தே தன் கையிலிருந்த யாழை அவன்பால் தந்து அதனை இசைத்துப் பாடுமாறு வேண்ட, அவனே குறிப்பு வேறுடைய பாட்டுக்களை முதற்கண் பாடலுறுகின்றான். இவற்றைக் கேட்ட மாதவி, இசை யின்பத்தோடு பொருள் நலமும் தேர்ந்து, “இவன் மனத்தே வேறு குறிப்பு உளது போலத் தோன்றுகிறது; அவ்வாறு இருத்தற்கு இடமில்லை; இவன் தன்நிலை மயங்கினான்” என்று உட்கொண்டு “கலவியால் மகிழ்ந்தாள் போல் புலவியால் யாழ் கை வாங்கித், தானும் ஒரு குறிப்பினள் போல்” பாடுகின்றாள். இப் பாட்டுக் குறிப்பை நன்கு ஆராய்ந்து காண்டதற்குரிய கோவலன் அதனைச் செய்யாதது அவன் குற்றமே. குறிப்பு வேறு உண்மை கண்டதும், அவன் உள்ளத்தே பொறாமை குடி கொண்டுவிடுகிறது; அறிவு மழுங்கிவிடுகிறது; வெகுளி எழுகின்றது. “கானல் வரி யான் பாட, தான் ஒன்றின்மேல் மனம் வைத்து மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்” என்று நினைக்கின்றான். நினைத்தவன் சிறி தேனும் அங்கே இருந்தானோ எனின் இல்லை; உண்மையிலே அப்போது பொழுதும்நெடிது கழிந்தது. “பொழுது கழிந்தது; வருக செல்வோம்” என்றேனும் கூறி, அவளுடன் புறப்பட்டுத்தான் வேண்டுமாயின் தனித்தேகி யிருக்கலா மன்றோ? அஃதன்றோ ஆடவர்க்குப் பண்பு. சட்டிசுட்டது, கைவிட்டது என்பது போல, குறிப்பு வேறுபாடுகண்டதும், “பொழுது ஈங்குக் கழிந்ததாகலின் எழுதும் என்று உடனெழாது” சட்டெனத் தனக்குரிய ஏவலர் சூழ்வரத் தான் பிரிந்து ஏகிவிடுகின்றான். மாதவி உண்மை விளங் காளாய்க் கையற்று மனம் வருந்தித் தன் மனையை அடைகின்றாள். இதற்குக் காரணம் ஊழ்வினை என்கிறார் இளங்கோவடிகள். இதனால், கோவலன் பிரிவுக்கு மாதவி ஏதும் பிழை செய்திலள் என்பது பெறப்படுகிறது.

பின்பு, அவள் கோவலன் பிரிவாற்றாது வருந்தி அவற்குத் தன் தோழி வயந்தமாலை வாயிலாகத் திருமுகம் விடுப்ப, அதனையும் அவன் மறுத்து விடுகிறான்; அவளோ மனம் வெறாது, “மாலை வாராராயினும், காலை காண்குவம்” என்று எண்ணிக் கையற்று இருந்தொழிகின்றாள். கோவலன் புகார் நகரின் நீங்கித் தன் மனைவியுடன் வேற்று நாட்டிற்குச் சென்றொழிந்தது அறிந்து கோசிகமாணி என்பான்பால் ஓலையொன்று விடுக்கின்றாள். அதனைக் கண்டபின்பே கோவலன், “அவள் எழுதிய இசைமொழியுணர்ந்து தன் தீதிலள்” எனத் தளர்ச்சி நீங்குகின்றான். முடிவில் கோவலன் கொலையுண்டது கேள்வியுற்றுப் புத்தமாதவர்பால் அறம் கேட்டுப் புத்தபிக்குணியாய் விடுகின்றாள். இவ்வரலாற்றால், அவள் முடிவு காறும் கோவலனை யன்றிப் பிற ஆடவரைக் கருதாத பெருங் கற்புடையவளாய் விளங்கினதை அறிகின்றோம். இதனை யறியாது, இக் கால நாடகமாக்கள், மாதவியை வன்கண்மையும் பொருள் வேட்கையும் பொய்யன்பு முடைய “மாதகி” யாக்கி நடித்துத் திரிகின்றனர்.

7.  கவுந்தியடிகள்:- இவர் சமணசமயத் துறவிகளில் பெண்பாலருள் ஒருவராவர். இவர் சோழ நாட்டில் புகார் நகர்க்கு மேற்கில் ஒரு காவதத் தொலைவில் பள்ளியமைத்து அறம் புரிந்து வருகையில், தன்பால் வந்த கோவலனையும் கண்ணகியையும் காண்கின்றார். அவர்களைக் கண்டதும், “உருவும் குலனும் உயர்பே ரொழுக்கமும், பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர்” என்று வினவுவது இவரது நல்லொழுக்கத்தைப் புலப்படுக்கின்றது.

மேலும், இவர் கோவலனை நோக்கிக் கண்ணகியின் மென்மைத் தன்மையை விதந்தோதி மதுரைக் கேகுதலை ஒழிக என விலக்கு கின்றார்; அவன் அதனைக் கேளாதொழியவே, தானும் மதுரைக்கு அவருடன் வர இசைகின்றார்.

வழிகாட்டிச் செல்லுமிடத்து முதற்கண் அவர் மனத்தே கண்ணகியின் அருமையும் மென்மையும் முன்னின்று வருத்தவே, அக்கண்ணகிக்கு அவலம் செய்வனவற்றையே எடுத்தோதி விலக்கிச் செல்கின்றார். ஏனையுயிர்கள்பால் அவர் கொண்டிருந்த அருள் நிலை மிகப் பெரிது.

“ குறுநர் இட்ட குவளையம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீர்அஞர் எய்தி
அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும்” (சிலப்.10:86-89)

என்றும்,

“ எறிநீ ரடைகரை இயக்கந் தன்னில்
பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது
ஊழடி யொதுக்கத்து உறுநோய் காணின்
தாழ்தரு துன்பந் தாங்கவும் ஒண்ணா” (சிலப்.10:10-13)

என்றும் கூறுவன அவரது அருளறத்தின் இயல்பை நன்கு தெரிவிக்கின்றன.

சாரணர் தோன்றி அக் கவுந்தியடிகளை நோக்கி,

“ கழிபெருஞ் சிறப்பிற் கவுந்தி, காணாய்,
ஒழிகஎன ஒழியாது ஊட்டும் வல்வினை,
இட்ட வித்தின் எதிர்ந்து வந்தெய்தி,
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா
கடுங்கான் நெடுவெளி இடுஞ்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை யுயிர்கள்”

(சிலப்.10:170-175)
என்று ஓதி அருகனுடைய பல மாண்புகளையும் எடுத்துரைக் கின்றனர். அவற்றைக் கேட்டதும் கவுந்தியடிகள் கூறுவன வற்றால் அவர் தம் சமய மெய்ப்பொருள்பால் கொண்டிருந்த திண்ணிய பற்று விளங்குகிறது. அவர்,

“ ஒருமூன் றவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதென் செவியகம் திறவா;
காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு
நாம மல்லது நவிலாது என்நா;
ஐவரை வென்றோன் அடியிணை யல்லது
கைவரைக் காணினும் காணா என்கண்;
அருளறம் பூண்டோன் திருமெய்க் கல்லதுஎன்
பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது;
அருகர் அறவன் அறிவோர்க் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா;
மலர்மிசை நடந்தோன் மலரடி யல்லதுஎன்
தலைமிசை யுச்சி தான்அணிப் பொறாஅது;
இறுதியில் இன்பத் திறைமொழிக் கல்லது
மறுதர ஓதிஎன் மனம்புடை பெயராது;”

(சிலப்.10: 104 -217)
என்பது அதற்குத் தக்க சான்றாவதாம். வழியில் வந்து இகழ் வுரை வழங்கிய வம்பப் பரத்தையரைக் குறுநரியாகுக எனச் சபித்ததும், பிறகு சாபவிடை வழங்கியதும் அவருடைய ஆற்றலுக்குத் தக்க சான்றாகின்றன.

மாடலன் போந்து கோவலற்கு மதுரைக்குரிய நெறி கூறுவான் பிலத்தின் பெற்றியினைக் கூற, கவுந்தியடிகள், ‘நலம்புரி கொள்கை நான்மறையாள, பிலம்புக வேண்டும் பெற்றியீங் கில்லை’ என்று மறுத்து,

“ வாய்மையின் வழாது மன்னுயிர் ஒம்புநர்க்கு
யாவது முண்டோ எய்தா அரும்பொருள்
காமுறு தெய்வம் கண்டடி பணிய
நீபோ; யாங்களும் நீள்நெறிப் படர்குதும்”

(சிலப். 11: 158-161)
என்று மொழியும் திறம் அவரது விழைவின்மையைக் காட்டுகின்றது.

தன்பால் கண்ணகியை விடுத்துத் தான் தனியே மதுரை மூதூர்க்குச் சென்று வரவேண்டுமென்று கூறி வருந்திய கோவலனுக்கு அவர் மனைத்தொடர்பின் துன்பமும் இராமன் நளன் முதியோர் வரலாறும் கூறி, தெருட்டுவது அவரது துறவு நெறியும் அறிவின் ஒட்பமும் நன்கு உணரக் காட்டுகின்றது.

அவர் கண்ணகியை மாதரியென்னும் ஆய்ச்சிபால் அடைக் கலப்படுத்துமிடத்துக் கூறுவன மிக்க இன்பந்தரு வனவாகும். கண்ணகியைப் பேணுமாறு இது என்பார்போல், கவுந்தியடிகள் மாதரியை நோக்கி.

“ மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் தீட்டி,
“ தே மென் கூந்தல் சின்மலர் பெய்து
தூமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின்
ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத்
தாயும் நீயே யாகித் தாங்கு” (சிலப். 15:131-136)

என்றும், கண்ணகியின் கற்புப் பெருமையைக் குறித்து,

“ இன்துணை மகளிர்க்கு இன்றியமையாக்
கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்;
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீணில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு என்னும்
அத்தகு நல்லுரை அறியா யோநீ”

(சிலப். 15:142-148)
என்றும், துறவியாகிய தான் தரும் அடைக்கலத்தைத் தாங்கின் வரும் பயன் குறிப்பாராய்,

“ தவத்தோர் அடைக்கலம் தான் சிறிதாயினுங்
மிகப்பேரின்பம் தருவது கேளாய்”

(சிலப். 15:149-150)
என்றும் கூறுகின்றார்.

இவ் வண்ணம் கண்ணகிபால் பேரன்பு செலுத்திய கவுந்தி யடிகள், கோவலன் கொலையுண்டதும் பிறவும் கேட்டு உண்ணா நோன்பிருந்து உயிர்பதிப் பெயர்க்கின்றனர்.

இவ்வாறே பிறர் ஒவ்வொருவருடைய குணம் செயல்களையும் தனித்தனியே காணலுறின், வரம்பின்றிப் பெருகு மாதலின், இம்மட்டில் நிறுத்தி, இவ்விலக்கியத்துள் காட்டப்படும் வரலாறுகள் சில காண்பாம்.

X. வரலாறுகள்:- இதன்கண் சோழவேந்தர் மரபில் தூங் கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், முசுகுந்தன், மனுவேந்தன், கரிகால்வளவன் முதலியோர் செய்த சிறப்புடைச் செய்திகள் குறிக்கப்படுகின்றன. பாண்டிவேந்தருள் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் செய்தியும், இந்திரன் சென்னியில் வளையுடைத்தவன், கடலில் வடிவேலெறிதலும், இந்திரன் ஆரத்தைத் தான் பூண்டு கோடலும், மேகத்தைச் சிறை செய்தலுமாகிய செய்திகளும், பாண்டியன் கைகுறைத்துக் கோடலும் பிறவும் காணப்படுகின்றன. சேரவேந்தர் இமயத்தில் விற்பொறித்ததும், கடலில் கடம்பரை யெறிந்ததும், நேரிவாயில் என்னுமிடத்து எதிர்த்த வேந்தர் ஒன்பதின்மரை வென்றதும், முடிவேந்தர் எழுவரை வென்று, அம் முடிப் பொன்னும் மணியும் கொண்டு ஆர மொன்று செய்து சேரவேந்தர் வழிவழியாக மார்பிற் பூண்டொழுகியதும், ஆரிய மன்னரையும் பிறரையும் வென்றதும் பிறவும் விரியக் கூறப்படுகின்றன.

இவையேயன்றி, இறைவன் மூவெயில் முருக்கியதும், முருகனைப் பயந்ததும், முருகன் சரவணத்தே அறுவர் பாலுண்டு வளர்ந்ததும், அவுணரை வென்றதும், வள்ளியை வேட்டதும், திருமால் வைய மளந்ததும், நரசிங்கமானதும், இராமன் சீதையை இழந்து வருந்தியதும், இராவணனை வென்றதும், கஞ்சனைக் கண்ணன் கொன்றதும், பஞ்ச வர்க்குத் தூது சென்றதும், இந்திரன் மலைகளின் சிறகை யறிந்ததும், அவன் மகன் சயந்தன் என்பான் அகத்திய முனிவனால் சாபமுற்று மூங்கிலானதும், நளன் கதையும், பிறவும் ஏற்றவிடத்து எடுத்துக்காட்டப்படுகின்றன.

இவற்றோடு இடையிடையே துறவிகட்குத் தானம் செய் வோர் பெறும் பேறும், கள்வர் தொழில் வன்மையும் கற்புடைய மங்கையர் சிறப்பும் பிறவும் விளங்கும் வரலாறுகள் பல ஓதப்படு கின்றன.

கோவலன், கண்ணகி, மாதவி, தேவந்தி முதலியோர் பிறப்பு வரலாறும், பழம் பிறப்பும் சுட்டப்படுகின்றன.

XI. பேரூர் சிற்றூர்களின் நலங்கள்: இந்நூற்கண் ஆசிரியர் இளங்கோவடிகளால் காவிரிப்பூம்பட்டினம், மதுரை, உறையூர், வஞ்சி முதலிய பேரூர்களும் வேறு சில சிற்றூர்களும் ஓதப் பெறுகின்றன. இவற்றுள், காவிரிப்பூம் பட்டினம், மதுரை என்ற இரண்டுமே நன்கு விரியக் கூறப்படுகின்றன. ஏனைய சிறிதே குறிக்கப்பெறுகின்றன. இவற்றை இந்நூலிற் காணும் முறையிலே காண்பாம்.

 
1.  காவிரிப்பூம்பட்டினம்: இதனைப் புகார் என்றும் கூறுவர். இது சோழநாட்டின் தலைநகரம்; காவிரியாறு கடலொடு கலக்கு மிடத்தே இருப்பது. சிலப்பதிகாரக் காலத்தே இங்கே கரிகாற் சோழன் இருந்து வருகின்றான். இது மருவூர்ப்பாக்கம், பட்டினப் பாக்கம் என்ற இரு பெரும் பிரிவாகவுள்ளது. பட்டினப் பாக்கத்தில், அரசர், வணிகர், மறையவர், வேளாளர் முதலியோர் பெருந் தெருக்களும்; ஆயுள்வேதர், நாழிகைக் கணக்கர் முதலியோர் வீதிகளும்; முத்து, மணி முதலியவற்றால் மாலை தொடுப்போர், சங்கு, பவளம் முதலியவற்றை யறுத்துக் கடைவோர் முதலியோர் வாழும் வீதிகளும்; சூதர், மாகதர், வேதாளிகர், நாடகக் கணிகையர் முதலியோர் தெருக்களும்; பல்வகை இசைக் கருவியாளர், வேழம்பர் முதலியோரும், தேர்ப்பாகர், யானைப்பாகர், குதிரைவீரர், படை வீரர் முதலியோரும் வாழும் தெருக்களும் இருக்கின்றன.

மருவூர்ப்பாக்கம் பட்டினப்பாக்கத்திற்குத் கிழக்கில் இருக்கிறது. இங்கே, நகர வீதியும், அருங்கலமறுகும், கூலவீதியும், பிட்டு அப்பம், கள், மீன், உப்பு, வெற்றிலை, நறுவிரை (Spices) முதலியவற்றை விற்போர் வீதியும் இருக்கின்றன. மேலும்,

“ கஞ்ச காரரும் செம்பு செய்குநரும்
மரம்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்” (சிலப். 5: 28-32)

கிழியினும் கிடையினும் சித்திரவேலை செய்து விற்பவரும், இசைப்பாணரும் பிறரும் வாழும் வீதிகள் வேறே யுள்ளன. நகர வீதியில் வேயா மாடம், பண்டசாலை, மான்கட் காலதர் மாளிகை (Palatial buildings with appropriate ventilators.) மிக்க நயமான வேலைப்பாடமைந்த யவனர் பெருமனைகளும், கடலிற் கலம் செலுத்தி வாணிகம் செய்யும் வணிகர் பெரு மனை மாடங்களும் அமைந்திருக்கின்றன. இவ்வீதிகளில், வண்ணமும் சுண்ணமும் சந்தனமும் பூவும் பிற விரைப் பொருள்களும் விற்போர் தொகை மிகுந்திருக்கும்.காருகர் வீதியில், பட்டு, எலிமயிர், பருத்தி என்ற இவற்றால் மிக நேர்த்தியான உடைகள் நெய்யப்படுகின்றன. அருங்கல வீதியில் உயரிய துணிமணிகளும், பவழம், முத்து, பல்வகை மணிகள், பொன் முதலியனவும், அகில், சந்தனம் முதலிய விரைப் பொருள்களும் விற்கப்படுகின்றன. கூலவீதியில் நெல், வரகு, சாமை முதலியன விலையாகின்றன.

இப்பகுதி கடற்கரை யாதலின், இரவுக் காலத்தில் கானற் சோலையில்,

“ வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்,
செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்,
காழியர் மோதகத்து ஊழுறு விளக்கமும்,
கூவியர் காரகல் குடக்கால் விளக்கமும்,
நொடைநவில் மகடூஉக் கடைக்கெழு விளக்கமும்,
இடையிடை மீன்விலை பகர்வோர் விளக்கமும்,
இலங்குநீர் வரைப்பில் கலங்கரை விளக்கமும்,
விலங்குவலைப் பரதவர் மீன்திமில் விளக்கமும்,
மொழிபெயர் தேத்தோர் ஒழியா விளக்கமும்,
கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும்
எண்ணு வரம்பறியா இயைந்தொருங் கீண்டிக்” (சிலப்.6:134-145)

காண்பார் கண்கட்கு நல்விருந்து செய்கின்றன. அவ்விட த்தே,

“ நிரைநிரை யெடுத்த புரைதீர் காட்சிய
மலைப்பல் தாரமும் கடற்பல் தாரமும்
வளம் தலைமயங்கிய துளங்குகல இருக்கை” (சிலப்.6:152-154)

இனிய காட்சி வழங்குகிறது.

இவ்விரு பாக்கங்கட்கும் இடையே பரந்த பெரும் பொழில் ஒன்று உளது. இதன்கண் வானளாவ உயர்ந்த மரங்கள் நிற்கின்றன. அவற்றின் அடியில் பந்தரிட்டு வணிகர் பலர் கடை வைத்து வாணிகம் செய்கின்றனர். இது நாளங்காடி எனப்படும். இவ்விடம், “கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்” மிகுந்து, இரண்டு பெருவேந்தர்தம் பொரு படையின் முனைபோலத் தோன்றும். மேலும், இந்நாளங்காடியில், வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பூத சதுக்கம், பாவை மன்றம் என ஐவகை மன்றங்கள் உள்ளன. காவற்பூதத்துப் பலிபீடிகையும், உயிர்ப் பலி வழங்கும் முழுப்பலி பீடிகையும் இவ்விடத்தே இருக்கின்றன.

கரிகால் வளவன் வடநாடு சென்று இமயத்தில் புலி பொறித்து வருங்கால், அவற்கு வடவேந்தர் நிருமித்த மண்டப வகைகளும் இந் நாளங்காடியில் இருக்கின்றன.
அவை,

“ மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும்,
மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன்”
பகைபுறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்,
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்தோங்கு மரபின் தோரண வாயிலும்,
பொன்னினும் மணியினும் புனைந்தன வாயினும்
நுண்வினைக் கம்மியர் காணா மரபின,
துயர்நீங்கு சிறப்பினவர் தொல்லோ ருதவிக்கு
மயன்விதித்துக் கொடுத்த மரபின இவைதாம்
ஒருங்குடன் புணர்ந்தாங்கு உயர்ந்தோ ரேத்தும்
அரும்பெறல் மரபின் மண்டபம்” (சிலப். 5:99-110)

என ஆசிரியர் இளங்கோவடிகளால் விரியக் கூறப்படுகின்றன.

இனி, இக் காவிரிப்பூம்பட்டினத்தில் மேற்கூறிய வீதிகளும், மண்டபங்களும், மன்றங்களுமேயன்றிப் பல்வகைக் கோட்டங்களும் கோயில்களும், குளங்களும் உள்ளன. கோட்டங்கள், வச்சிரக் கோட்டம், செங்கதிரோன் கோட்டம், நிலாக் கோட்டம், மாசாத் தன் கோட்டம், நிக்கந்தக் கோட்டம் முதலாகப் பல உள்ளன. கோயில்கள்,

“ பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்,
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்,
வால்விளை மேனி வாலியோன் கோயிலும்,
நீலமேனி நெடியோன் கோயிலும்,
மாலைவெண்குடை மன்னவன் கோயிலும்” (சிலப்.5:169-173)

எனப் பல காணப்படுகின்றன.

இந் நகரத்தைச் சூழ்ந்து பெரிய மதிலொன்றுளது. அதற்கு மேற்கில் ஒரு பெரிய வாயில் உண்டு. அதனை “உலக விடைகழி” யென்பர். அதற்கும் அகநகர் மதில்வாயிற்கும் இடையே மணி வண்ணன் கோயில் உளது. அதனை வலங் கொண்டு சென்று, உலக விடைகழி நீங்கி, சிறிது தொலைவு சென்றால், இலவந்திகைப் பொழிலைக் காணலாம். இதனை அடிகள்,

“ கலையிலாளன் காமர் வேனிலொடு
மலைய மாருதம் மன்னவற் கிறுக்கும்
பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர்
இலவந்திகை” (சிலப். 10:20-23)

என்று புகலுகின்றார். இதற்கு ஓர் நல்ல எயில் உளது. இதனைச் சுற்றிக்கொண்டே, மேற்கு நோக்கிச் செல்லும் பெருவழி காவிரியின் வடகரையைச் சார்ந்து போகின்றது.

2.  மதுரை: கேரவலன் ஒரு காவத தூரம் கண்ணகி யாருடன் சென்று, அதற்குமேல், மதுரை மூதூர் முப்பது காத தூரத்தில் இருப்பதாகக் கூறுகின்றான். இது பாண்டி நாட்டின் தலைநகரம் என்பது உலகறிந்த செய்தி. இதனைக் கவுந்தியடிகள், “தென்றமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை” (10-58) என்று பாராட்டுகின்றனர். இதற்கு வடக்கே வையையாறு ஓடு கின்றது. இவ்யாற்றை அடிகள், “புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி, வையை யென்ற பொய்யாக் குலக்கொடி” (13:169-170) என்பர். வடக்கண் இருந்து, இம் மூதூர்க்குச் செல்வோர் இதனைக் கடந்துதான் நகரையடைய வேண்டும். இது மிக்க நீர்ப்பெருக்கினை யுடைய தாகலின், இதனை நாவாய் ஏறியே கடக்கின்றனர். அதற்காக,

“ பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும்,
அரிமுக அம்பியும் அருந்துறை யியக்கும்
பெருந்துறை மருங்கில்” (சிலப்.13:176-178)

இருந்த வண்ணம் இருக்கின்றன. இப் பெருந்துறைக்குச் செல்லும் வழியில் சிறிது தூரத்தே சிறு காவற்காடு தோன்றும். அதனைச் சார்ந்து ஆழ்ந்த அகழியுளது. அதன் மருங்கில் சிறிது சுற்றிச் சென்றால் மதுரை மூதூரின் புறஞ்சேரி காணப்படும். அது,

“புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி,
வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீர் ஏரியும்
காய்க்குலைத் தெங்கும் வாழையும் கழுகும்
வேய்த்திரட் பந்தரும் விளங்கிய இருக்கை”

(சிலப். 13:191-194)

யாகும். அவ்விடத்தே அறம்புரியும் மாந்தரன்றிப் பிறர் எவரும் சென்று தங்குவது இல்லை.

இந் நகர்க்குட் செல்லும் கோவலனைப் பின்பற்றியே நாம் செல்ல வேண்டும்; புகார் நகரம் போல, இந்நகரம் அடிகளால் குறிக்கப்படவில்லை. புறஞ்சேரியிலிருந்து இம்மா நகர்க்குட் செல்லச் சுருங்கை வழி (Tunnel) யொன்றுளது. அது பெயரளவில் சுருங்கையாயினும், பெருங்களிற்றினம் தம் நிரை குலையாது இனிது செல்லற்கேற்ப உயரமும் அகலமும் வாய்ந் திருக்கிறது. அதன் முடிவில் நகரின் மதில் வாயில் இருக்கிறது. அங்கே வாளேந்திய யவன வீரர் காவல் புரிகின்றனர். செல் வோர் அவ்வீரர் கண்டு ஐயுறாவகையில் செல்ல வேண்டும்; சிறிது அயிர்ப்புண்டாயினும் செல்வோரை அவர் உள்ளே புகவிடார்.

வாயிலை யடுத்தே பெருஞ் செல்வம் மலிந்த பெரு வீதிகள் காணப்படுகின்றன. நக்கீரனாரும், “பொருநர்த் தேய்த்த போரறு வாயில், திருவீற்றிருந்த தீதுதீர் நியமத்து, மாடமலி மறுகின் கூடல்” (முருகு) என்றே கூறியுள்ளார். அவ்வீதிகளும், அரசர் வீதியும், கலைமுழுதும், வல்ல கணிகையர் வீதியும், பீடிகை வீதியும், அங்காடி வீதியும் மணி வகைகளை ஆராய்ந்து காணும் வண்ணக்கர் வீதியும், பொன் வகை தெரியும் பொற்கடை வீதியும், அறுவை வீதியும், கூலவீதியு மெனப் பலதிறப்படு கின்றன. வண்ணக்கர் வீதியில் மணிவகை பலவற்றினும் காணப்படும் குற்றமும் குணமும் நன்கு ஆராயப் பெறுகின்றன. பொற்கடை வீதி நால்வகைப் பொன்னின் மாற்றும் வகையும் மதிக்கப்படுகின்றன. அறுவை வீதிகள்,

“ நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும்,
பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதி” (சிலப்.14:205-207)

என்றும் கூல வீதிகள்,

“ நிறைக்கோல் துலாத்தர் பறைக்கண் பராரையர்
அம்பண வளவையர் எங்கணும் திரிதரக்
கால மன்றியும் கருங்கறி மூடையொடு
கூலம் குவித்த கூல வீதி”

என்றும் சிறப்பிக்கப் பெறுகின்றன. அங்காடி வீதியில் பல வகைக் கைத்தொழில்கள் நடைபெறுகின்றன. அரசர் முதலா யினார்க்கு வேண்டும் வையமும் தேரும் வண்டியும், போர்க்கு வேண்டும் படைக் கருவிகளும் இங்கே செய்யப்படுகின்றன. பலவகை ஓவியக்காரர் தம் தொழிலை நடத்துகின்றனர். செம்பு, வெண்கலம் முதலியவற்றாலும் நார், மாலை முதலிய வற்றாலும் பிறவற்றாலும் பல தொழில்கள் நடக்கின்றன.

“ செம்பிற் செய்நவும் கஞ்சத் தொழிலவும்
வம்பின் முடிநவும் மாலையிற் புனைநவும்
வேதினத் துப்பவும் கோடுகடை தொழிலவும்
புகையவும் சாந்தவும் பூவிற் புனைநவும்”

இவ்வங்காடி வீதியில் காணப்படுகின்றன. இவ்வீதிகளே யன்றி, மன்றமும், கவலை யும், மறுகும் எனப் பலப்பல வீதிகளும் செறிந் திருக்கின்றன.

இந்நகரின் மதிலிடத்தே பலவகைப் பொறிகள் இருக்கின்றன. அவற்றை அடிகள்,

“….. வளைவிற் பொறியும்,
கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
காய்பொன் உலையும் கல்லிடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் துலாமும் கைபெய ரூசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும்
கோலும் குந்தமும் வேலும் பிறவும்” (சிலப்.15:207-216)

என்று ஒதுகின்றார். இதன் கண் வரும் கல்லுமிழ் கவண் என்பது, ஆர்க்கிமிடீஸ் (Archemedis) என்னும் யவனப் புலவன் தன்னாட்டு வேந்தற்குச் செய்துதந்த கல்லுமிழ் கவண் என்ற பொறியாக இருக்குமோ என்று நினைத்தற்கு இட முண்டாகிறது. இப்பொறிகளின் அமைப்பும், உருவமும், ஆராய்ந்து காணப்படின், உண்மை புலனாகும்.

3.  சீரங்கம். இது காவிரி யாற்றின் இடைக்குறை, இங்கே பல்வகை மரங்கள் செறிந்த பொழில் உளது. சாரணர் இருந்து தருமம் சாற்றும் சிலாதலம் ஒன்று காணப்படுகிறது. இதன்மேல் .இருந்து தான், காவிரிப்பூம்பட்டினத்தில் தோன்றிய சாரணர், இங்கேயும் தோன்றிக் கவுந்தியடிகட்கு அறம் கூறுகின்றனர். இங்கே திருமால் எழுந்தருளியிருக்கும் கோலத்தை, மாடலன் கூற்றாக அடிகள்,

“ நீல மேக நெடும்பொற் குன்றத்துப்
பால்விரிந் தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை யருந்திறல்
பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணம்” (சிலப்.11:35-40)

என்று பாராட்டுகின்றார். கவுந்தியடிகள் இத்திருப்பதி வழியாக வந்தாராயினும், திருவமர் மார்பன் கிடந்த வண்ணத்தைத் தாமும் காணவில்லை; கோவலன் கண்ணகி என்ற இருவரையாதல் காணுமாறு செய்தாரில்லை. காண்டற்கு விரும்பிச் செல்வதாக மாடலன் கூறக்கேட்ட இக்கவுந்தி யடிகள்,

“ வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநர்க்கு
யாவது முண்டோ எய்தா அரும்பொருள்?
காமுறு தெய்வம் கண்டபடி பணிய
நீ போ” (சிலப்.11:158-161)

என்று கூறுவதை நோக்கின், அவர்க்குச் சீரகத்துத் திருமாலைக் காண்பதில் விருப்பமில்லை யென்பது தெரிகின்றது.

4.  உறையூர்: இது கோழியூர் என்றும் வாரணம் என்றும் கூறப்படுகிறது. இந் நகரை, ஆசிரியர் இளங்கோ வடிகள், “முறஞ் செவி வாரணம் முன்சமம் முருக்கிய, புறஞ்சிறை வாரணம்” (10:247-8) என்கின்றார். அரும்பதவுரைகாரர், “யானையைக் கோழி முருக்கலால் கோழியென்று பெயராயிற்று. யானையைச் சயித்த கோழி தோன்றினவிடம் வலியுடைத்தென்று கருதி அவ்விடத்து அதன் பெயராலே, சோழன் ஊர் காண்கின்ற பொழுது, சிறையும் கழுத்துமாக ஆக்கியவதனால், புறம்பே சிறையையுடைய கோழி (புறஞ் சிறை வாரணம்) என்றாயிற்று” என்றார், அடியார்க்கு நல்லார், அரும்பத வுரைகாரரை மறுத்து, “வாரணம் - கோழி; ஆவது உறையூர். முற்காலத்து ஒரு கோழி யானையைப் போர் தொலைத்தலால் அந்நிலத்திற் செய்த நகர்க்குக் கோழி யென்பது பெயராயிற்று. அந் நகர் காண்கின்றபொழுது சிறையும் கழுத்துமாக ஆக்கியவதனால், புறம்பே சிறையையுடைய கோழி யென்றாயிற் றென்பாரு முளர். அற்றன்று, புறஞ்சிறை வாரணமென்பது சிலேடை; புறத்தே சிறையையுடைய கோழியும், புறஞ் சேரியை யுடைய உறையூரும். ‘புறஞ்சிறைப் பொழிலும் என்ப மேலும்’” (14:1) என்று உரைத்தார். புறஞ்சிறை - புறஞ்சேரி.

இவ்வூர், சங்க காலத்திருந்தே சோழ மன்னர்க்குத் தலை நகராக இருந்திருக்கிறது. அடிகள் காலத்தும், இவ்வூரிடத்தே சோழன் பெருங்கிள்ளி யென்பான் இருந்து ஆட்சி புரிந்திருக் கின்றான். இவண் கண்ணகியார் விண்ணுலகு புக்க பின், “எத்திறத் தானும் வரந்தரும் இவள் ஓர் பத்தினிக் கடவுளாகும் என நங்கைக்கு (கண்ணகிக்குப்) பத்தினிக் கோட்டம்” எடுத்து நாளும் வழிபாடும் நிகழுமாறு அமைக்கின்றான்.

இவ்வுறையூரைச் சுற்றி அழகிய மதிலும் கிடங்கும் உண்டு. அவற்றை யடுத்துக்காவற்காடும், காட்டிற்கும் கிடங்கிற்கும் இடையே புறஞ்சேரியும், பூம்பொழில் பலவும் உள்ளன. கண்ணகி யாரும் கோவலனும் தம்முடன் வரக் கவுந்தியடிகள் வந்தபோது, தம் எதிரே போந்து இகழ்ந்துரையாடிய வம்பப் பரத்தையும் வறுமொழியாளனும் குறுநரியாகி, பன்னிருதிங்கள் இக்காவற் காட்டிடத்தே வாழ்ந்து துயருற்று முடிவில் பழவடிவு எய்துக என்று உரைக்கின்றார்.

இவ்வூரில் நிக்கந்தக் கோட்டம் ஒன்றுள்ளது. அதன் கண் அசோகின் நீழலில் முக்குடைக் கீழ் அருக பரமேட்டி வீற்றிருக் கின்றார். அவ்விடத்தே சாவகர் பலர் வாழ்கின்றனர். கவுந்தியடிகள், கோவலன் கண்ணகியுடன் சென்று, “கோதை தாழ் பிண்டிக் கொழு நிழல் இருந்த, ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கி,” சீகந்தப் பள்ளியை யடைகின்றார். அவரைச் சாவகர் பலர் வந்து வரவேற்கின்றனர். அவர்கட்கு அவர், திருவரங்கத்தே தமக்குச் சாரணர் உரைத்த தருமத்தை உரைக்கின்றார். அன்று அவ்விடத்தே கழித்து, மறுநாள் வைகறைப் போதிலெழுந்து தென் மதுரை நோக்கிச் செல்கின்றார்.

இவ்வூர்க்குத் தெற்கு வாயிலின்கண் சீறூர் ஒன்றுள்ளது. அதனை நேரிவாயில் என்பர். சேரன் செங்குட்டுவன், தன் மைத்துன வளவன் கிள்ளி யென்பானுக்குத் துணையாகி, எதிர்த்த ஒன்பது மன்னரையும் இவ்விடத்தே போருடற்றி வென்றி யெய்தியதாக, மாடல மறையோன்,

“ மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
இளவரசு பொறார் ஏவல் கேளார்
வளநா டழிக்கும் மாண்பின ராதலின்
ஒன்பது குடையும் ஒருபக லொழித்து அவன்
பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்”

(சிலப்.27:118-123)
என்றும், “ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை, நேரிவாயில் நிலைச்செரு வென்று” என்றும் எடுத்து மொழிகின்றான். இவ்வூர்க் கண் பெரிய நிகழ்ச்சி யொன்றும் கண்ணகியார் வரலாற்றில் நிகழாமையின், இதனை அடிகள் விரித்துக் கூறவில்லை போலும்.

5.  வஞ்சிமாநகர்:- இந்நூற்கண் இளங்கோவடிகள், இந் நகரத்தை ஏனைப் புகார், மதுரை முதலியவற்றைக் கூறியது போலக் கூறவில்லை. இது சேரர் தலைநகராக இருந்த தென்பதுமட்டில் ஒரு தடையுமின்றி உணரக்கிடக்கின்றதே யன்றி, இவ்விடத்தே யிருந்த தென்பதற்குத் தக்க சான்றுகள் விளக்கமாய்த் தெரிந்தில. இதனைக் கருவூர் என்று அரும்பத வுரைகாரர் கூறுகின்றார். “பூவா வஞ்சிப் பொன்னகர்ப் புறத்து” (25:148) என்பதன் அரும்பதவுரை காண்க. டாக்டர், உ.வே. சாமிநாதையர் இது, “வஞ்சிக்களம், “வஞ்சிக் குளம், அஞ்சைக்களம் எனவும் வழங்கும்” எனக் குறித்துள்ளார். முன்பே கூறியவாறு, இதனைப்பற்றி யாராயப்புகின் இக் கட்டுரை விரிதற்கஞ்சி, இந் நூல் காட்டும் குறிப்புக்களை மட்டும் ஈண்டுத் தருகின்றோம்.

இம் மாநகரின் புறத்தே குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற நான்கு நிலப்பகுதிகள் இருக்கின்றன. குறத்தியர் பாடும் குறிஞ்சிப் பாணியும், உழவர் பாட்டும், முல்லை நிலத்தே கோவல ரூதும் குழற்பாணியும், நெய்தற்பகுதியில் இருந்து பரதவர் மகளிர் பாடும் பாட்டும் இந்நகரத்தவர் இனிது கேட்கின்றனர். இங்கே இலவந்தி வெள்ளி மாடம், குணவாயிற் கோட்டம், வேளாவிக்கோ மாளிகை எனப் பல பெரு மாளிகைகள் இருக்கின்றன. இவற்றோடு, இந் நகர்க் கண்,

“ ஐங்கணை நெடுவேள் அரசு வீற்றிருந்த
வெண்ணிலா முன்றிலும் வீழ்பூஞ் சேக்கையும்,
மண்ணீட்ட டரங்கமும் மலர்ப்பூம் பந்தரும்
வெண்கா லமளியும் விதான வேதிகைகளும்”

(சிலப்.28:42-45)
உள்ளன. இம் மூதூர் மதிலருகே ஆன்பொருநை என்றொரு யாறு ஓடுகிறது. “வாழி வருபுனல்நீர் ஆன்பொருநை, சூழ்தரும் வஞ்சி” என்று இந்நூலே யன்றி, “வஞ்சிப்புறமதில் அலைக்கும் கல்லென் பொருநை” என்று புறநானூறும் (387) கூறுகிறது. இந்நூலில், மாடலன் செங்குட்டுவனை வாழ்த்து மிடத்து, “மண்ணாள் வேந்தே நின்வாழ் நாட்கள், தண்ணான் பொருநை மணலினும் சிறக்க” (28; 125-126) என்றலின், ஆன்பொருநை வஞ்சி நாட்டிற்குரிய தென்பது தெரிகிறது.

மேலே கூறிய பெருமாளிகையுள், இலவந்தி வெள்ளி மாடத்தே செங்குட்டுவன் தன் தேவி இளங்கோ வேண்மாளுடன் இனிதிருக் கின்றான். இம் மூதூரின் நடுவே பொன் மாளிகை யொன்று முளது.

குணவாயிற் கோட்டத்தை ஓர் ஊராகவும் கூறுவர். இவ் விடத்தே இளங்கோவடிகள் அரச போகத்தைத் துறந்து துறவு பூண்டு அறம்புரிந்து வருகின்றார். இவர்பால் மணிமேகலை யாசிரியரான சாத்தனார் உடனிருக்கையில், குறவர் பலர் போந்து கண்ணகியார் விண்ணாடு சென்ற செய்தியைக் கூறுகின்றனர். உடனிருந்த சாத்தனார், “யான் அறிகுவன் அதுபட்டது” என்று, கண்ணகியாரின் இம்மை வரலாறும், முற்பிறப்புச் செய்தியும் எடுத்துரைக்கின்றார். அதுகேட்கும் அடிகள், “சூழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகார மென்னும் பெயரால், நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்” என்று சாத்தனாரையும் உளப்படுத்திக் கூறுகின்றார். சாத்தனார், அக்குறிப் புணர்ந்து,

“ முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுக” (சிலப். பதிகம்.61-62)

என்று மொழிகின்றார். அடிகளும் இசைந்து இவ்வரிய முத்தமிழ்க் காவியத்தைச் செய்தளிக்கின்றார்.

இலவந்தி வெள்ளி மாடத்தின்கண் சேரன் செங்குட்டுவன் தேவியுடன் இனிதிருப்பவன், உரிமைச் சுற்றமும் படை வீரரும் உடன்வர மலைவளம் காண விரும்பி, மலைச் சாரலில் இனியதோர் இடத்தை யடைந்திருக்கின்றான். அது பேரியாற்றின் கரை. அங்கு வந்த குறவரால் கண்ணகியாரின் வரலாறு தெரிந்து, வஞ்சிக் காண்டத்துக் கூறப்படும் செயல்களை நிகழ்த்தலுறுகின்றான்.

இவ்வஞ்சி மூதூரின் புறத்தே வேளாவிக்கோ மாளிகை இருக்கிறது. வடநாடு சென்று வடவாரியரை வென்று அவருள் தமிழரசரை இகழ்ந்து செருக்கிய கனக விசயரைச் சிறைப்படுத்திக் கொண்டு வந்த செங்குட்டுவன், பின்பு சினம் தணிந்து, இயல் பாகவே உள்ள அருளுள்ளத்தால், அவர்க்குச் சிறை வீடு தந்து, தான் மாடலன் சொற்படி வேள்வி முடிக்குங் காறும் அக்கனகவிசயரை இம்மாளிகையில் அரசர்க்குரிய பெருஞ் சிறப்புடன் இனிதிருக்கச் செய்கின்றான்.

இந் நகர்க்கண், தமனிய மாடத்தில், செங்குட்டுவன் வடநாடு சென்று திரும்ப வரும்வரையில் இருங்கோ வேண்மாள் இருந்து வருகின்றாள். இம் மாளிகையின் இருப்பினை, அடிகள்,

“ படுதிரை சூழ்ந்த பயங்கெழு மாநிலத்து
இடைநின் றோங்கிய நெடுநிலை மேருவின்
கொடிமதில் மூதூர் நடுகின் றோங்கிய
தமனிய மாளிகை” (28:47-50)

எனச் சிறப்பித்துக் கூறுகின்றார்.

இந் நகர்க்கண், பிறையணி செஞ்சடைப் பெருமானுக்கும் திருமாலுக்கும் தனித்தனியே பெருங் கோயில் உள்ளன. திருமால் கோயில் ஆடகமாடம் எனப்படுகிறது. செங்குட்டு வன் செஞ்சடை வானவன்பால் சிறந்த அன்புடையவன்; இவனது “இறைஞ்சாச் சென்னி” இவ்விறைவன் ஒருவன் திருவடிக்கே இறைஞ்சும். எனினும், திருமாலுக்கு ஆடக மாடம் நிறுவி அணிபெற வழி பாடாற்றி வருகின்றான். ஆனால், இவ் வாடக மாடத்தை அரும்பத வுரைகாரர், திருவனந்தபுரம் என்றும் இரவிபுரம் என்றும் கூறு கின்றார்; இஃது ஆராய்தற்குரியது.

இது மலைநாட்டகத்துப் பேரூராகலின், மலைபடு பொருள்கள் இங்கே மலிந்து கிடக்கின்றன. அவற்றுள், யானைக்கோடு, அகில், கவரி, மலைத்தேன், சந்தனம், சிந்துரம், அஞ்சனப் பொருள், அரிதாரம், ஏலம், மிளகு, கூவைக் கிழங்கு, கவலைக்கிழங்கு, தெங்கு, தேமா, பச்சிலை, பலா, காயம், கரும்பு, பாக்கு, வாழைப் பழம், முதலியனவும்; ஆளி, புலி, குரங்கு, கரடி முதலியவற்றின் குட்டிகளும், யானைக்கன்று, மலையாடுகள், வருடைமான், மான்கன்று, கத்தூரிமான், கீரிப்பிள்ளை, மயில், புழுகுப்பூனை, கானக் கோழி, கிளி முதலியனவும் சிறப்பாக எளிதில் காணப்படு வனவாகும்.

இங்கேதான் முதன்முதலாகப் பத்தினிக் கடவுளாகிய கண்ணகிக்குக் கோயிலெடுக்கப்படுகிறது. கண்ணகியின் படிமம் சமைத்தற்கே செங்குட்டுவன் வடநாடு சென்றது மாகும். கோயி லெடுத்த செய்தியை அடிகள்,

“ நன்னா டணைந்து நளிர்சினை வேங்கைப்
பொன்னணி புதுநிழல் பொருந்திய நங்கையை,
அறக்களத் தந்தண ராசான் பெருங்கணி
சிறப்புடைக் கம்மியர் தம்மொடும் சென்று
மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள்
பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து
இமையவர் உறையும் இமையச் செவ்வரைச்
சிமையச் சென்னித் தெய்வம் பரசிக்
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
வித்தக ரியற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி
வேள்வியும் விழவும் நாடொறும் வகுத்துக்
கடவுண் மங்கலம் செய்கென ஏவினன்,
வடதிசை வணக்கிய மன்னவ ரேறு” (சிலப்.28:220-234)

என்று கூறியிருக்கின்றார்.

இக் கூறிய நகரங்களே யன்றி, இந் நூற்கண் இடும்பில், கச்சி, காப்பியக்குடி, கொற்கை, தங்கால், தலைச்செங்கோடு, திருவரங்கம், தொண்டி, நேரிவாயில், பறையூர், மாங்காடு, வயலூர், வியலூர் முதலாகப் பலவூர்களும் குறிக்கப் படுகின்றன.

XII. தமிழ் வேந்தரின் அரசியல் மாண்பு: மேலே கண்டு போந்த புகார், உறையூர், மதுரை, வஞ்சியென்ற நகரங்களில் இருந்து அரசுபுரிந்த வேந்தர் முறையே சோழரும் பாண்டியரும் சேரரு மாயினும் இம் மூவேந்தரும் தமிழ்நாட்டு மூவேந்தர்
    களாதலின், இவர்களது அரசியல் மாண்பின் பொதுநிலை, இளங்கோவடிகள் காலத்து தமிழர் அரசியல் நிலையும் மாண்பு
    மாதல் தெளியப்படும். ஆகவே, அதனை ஆராய்வதும் முறையாகின்றது. மேலும், இந்நூலைப்பற்றிக் கூறுமிடத்து, சாத்தனார், இது “முடிகெழு வேந்தர் மூவர்க்குக் உரியது” என்று கூறுகின்றார். அக் கருத்தை அடிகளும் அவ்வாறே ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பது, அவர் கண்ணகியார் செயலை வடித்துக் கூறுவார், நடுகற்காதையில்,

“ அருந்திறல் அரசர் முறைசெயி னல்லது
பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப்
பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை
பார்தொழு தேத்தும் பத்தினி யாகலின்
ஆர்புனை சென்னி யரசற்கு அளித்து,
செங்கோல் வளைய உயிர்வா ழாமை
தென்புலங் காவல் மன்னவற் களித்து,
வஞ்சினம் வாய்த்தபின் அல்லதை யாவதும்
வெஞ்சினம் விளியார் வேந்த ரென்பதை
வடதிசை மருங்கின் மன்னர் அறியக்
குடதிசை வாழும் கொற்றவற் களித்து….
………………..பொருந்திய நங்கை” (28:217-222)

என்று கூறுவதால் இனிது விளங்குகிறது. இவ் வடிகளாரும் அரசிளங்கோ வாதலாலும், முற்றத் துறந்த முனிவராத லின், யாவர் செயலையும் விழைவு வெறுப்பின்றிக் கூறுதலாலும், இவர் கூறும் அரசியற் கருத்துக்கள் யாவும், பண்டைத் தமிழ் வேந்தரது அரசியல் கருத்தெனக்கொள்வதை நல்லறிவுடைய எவரும் உடன்பட மறார்.

தமிழ் வேந்தர் தம் கோற்கீழ் வாழும் மக்கள் நலமே தம் நலம் எனப் பேணி வாழும் தகுதிப்பாட்டை மேற்கொண்டு, தமது ஆட்சி இனிது நடத்தற்கு அரசியற் சுற்றமும் ஐம்பெருங் குழுவும் எண் பேராயமும் நால்வகைப் படையும் கொண்டிருக்கின்றனர். அவர் அரசியற்குப் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்ற ஆறும் குறைவற நிரம்பியுள்ளன. ஐம்பெருங் குழுவை, “அமைச்சர், புரோகிதர், சேனாதி பதியர், தவாத் தொழில் தூதுவர், சரணர் என்றிவர், பார்த்திபர்க்கு ஐம்பெருங் குழுவெனப்படுமே” என்றும், எண் பேராயத்தை,

“ காரணத் தியலவர் கரும காரர்
கனகச் சுற்றம் கடைகாப் பாளர்
நகர மாந்தர் நளிபடைத் தலைவர்
யானை வீரர் இவுளி மறவர்
இனையர் எண்பே ராய மென்ப”

(சிலப். உ.வே. சா. பதிப்பு பக்.167)
என்றும் அடியார்க்கு நல்லார் கூறுகின்றார். எண் பேராயத் தினும் ஐம்பெருங்குழு சிறப்புடையது. அதனால், அதனை “அரசொடு பட்ட ஐம்பெருங் குழு” (3:126) என்று அடிகள் சிறப்பிக்கின்றார். அரசியற் சுற்றத்துள், “கரும வினைஞரும் கணக்கியல் வினைஞரும் தரும வினைஞரும் தந்திர வினைஞரும்”
(26:40-1) இருக்கின்றனர்; இன்றியமை யாவிடத்து, அமைச்சர், தானைத் தலைவர், அறக்களத் தந்தணர் முதலாயினாரும் அரசியற் சுற்றமாய்த் தொழிலா ராய்ச்சி புரிகின்றனர்.

அரசன் கீழ் வாழ்வோருள், அரசர்க்கு அடுத்த படியில் பெருந்திருவுடைய வணிகரும் பின்பு வேளாளரும், இவ் விருவர்க்கும் இடையே மறையவரும் வைத்துமதிக்கப் பெறுகின்றனர். “பெருங் குடி வாணிகர் மாடமறுக்கும், மறையோர் இருக்கையும், வீழ்குடி யுழவரொடு விளங்கிய கொள்கை, ஆயுள்வேதரும் காலக்கணி தரும், பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்” என்று அடிகள் முறைப்படுத்து ஓதியிருக்கின்றமை காண்க. வணிகருள் கலத்திற் சென்று பெருவாணிகம் புரியும் திருவினரைப்பரதர் என்றும், ஏனோரை வணிகரென்றும் வகுத்திருக்கின்றனர் . ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் போல, “அரச குமரரும் பரத குமரரும்” (5:158) என்றும், “அரசிளங் குமரரும் உரிமைச் சுற்றமும், பரத குமரரும் பல்வேறாயமும்” (6:155-156) என்றும் சிறப்பிக்கப்படுதல் காண்க. மேலும், இவ்வணிகரைக் கூறும் போதெல்லாம், அடிகள், “அரைசர் பின்னோர்”, “உரைசால் சிறப்பின் அரசு விழை திருவின் பரதர்”, என்றும் இவர் இருந்து வாணிகம் செய்யும் அங்காடி வீதியை, “அரசு விழை திருவின் அங்காடி” என்றும் கூறுதலால், இவர்கள் அரசரால் நன்கு மதிக்கப் பெற்றமை தெரிகிறது. நாட்டின் செல்வ நிலைக்கு இன்றிமையாதது வாணிகம் என்பதை யுணர்ந்து அது செய் யும் வணிகரைத் தமக்கு அடுத்த வரிசையில் வைத்துப் போற்றிய இச்செய்தி, தமிழ் வேந்தரின் பொருளியலறிவின் உயர்ச்சியைக் காட்டுகிற தன்றோ! இவ்வாறு அரசரது ஆதரவு இல்லாவிடில் தமிழ் நாட்டில் பல்வகைக் கைத் தொழில்களும், அவை குறித்து அயல் நாட்டினர் வருகையும், அது வாயிலாகப் பொருட் பெருக்கமும் நிகழ்தற்கும் இடனி ன்றாம்.

“ கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவனர் இருக்கையும்,
கலந்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும்”

(சிலப்.5:9-12) )
இலவாமன்றோ? கைத்தொழில் வகைகளைப் பின்னர்க் கூறுவாம்.

இவர்கட்கு அடுத்த நிலையில் மறையோர் தமிழ் வேந்தரால் பேணப்படுகின்றனர். நான்மறை பயிறலும், வேள்வி வேட்டலும் மறையோர்தம் பெருபான்மைச் செய்கைகளாயினும், சிறுபான்மை அரசனது அறங்கூறவையில் அறக்களத் தந்தணராய்த் துணைசெய் தொழுகுகின்றனர். இவர்களை, அடிகள், “அறக்களத் தந்தணர்” என்றே பல விடத்தும் கூறியிருக்கின்றார். இம்மறையோர் இச்சிலப் பதிகாரக் காலத்தே வேள்வி வேட்டலும் செய்கின்றனர். மதுரை நகரிலும் சேரநாட்டிலும் ஆகுதிப்புகையும், சேர நாட்டில் மாடலன் என்னும் அந்தணன் வேள்வி செய்வதும், அதனை அரசர் முதலாயி னோர் உடனிருந்து செய்தலும் காணப்படுகின்றன.

இனி, வேளாளர்களை, “வீழ்குடி யுழவர்” என்ப தொன்றே, அரசர் கண்முன் அவர் பெருமதிப் புடையராய் இருப்பது விளக்கும். இவர்களை, “இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழ விடை விளைப்போர்” என்று பாராட்டுகின்றனர்.

இவர்தம் தெருக்கள் மறையோர் இருக்கையை அடுத் திருப்பது அறம் முதலாயின இனிது நிகழ்தற்குத் துணை செய்யும் பெருந் தகுதி இவர் பால் உண்மையினைத் தமிழ் வேந்தர் நன்கு தெளிந்திருத்தலையே காட்டுகிறது.

தமிழ் வேந்தர் தமக்குரிய அரசியற் பொறுப்பை நன்கு உணர்ந்திருக்கின்றனர்.

“ மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம்
பிழையுயி ரெய்தின் பெரும்பே ரச்சம்,
குடிபுர வுண்டும் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதகவு இல்” (சிலப்.25: 100-104)

எனச் செங்குட்டுவன் கூறுவது இதனை வற்புறுத்துகின்றது. இவ் வேந்தர் நோக்கமெல்லாம் தம் செங்கோல் கோடாமையே குறிக்கொண்டு நிற்கிறது. அதன்கண் சிறிது வழுவெய்தினும் அதனாலுண்டாகும் மானம் பொறாது அப்பொழுதே உயிர் விட்டுவிடுகின்றனர். கோவலனைக் கொலை குறித்த பாண்டியன் நெடுஞ் செழியன், தன் பால் தவறுண்மை தெரிந்ததும்,

“ பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்;
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்” (சிலப்.20: 70-77)

என்று சொல்லி உயிர் விடுவதும், அச் செய்தியறிந்த சேரன் செங்குட்டுவன்,

“ எம்மோ ரன்ன வேந்தற் குற்ற
செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென
வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது”

(சிலப்.25: 95-99)
என்று சொல்லுவதும் இதனை விளக்கி நிற்கின்றன. தமிழ் மக்களும் இதனையே வியந்து, “செங்கோல் வளைய உயிர் வாழார் பாண்டியர்” எனச் சிறக்கப் பாடி மகிழ்கின்றனர்.

இவ் வேந்தர், தம் அரசு முறையின் செம்மையே, நாட்டு மகளிரின் கற்பைக் காக்கும் பேரரணாவது என்ற மெய்ம்மை நெறியை இனிதறிந்து அதற்கேற்ப அரசுபுரிந் தொழுகினர். “அருந்திறலரசர் முறை செயினல்லது பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது எனப்பண்டையோருரைத்த தண்டமிழ் நல்லுரை” (28:207-209) என அடிகள் கூறுதலால், இக் கருத்துத் தமிழ்நாட்டுத் தொல்லோர் கருத்தென்பது துணியப்படும். இதுவேயன்றி, கற்புடைய மகளிர் இருக்கும் நாட்டில் அரசுமுறை கோடாது என்ற கொள்கையும் நிலவியிருக்கிறது. இதனைக் கவுந்தியடிகள் கண்ணகியை மாதரி பால் அடைக்கலப் படுத்துமிடத்து, “வானம் பொய்யாது வளம் பிழைப் பறியாது, நீணில வேந்தர் கொற்றம் சிதையாது, பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு என்னும், அத்தகு நல்லுரை” (5:145-147) என்று கூறுதலால் அறிகின்றோம். பாண்டியன் கோல் வளைந்தது கண்டு கண்ணகியார், “முறையில் அரசன் தன் ஊரிருந்து வாழும், நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள்” (19:3-4) எனச் சினந்து இகழ்தலும், மதுரை நகரத்து நிறையுடை மகளிர், மனம் கலங்கி, உண்மை தெளியாராய்க்,

“ களையாத துன்பம் இக் காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கொல்?
மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன்
தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல்?
மண்குளிரச் செய்யும் மறவேல் நெடுந்தகை
தண்குடை வெம்மை விளைத்த திதுவென்கொல்?”

(19:17-22)
என அங்கலாய்த்து அலமருதலும், மேற்கூறிய கருத்தை வலியுறுத்து வனவாகும்.ஆகவே, நாட்டரசர் தம் நாட்டு மகளிரின் கற்பு நலத்தைப் பேணவும், நாட்டு மகளிர் தம் நாட்டரசன் செங்கோல் வளையாமையைப் பேணவும், மக்களும் அரசரும் ஒருவர்க் கொருவர் இன்றியமையாத் தொடர்புற்ற வாழ்க்கை நடத்தும் நயம் நினைக்குந்தோறும் இன்பமுண்டாகிறது. ஆண்மை, பெண்மைக்கு அரணாதலும், பெண்மை, ஆண்மைக்குத் துணை செய்தலும் நன்கு தேர்ந்த காவலாற்றும் நல்லரசு, நந்தம் தமிழரசு!!

நாட்டின் அரசன் நல்லனாகாவிடில், அரசு முறையின் தகுதி யறிந்த நன்மக்கள் தமக்கும், பிறவுயிர்க்கும், பொருட்கும், நல்வாழ்வுக்கும், வேண்டும் பாதுகாப்பு இல்லாதொழிதலை
யுணர்ந்து தலைமேல் கைவைத்துப் புலம்புவதும்; நல்லனாகிய வழியும், மக்களுள் சிலர் பகையரசரின் தீயுறவு பூண்டு அவர்க்குத் தம் நாட்டைக் காட்டிக் கொடுப்ப, அப்பகை வேந்தர் ஆட்சியில் நல்லோர் வருந்துதலும் தீயோர் களித்தலும் உண்டு: நாட்டை
யிழந்த நல்லரசன் ஏனையரசர் துணைபெற்று, வேண்டும் படைப் பெருமை பெற்று வந்து, பகை வேந்தனை வெருட்டித் தீயோரை ஒறுத்து நாட்டை நாடாக்குதலும் உளது. இத்தகைய நாடுகளில் “தவமறைந் தொழுகும் தன்மையிலாளர், அவம் மறைந்
தொழுகும் அலவைப் பெண்டிர், அறைபோ கமைச்சர், பிறர்மனை நயப்போர், பொய்க்கரியாளர், புறங் கூற்றாளர்” முதலாயினார் இருப்பினும், அவரும் தக்காங்கு ஒறுத்து நன்னெறிக் கண் நிறுத்தப்படுகின்றனர்.

பேரரசர்கீழ்ச் சிறு சிறு சிற்றரசர்கள் இருந்து அவர்க்குத் திறை செலுத்தியும், ஏவல் கேட்டும் வாழ்கின்றனர். சேர, சோழ, பாண்டிய நாடு மூன்றினும், சிறுசிறுசேரநாடும், சோழ நாடுகளும் பாண்டி நாடுகளும் இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு நாட்டிலும் பற்பல சேரமன்னரும், சோழரும், பாண்டியரும் காணப்படுகின்றனர். உறையூரிலிருந்து ஆட்சி புரிந்த சோழன் பெருங்கிள்ளியின் கீழ் ஒன்பது சிற்றரசர் இருப்ப, அவர்கள் அவ்வேந்தனது இளமையிகழ்ந்து ஏவல்கேளாது போர்தொடுக்கின்றனர். அவன் செங்குட்டுவற்கு மைத்துனனாதலின், அக்குட்டுவன் துணை பெற்று அவ்வொன்பது சோழ வேந்தரையும் வென்று தன்அடிப் படுத்துகின்றான். இச்செய்தி, இந்நூற்கண் (27:118-122; 28:116-117) விளங்கக் கூறப்படுகிறது. இவ்வரசர் பெற்ற திறைப்பொருள் வெறும் பொன்னும், மணியும் பிறவுமட்டு மல்ல. “நாடக மகளிரும் நலத்தகு மாக்களும் கூடிசை குயிலுவக் கருவியாளரும்” கொடுஞ்சி நெடுந்தேர், கொய்யுளைப் புரவி, கடுங்களி யானை, “கண்ணெழுத்துப் படுத்தன கை புனை சகடம்” முதலிய பலவாகும். “சந்தின் குப்பையும் தாழ்நீர் முத்தும், தென்னர் இட்ட திறை” என்றுடிகள் குறிப்பது காண்க.

நகரத்து மதிலுச்சியிலும் மாடங்கள்மீதும் உயரிய கம்பம் நிறுத்தி அவற்றில் தமது புலி, கெண்டை, வில் முதலிய பொறித்த கொடி களைப் பறக்க விடுகின்றனர். இக்கொடிகள் அவர்தம் வெற்றிச் சிறப்பை விளக்குவனவாதலின், இவற்றைப் “போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி” என்பர். இவையேயன்றி, அங்காடி வீதியில் கடைகள் தோறும் பல்வகைக் கொடிகள் பறக்கின்றன. இவற்றின் நீழலில் நகர் சிறப்பது கண்டு, அடிகள்

“ விசும்பகடு திருகிய வெங்கதிர் நுழையாப்
பசுங்கொடிப் படாகைப் பந்தர் நீழற்
காவலன் பேரூர்” (சிலப்.14:215-217)

என்று பாராட்டுகின்றார். கொடி சிறு கொடிகள் என்றும், படாகை பெருங் கொடிகள் என்றும் உரைப்பர் அடியார்க்கு நல்லார்.

அரசர்கள் தங்கள் நாடுகாத்தற்கே யன்றி, வளங்காண் பதற்கும் நாட்டின் பல பகுதிகட்கும் உரிமைச் சுற்றத்துடன் தலைநகரினின்றும் போவதுண்டு. அக்காலத்தே அவ்வப் பகுதிகளில் வாழும் மக்கள் நாட்டில் கிடைக்கும் உயரிய பொருள்களைக் கொணர்ந்து அரசர்க்குத் தந்து தம் மகிழ்ச்சியைப் புலப்படுத்துகின்றனர். அப்போது அரசன் தேவியரும் உடன் செல்வர். நாட்டில் நிகழ வேண்டிய நிகழ்ச்சிகள் எவையேனும் இருப்பின் அரசர் அவ்விடத்தே அரசவை கூட்டித் தீர்ப்புச் செய்வர். நகர்க்காவலர், “அரையிருள் யாமத்தும் பகலும் துஞ்சாது” காவல் புரிகின்றனர். சுருங்கையிடம், அந்தப்புரம், பண்டசாலை, மூல பண்டாரம், பாசறை, பள்ளியறை முதலிய இடங்களில் யவனரும் பிற மிலேச்சரும் காவலராகத் தொழில் செய்கின்றனர்.

அரசன் தனியனாகக் காணப்படினும், அரசியற் செய்கைகளைச் செய்யுமிடத்து நாட்டின் நன்மக்களைக் கலக்காது எதனையும் அவன், தான்வேண்டியவாறே செய்வதுகிடையாது. அரசியற் சுற்றம், ஐம்பெருங்குழு என்பவற்றில் உள்ள சான்றோர்கள் அரசர்க்குத் துணை செய்பவராவர். வழக்குத் தீர்த்து அறம் செய்தற்கு அறம் கூறவையத் தார் துணை செய்கின்றனர். அரசியலாராய்ச்சியவை களில் அரச குமரனேயன்றி, அரசன் தேவியும் உடனிருந்து ஆராய்ச்சித் துணை செய்வ துண்டு. கண்ணகியாரைக் கோயிலெடுத்து வழிபடற் கென் றெழுந்த ஆராய்ச்சி யவையில், செங்குட்டுவன் தேவி இருங் கோவேண்மாள் உடனிருந்து தகுவது கூறுவதும், பாண்டியன் அவையில் கண்ணகி வழக்குரைத்தபோது அவன் தேவி ஆங்கிருப் பதும் பிறவும் மேலே கண்ட உண்மைக்குத் துணை செய்வனவாகும்.

இவ்வேந்தர், அரசியல், பொருளியல், காப்பியல் முதலிய துறைகளில் பெரிதும் ஈடுபட்டிருக்கின்றாரெனினும், பல்வகைக் கலை வளர்ச்சியிலும் பெரிதும் கருத்தூன்றிப் பேருதவி வழங்கியிருக் கின்றனர். அரசவையில் நல்லிசைப் புலவர்கட்கு உயரிய இடம் தந்து சிறப்பிக்கின்றனர். சாத்தனார், மாடலனார் முதலியோர் சேர மன்னரால் பேணப்படுகின்றனர். இசை நாடகங்கள் இவ் வேந்தர் களிடையே மிக வளமாக இருக்கின்றன. இக்கலைகள் ஆடவர் மகளிர் என்ற இரு திறத்தார்க்கும் உரியவாயினும், அரசர், வணிகர், அந்தணர், வேளாளர் என்ற நால்வர்க்கும் உரிய வாயினும், சிறப்பாக நாடகக் கணிகையரே இவற்றை மிகுதியும் பயின்று வருகின்றனர். நாடக மகளிர் தாம் கற்க விரும்பும் இவ்விசை நாடகக் கலையை ஐந்தாமாண்டு தொடங்கிக் குறைந்த அளவு ஏழாண்டு கற்கின்றனர். பயிற்சி முடிந்ததும், தமது புலமையை அம்மகளிர் தம் நாட்டு அரசர்க்கு ஆடியும் பாடியும் அழகுறுத்திக் காட்டுகின்றனர். அவர்கட்கு அரசன் * ஆயிரத் தெண்கழஞ்சு முதல் ஒரு கழஞ்சு பொன்வரைத் தலைப்பரிசம் விதிக்கின்றான்; இப்பரிசத்தைப் “பூவிலை” என்றும் கூறுவர். “எட்டுக் கடை நிறுத்த ஆயிரத்தெண் கழஞ்சு, முட்டாவைகல் முறைமையின் வழாத் தாக்கணங் கனையார்” (14:158-160) என்று இந் நூல் கூறுகின்றது. மாதவியின் ஆடல் பாடல் அழகு என்பவற்றைக் கரிகாற் பெருவளத்தான் அரங்கேற்றத்துட் கண்டிருத்தலும், தலைப்பரிசம் விதித்தலும், செங்குட்டுவன் வடநாடு செல்பவன் நீலகிரியில் தங்கியிருந்தபோது, அவன் முன் பாடி மகிழ்வித்த மகளிர்க்கு ஆடலாசிரியன் குறித்த வரிசைப் படியே பொருள் வழங்கி யூக்குதலும், வடநாட்டிலிருந்து திரும்பிய பின், பறையூர்க் கூத்தச் சாக்கையன் ஆடிய கொடு
கொட்டிக் கூத்துக் கண்டு மகிழ்தலும், பாண்டி வேந்தனான நெடுஞ் செழியன் மனைவி கோப்பெருந்தேவி ஊடுதற்கு, “கூடல் மகளிர் ஆடல் தோற்றமும், பாடற் பகுதியும் பண்ணின் பயன்களும், காவலன் உள்ளம் கவர்ந்தன” (16:131-133) எனக் காரணம் கருதலும் பிறவும் இசை நாடகக் கலைவளர்ச்சிக்கு இத்தமிழ் வேந்தர் செய்த துணைக்குப் போதிய சான்றாகும்.

இந்நாடக மகளிர் கலைப்பயிற்சி முற்றி, அரங்கேறுவராயின், அவர்கட்குத் தலைக்கோலாக, இவ்வேந்தர், தாம் வென்ற பகை யரசரின் கொற்றக் குடையின் காம்புகளைத் தந்து, அவற்றிற்குக் கணுக்களில் பொற்பூண் இட்டுக் கொடுக்கின்றனர். அக் கோல் ஊர்வலம் வருதற்குத் தம் பட்டத்தி யானை, தேர் முதலியவற்றை யுதவுகின்றார். தாமும் அரசியற் சுற்றமும் பிறரும் சூழவிருந்து அரங்கேற்று விழாவினைச் சிறப்பிக்கின்றனர்.

இவ் வேந்தர் தம் குடியில் மூத்தோரை அழைத்துச் சென்று, குமரி, காவிரி, கங்கை முதலிய யாறுகளில் நீராட்டும் வழக்க முடையர். சேரவேந்தர்பாலும், பிறர்பாலும் இவ்வழக்கம் காணப் படுகிறது. யாறுகளில் புது வெள்ளம் வரும் போது, இவ்வேந்தர் தம் கிளைஞரும், குடிகளும் ,சூழ்வரச் சென்று புது நீராடி மகிழ்கின்றனர். வேள்வி வேட்பதும், மறையோர்க்குத் துலாபாரம் என்னும் தன்னிறைப் பொன்னைத் தானம் செய்வதும், பிறவும் காணப்படு கின்றன. இவ்வழக்கம் விசயாலயன், இராசராசன் முதலிய சோழ வேந்தர் ஆட்சிக்குப் பின்பும் இருந்திருக்கிறதென்று கல் வெட்டுக்கள் காட்டுகின்றன.

இவர்கள் போர்க்குச் செல்லுமிடத்து, அதற்குரிய வெட்சி, தும்பை, வஞ்சி முதலியவற்றைத் தமக்குரிய அடை யாளப் பூவோடு தொடுத்து அணிந்து கொள்கின்றனர். போர்க்கெழுமுன், போர் வெறி கொண்டு வஞ்சினம் கூறலும், அது காப்பது குறித்துக் கடும்போர் உடற்றுதலும் வெற்றி பெற்ற வழி, வாகை மாலை சூடுதலும் வழக்கமாகும். அஞ்சிப் புறங்கொடுத்து ஓடுபவரைப் பற்றிச் சிறைப்படுத்துவதன்றித் துன்புறுத்திக் கொல்வது இவ்வேந்தர் இயல்பன்று. செங்குட்டுவன், தோற்று உயிர்க்கஞ்சி ஓடிய வட வாரிய மன்னரான கனக விசயரைப் பற்றிக் கொணர்ந்து, இவர் “தமிழரை இகழ்ந்துரைத்த தகவிலார்” என ஏனைச் சோழ பாண்டியர்க்குக் காட்டி வருமாறு ஏவுகின்றான். இவன் செயலைக் கண்ட சோழ வேந்தன், தான் இக் குட்டுவனால் துணை செய்யப் பட்டவனாயினும், அச்சம் இன்றி,

“ கொல்லாக் கோலத் துயிருய்ந் தோரை
வெல்போர்க் கோடல் வெற்ற மன்றெனத்
தலைத்தேர்த் தானைத் தலைவற் குரைத்தனன்.”

(28:92-94)
என்றும்,

“ தவப்பெருங் கோலம் கொண்டோர் தம்மேல்
கொதியழல் சீற்றம் கொண்டோன் கொற்றம்
புதுவ தென்றனன் போர்வேற் செழியன்” (28:105-107)

என்று அடிகள் கூறிக் காட்டுகின்றார். இச் செங்குட்டுவனே பின்பு மாடலனால் சினம் தணிந்து, இக்கனக விசயரைச் சிறை நீக்கி, வேளாவிக்கோ மாளிகையில் அரசர்க்குரிய சிறப்புக் குன்றாது வைத்துப் பேணுவது தமிழ் வேந்தரின் பெருந்தகைமைக்கு நல்ல எடுத்துக் காட்டாகின்றது.

மேலும், போரில் தமக்காகப் போரிடும் வீரரைப்போர் முடிந்தவுடன் தம் முன்னர் ஒருங்கு கூட்டி அவர் தம் வீரத்தை அவன் முன் தனித்தனியே எடுத்துச் சொல்லிப் பாராட்டிப் பொன்னாற் செய்த வாகைப் பூவை அணிந்து கொள்ளத் தருகின்றனர். அவ் வீரருடன் ஒருங்கிருந்து உணவுண்டலும், இவ் வேந்தரின் தொன்மை நலமாகும். சேரன் செங்குட்டுவன் இவ்வாறு செய்ததனை, அடிகள்,

“ நிறஞ் சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து
புறம்பெற வந்த போர்வாள் மறவர்
வருக தாம்என வாகைப் பொலந்தோடு
பெருநா ளமையம் பிறக்கிடக் கொடுத்து” (27:41-44)

என்று உரைக்கின்றார்.

XIII. இசை நாடகக் குறிப்புக்கள்:- இந்நூல் “இயலிசை நாடகப் பொருட் டொடர்நிலைச் செய்யுள்” எனப்பண்டை ஆசிரியன்மாரால் சிறப்பித் தோதப் படுவதென்று முன்பே கூறினோம். ஆகவே, இதன்கண் இசையும் நாடகமும் குறிக்கப் பெறும் என்பது சொல்லாமலே விளங்கும். இதன்கட் காணப்படும் மங்கல வாழ்த்துப் பாடல், கானல்வரி, வேட் டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ் வரி, குன்றக்குரவை, வாழ்த்து என்ற பகுதிகள் இசையும் நாடகமும் பயின்றுவரும் பகுதிகளாகும். துன்ப மாலையும், வஞ்சின மாலையும் இசைவிரவி அழுகைச் சுவை மிக்கு நிற்பனவாகும்.

அரங்கேற்று காதை, வேனிற் காதை முதலியவற்றுள் பண்டை இசை நாடக நூற்குறிப்புக்கள் செறிந்திருக்கின்றன. காண்டந்தோறும் இறுதியில் நிற்கும் கட்டுரைகள் இசை நாடகக் குறிப்புக்களைச் சுருக்கமாகக் காட்டுகின்றன.

இவற்றை இப்பேரிலக்கியத்துக்கு உரைகண்ட அரும் பதவுரைகாரர், அடியார்க்கு நல்லார் என்ற இப்பெருமக்கள் வழங்கியுள்ள உரைக் குறிப்புக்களால் ஒருவாறு காண்டல் கூடும். விரிய வுணர்தற்கு ஆகாதவாறு அவ் இசை நாடக நூல்கள் பலவும் இறந்தொழிந்தன. இக் குறை அறிஞர் உலகிற்குப் பேரவலத்தைச் செய்து நிற்கிறது. இத்துறையில் சுவாமிவிபுலானந்தர், மகா மகோபாத்தியாய பண்டித மணி மு. கதிரேசன் செட்டியார், நாவலர் பெருந்தகை பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் முதலியோர் உழைத்து வருகின்றனர். அவர் முயற்சி வெற்றி பெறுவதாக.

இந் நூல் உரைப்பாயிரத்துள், ஆசிரியர் அடியார்க்கு நல்லார், “இவ்வியலிசை நாடகப் பொருட்டொடர்நிலைச் செய்யுளை அடிகள் செய்கின்ற காலத்து இயற்றமிழ் நூல் தொல்காப்பியம்” என்றும், “இசைத் தமிழ் நூலாகிய பெரு நாரை, பெருங்குருகும், பிறவும், தேவ விருடி நாரதன் செய்த பஞ்ச பாரதீய முதலாகவுள்ள தொன்னூல்கள் இறந்தன” என்றும் கூறுகின்றார். இவ்வாறு கூறும் இவர் இசை நுணுக்கம், இந்திர காளியம், பஞ்ச மரபு, பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் என்ற ஐந்தையும் தாம் இந்நூற்கு உரை காண்பதற்குத் துணை கொள்
கின்றார். ஆனால், இவற்றைப் பற்றிக் கூறுங்கால், அவரே, “இவ் வைந்தும் இந் நாடகக் காப்பியக் கருத்தறிந்த நூல்கள் அன்றேனும், ஒருபுடை யொப்புமை கொண்டு” தாம் மேற் கொள்வதாக எழுதுகின்றார். எனவே, இந் நூலில் அடியார்க்கு நல்லார் காட்டும் இசை நாடகக் குறிப்புக்கள் முற்றும், பண்டைத் தமிழ் இசை நாடக நலங்களை - இச் சிலப்பதி காரம் கூறும் இசை நாடகக் கருதுக்களை - முடிய உணர்த்துவன அல்லவென்பது தெளிவாகின்றது.

இனி, ஆடல் பாடல் என்ற இரண்டினுள், ஆடல் நாடகத் துக்கும், பாடல் இசைக்கும் உரியவாகும். ஆடல், வேத்தியல் பொதுவியல் ஏனையோர்க்கும் ஆடுவனவாம். ஆடல் வகையுள் சிலவற்றைக் கூத்து என்றே வழங்குகின்றனர். இக் கூத்து நகைக் கூத்து முதலாகப் பலதிறப்படும். இவற்றோடு வேந்து விலக்கு, படை விலக்கு, ஊர் விலக்கு எனப் பாட்டு வகையுண்டு. இவற்றிற்கு உறுப்பாகக் கூத்தும் உண்டு. இவ்விலக்குகளுடன் பல்வகைக் கூத்துக்களைப் புணர்த்து ஆடல் செய்வர். இவ் வகை யாடலும் பதினொரு வகையாம். இவற்றிற்கேற்ற பாடல்களும் தாளங்களும் உள்ளன. ஆடல் கற்பிக்கும் ஆசிரியன், இந்த ஆடல், பாடல், பாணி, தூக்கு முதலிய நெறிகளை யுணர்ந்
திருத்தல் வேண்டும்.

ஆடுங்கால், பிண்டி, பிணையல், எழிற்கை, தொழிற்கை எனக் கைகாட்டும் முறை நான்காகின்றது. இவை, கூடை, வாரம், பிண்டி, ஆடல் என்ற நான்கு இடங்களையுடைய கூத்து வரும்போது,

“ கூடை செய்தகை வாரத்துக் களைதலும்
வாரம் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்”

வேண்டும் என்கின்றார். கைத்தொழிலோடு, குரவை, வரி என்ற கூத்துகட்குரிய காலடிகள், தம்முள் விரவுதல் கூடாது.

இசைத் தமிழ், யாழ், குழல், சீர், மிடறு, தண்ணுமை, ஆடல் என்ற இவற்றோடு இசைந்திருக்கும் இயல்புடையது. சீர் என்பது வண்ணம், தாளம், பாலைநிலை, பண்ணுநிலை என்ற இவற்றைத் தூய்தாகக் காட்டுவது. மிடறு, அகத்திருந் தெழும் ஓசையைக் “கருத்தால் இயக்கி, ஒன்றெனத் தாக்கி இரண்டெனப் பகுத்துப் பண்ணீர்மை” பிறக்குமாறு பாடல். ஆடல், மேலே கூறிய அகக்கூத்து, புறக்கூத்து, பதினொரு வகை யாடல் என்பன. வரிக்
கூத்துக்கும் ஆடற்கும் உள்ள பாடல்களுக்கு இயைந்த இயக்கமும், சொற்கள் இசைக்குப் பொருந்தியிருக்கும் திறமும் இசையாசிரியன் உணர்ந்திருப்ப துடன்,

“ கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
பகுதிப் பாடலும்” (சிலப்.3:33-34)

உணர்த்த வல்லவனாவான். தான் எடுத்த பாட்டின் பண்ணீர்மையை, முதல், முறைமை, முடிவு, நிறைவு, குறை, கிழமை, வலிவு, மெலிவு, சமன், வரையறை, நீர்மை என்ற பதினொரு பாகுபாட்டால் காண்பான். தண்ணுமையாசிரியன், ஆடல், பாடல், இசை, இயற்றமிழ், பண், பாணி, தூக்கு, முடம், தேசிகம் என்ற இவற்றை நன்கறிந்து ஏனைக் கருவிகளின் குறைந்த இசையை நிரப்புதலும், மிகுந்த இசையை அடக்குதலும் நிகழுமாறு கைத்தொழில் அழகுபெறச் செய்வன்.

குழலிசைப்போன், இசைபாடுவோன் புணர்க்கும் சித்திரம் வஞ்சனை யென்ற இரண்டும் அறிந்து, பண்ணீர்மை நூற்று மூன்றும் தெளிய வுணர்ந்து, யாழ் நரம்போடு இனிதின் இசைந்து,

“ இசையோன் பாடிய இசையின் இயற்கை
வந்தது வளர்த்து வருவது ஒற்றி
இன்புற இயக்கி இசைபட வைத்து
வார நிலத்தைக் கேடின்று வளர்த்து” (சிலப்.3:64-67)

பாட்டின் சொல்நீர்மை தோன்ற இசைப்பவனாகும். வார நிலம், முதல்நடை, வாரம், கூடை, திரள் என்பனவாகும். இவை இசையின் இயக்கங்களாகும். இவ் வண்ணமே, யாழிடத்தே, செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப் பாலை, அரும்
பாலை, கோடிப் பாலை, விளரிப்பாலை என்ற ஏழ்பாலை
யினையும் இணை நரம் பாகத் தொடுத்து நிறுத்திக் காட்டி, வலிவு, மெலிவு, சமம் என்ற மூன்றும் விளங்க, நரம்பின் அடைவு கெடாமல், பண்ணீர்மை குன்றாமல் இசைக்க வல்லவனாகும்.

நாடக மாடற்கேற்ற ஆடரங்கும், ஆடல்மகளிர் அவ்வரங்கில் வந்து நிற்கும் முறையும், அவ்வரங்கில் அமைக்கப் படும் திரைகளும் தலைக்கோலை நீராட்டி, ஊர்வலம் செய்து, அரங்கேற்றலும், அரங்கேறுபவள் வலக்காலை முன் மிதித்தேறி நிற்பதும் பிறவும் அரங்கேற்று காதைக் கண் விரித் தோதப் பெறுகின்றன.

மேற்கூறிய பதினொருவகை ஆடற்கும் தொடக்கத்தே, தெய்வத்தைப் பரவும் பாட்டுப் பாடப்பெறுகிறது. அதனைத் தேவபாணி என்கின்றனர். இயற்றமிழில் வரும் கொச்சக ஒரு போகே, பெருந் தேவபாணி, சிறு தேவபாணி யெனவும்,, ஒரு போகில் வரும் தரவையே நிலையென்று கொண்டு, முகநிலை, இடைநிலை, முரி நிலை யெனவும் கூறுவர். இசைப்பாட்டுக்கள், செந்துறை, வெண்டுறை, பெருந்தேவ பாணி, சிறு தேவபாணி, முத்தகம், பெருவண்ணம், ஆற்று வரி, கானல்வரி, விரிமுரண், தலைபோகு மண்டிலம் எனப் பத்துவகையாகவும் பிறவேறு வகையாகவும் கூறுவர். பதினொரு வகையாடலும், கொடு கொட்டி, பாண்டரங்கம், அல்லியம், மல், துடி, குடை, குடக்கூத்து, பேடு, மரக்கால், பாவை, கடையம் என வரும்.

வரிக்கூத்து, கண்கூடு வரி, காண் வரி, உள் வரி, புறவரி, கிளர் வரி, தேர்ச்சி வரி, காட்சிவரி, எடுத்துக் கோள்வரி என்று எட்டு வகைப்படுகிறது. இவை வேனிற்காதையில், “திலகமும் அளகமும் சிறுகருஞ் சிலையும்” (வரி. 74-108) என்று தொடங்கி, “எடுத்தவர் தீர்த்த எடுத்துக் கோள் வரி”என வருவது ஈறாக உள்ள அடிகளால் விளக்கப்படுகின்றன. தாளவகை, கொட்டும் அசையும் தூக்கும் அளவுமென நான்கு வகைப்படும். இவற்றுள் கொட்டிற்கு மாத்திரை அரை; அசைக்கு ஒன்று; தூக்கிற்கு இரண்டு; அளவுக்கு மூன்று. தாளவழி நிற்கும் தூக்கு, செந்தூக்கு, மதலைத் தூக்கு, துணிபுத் தூக்கு, கோயில் தூக்கு, நிவப்புத்தூக்கு, கழால் தூக்கு, நெடுந்தூக்கு என எழுவகைப்படுகிறது. இசைக் கருவிகளுள் சிறப்புடையன நான்கு; அவை, மத்தளம், தண்ணுமை, இடக்கை, சல்லிகை என்பனவாகும்.

இசை எழும் இடம் எழுவகையாகும்; அவை, குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பனவாம். இவற்றிற்கு மாத்திரையும் முறையே நான்கு, நான்கு, மூன்று, இரண்டு, நான்கு, மூன்று, இரண்டு என வரும். இவற்றால் எழுப்பப்படும் பண்கள் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம் என நான்கு வகைப்படும். இவை மேலும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்ற நந்நான்காய் விரிந்து பண் பதினாறாகக் காணலாம். இவற்றிற்குப் பொதுவில் இருபத்தொரு திறம் உண்டு. இத்திறம் இருபத்தொன்றும், அகநிலை முதலிய நான்கால் உறழின் எண்பத்து நான்காகின்றன. இவற்றோடு தாரப்பண்திறம், பையுள்காஞ்சி, படுமலை என்ற மூவகைப் பண்களும் கூடப் பண்கள் நூற்று மூன்றாகின்றன. இவற்றின் விரிவை இந் நூற்கு நாவலர் ந. மு. வே. நாட்டாரவர்கள் எழுதிய உரையிற் காண்க.

குரல் முதலாக வரும் ஏழிசையும் வடமொழியில் வரும் சட்சம், ரிடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம் என்ற ஏழுமாம் என்பார் கூற்றை மறுத்து, நாட்டா ரவர்கள் “இவற்றுள் இரண்டாவதும் மூன்றாவதும் நான்கா வதும் மாத்திரையில் ஒவ்வாமை காண்க” (சிலப். பக். 77) என்பர். இனி, திரு. இராமச் சந்திர தீட்சீதரவர்கள் *“தமிழிசையின் சுத்த தாளமுறை அரிக்காம் போதி” என்று கூறுகின்றார்.

இந்நூற்கண் யாழ் பேரியாழ், மகரயாழ், சகோடயாழ் செங்கோட்டியாழ் என நால்வகைப் படுகிறது. இவை முறையே நரம்புகள் 21,19,14,7 ஆகும். இவை தவிர வேறும் உண்டு. குழல் வகையிலும் குழல், கொன்றை, ஆம்பல் என வகை பல கூறப்படு கின்றன.

இசை நிலம் ஏழினுக்கும் ஒவ்வொருத்தராக நின்று, பண் ணெழுப்பி ஆய்ச்சியர் குரவையயரும் திறம் மிக்க இன்பந் தருவதாம். இது முதனூலிற் காண்க. ஈண்டு விரிக்கிற் பெருகும்.

XIV. சில வழக்காறுகள்:- ஆசிரியர் தொல்காப்பியர் காலத்தும், சங்க நூற் காலத்தும், திருவள்ளுவர் காலத்தும் இருந்த திருமண முறை இச்சிலப்பதிகாரக் காலத்தே மாறியிருக்கிறது. தொல் காப்பியனார் முதலியோர் காலத்தே நிலவிய களவு வழி நிகழ்ந்த காதல் மணம் இளங்கோவடிகள் காலத்தே இல்லை
    யென்பதை, கோவலர்ககும் கண்ணகிக்கும் நிகழ்ந்த மணவினை காட்டுகின்றது. “இரு பெருங் குரவரும் ஒரு பெருநாளால் மணவணி காண மகிழ்ந்தனர்” என்பது அடிகள் உரையாகும். மேலும், “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத், தீவலஞ் செய்வது” என்ற முறை இவர் காலத்தே தோன்றிவிட்டது.

திருமணம் புணரும் மக்களை வாழ்த்துமிடத்தும், கடவுட் பூசை நிகழ்த்துமிடத்தும் பிறாண்டும் அரசனை வாழ்த்தும் நன் முறை, “செருமிகு சினவேற் செம்பியன், ஒரு தனியாழி உருட்டு வோன் எனவே” (மங்கல). என்றும், “பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறநாட்டுக், கட்சியும் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுக விறல் வெய்யோனே” (வேட்டுவ.) என்றும், “உண்டு மகிழ்ந்தானா வைகலும் வாழியர், வில்லெழுதிய இமயத்தொடு, கொல்லியாண்ட குடவர் கோவே” (குன்றக்.) என்றும் வருவன வற்றால் இனி துணரப்படுகின்றது.

அடிகள் காலத்தே தமிழ்நாட்டு மனையறம் சீரிய நிலையில் இருந்திருக்கிறது. பெற்றோர் வழங்குவன கொண்டு மகளிர் தம் கணவனுடன் கூடி, அறவோர்க் களித்தல், அந்தணரோம்பல், துறவோர்க் கெதிர்தல், விருந்து புறந்தருதல் முதலிய அறங்களைச் செய்தனர். கண்ணகி மாதரியின் மனையில் தங்கிக் கோவலற்கு உணவு சமைத்து உண்பிக்கும் திறம், மிக்க பழங்கால நிகழ்ச்சி யாயினும் இன்று நிகழ்வது போலவே உளது. அவர் சமைத்த கறிவகை,

“ கோளிப் பாகல் கொழுங்கனித் திரள்காய்,
வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய்
மாவின் கனியொடு வாழைத் தீங்கனி” (16:24-26)

இப்போதும் செய்யப்படுவனவே. கணவற்கு வாழையிலையை விரித்து உணவிட்டு அமுது செய்விப்பது இப்போது நம் கண் முன் நிகழ்வது போன்று தோன்றுகிறது.

பெற்றோர் கொடுப்பன பெற்று, அவர் அமைத்த மனைக்கண் இருந்து மனையறம் புரியும் இக் கொள்கை சங்க காலத்துக் கருத் தொடு மாறுபடுகிறது. சங்க இலக்கியத்துள் வரும் தலைமக்கள், “போனக மென்பது தானனுழந்துண்டல்” என்னும் கொள்கை யுடையர். “கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக், கொடுத்த தந்தை கொழுஞ் சோறுள்ளாள்”(நள் 110) எனத் தலைவியது மனைநலம் கண்டு ஆசிரியர் போதனார் என்னும் சான்றோர் கூறுவதும், “பெற்றேம் யாமென்று பிறர் செய்த இல்லிருப்பாய், கற்றதிலை மன்றகாண்” (கலி. 111) எனத் தலைவி கூற்றாகச் சான்றோர் கூறுவதும் சங்க நூற்கருத்தை வற்புறுத்துதல் காண்க.

இந்நூலில், ஆங்காங்குக் குறிப்பாகக் கூறப்படும் விழாவும் வழிபாடும் கழித்துச் சிறப்பாக அடிகளால் கூறப்படும் விழாவும் விளையாட்டும் பலவல்லவாயினும் சில உள்ளன. இந்திர விழா, பங்குனி வில்விழா, வேட்டுவர் குரவை, ஆய்ச்சியர் குரவை, குன்றவர் குரவை முதலியன சிறப்புடைய னவாகும்.

இவற்றுள், இந்திர விழா காவிரிப்பூம் பட்டினத்தில் சித்திரைத் திங்கள் சித்திரை நாள் தொடங்கி இருபத்தெட்டு நாள் நடை பெறுகிறது. மணிமேகலை நூல், இவ்விழாவை நகர்க்கு அறிவித்தலும், விழா நிகழும் வீதிகளில் நடக்கும் காட்சிகளும் காட்டி நிற்ப, இந்நூல் அவ்விழாவினை மக்கள் கொண்டாடும் முறையினை இந்திர விழவு ஊர் எடுத்த காதைக்கண் விரித்துக் கூறுகிறது. காவற் பூதத்துப் பலி பீடிகைக்கு மறக்குடி மகளிர் சென்று,

“ புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் பகையும் பொங்கலும் சொரிந்து
பெருநில மன்னன் இருநில மடங்கலும்
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி” (சிலப்.5:68-73)

வழிபடுகின்றனர். போர் வீரர், “வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க” என வேண்டித் தம் உயிர் பலியிடுகின்றனர். பின்பு பூத சதுக்கம் முதலாகவுள்ள ஐவகை மன்றங்கட்கும் அரும் பலியூட்டி, மங்கலக் கொடிகளும், தோரணங்களும், பூரண கும்பம், பொற்பாலிகளும் பிறவும் கொண்டு; நகரையும், கோயில்களையும் புனைந்து, ஐம்பெருங் குழுவும் எண் பேராயமும்,அரசகுமரரும், பரதகுமரரும், தேர் முதலிய நால்வகைப் படை வீரரும், பிறரும் ஒன்று கூடி, காவிரிக்குச் சென்று நீர் கொணர்ந்து, “விண்ணவர் தலைவனை விழு நீராட்டி”, பிறவாயாக்கைப் பெரியோன் முதலாகவுள்ள கோயில்கள் பலவற்றிலும் வழிபாடாற்றுகின்றனர். அறவோரும், புலவரும், பிறரும், அறநிலையங்களில் மக்கட்கு அறம் உரைக்கின்றனர். இசைப் புலவர் இசையின்பம் வழங்க, நாடக மகளிர் ஆடலும், பாடலும் காட்டி, மக்களை இன்புறுத்துகின்றனர். விழாவின் இறுதியில் உவாநாள் வருகின்றது. மக்கள் விடியற்போதே சென்று கடலாடிக் கடற் கானற் சோலையில் தங்கி இன்புறுகின்றனர்.

இவ்விந்திர விழா நிகழ்ச்சி குறித்து அடியார்க்கு நல்லார் கூறிய குறிப்பைக் கொண்டு காலக் கணக்கிட்டு ஆராய்ச்சி செய்த திரு. L.D. சாமிக்கண்ணுப் பிள்ளை யவர்கள், அடியார்க்கு நல்லார்கூறிய குறிப்பு வழுவுடைத் தென்றாராக, சிலப்பதிகார ஆங்கில மொழி பெயர்ப்பாசிரியர், கொடைக் கானல் வானியலா ராய்ச்சியாளர் துணைகொண்டு, அக் குறிப்புக் களையே ஆராய்ந்து, “இவ் விந்திர விழா கி.பி. 174 ஆம் ஆண்டு, சித்திரைத் திங்கள் முதல்நாள் சனிக்கிழமை தொடங்கியது”* என்று குறிக்கின்றார்.

இவ் விழா நிகழ்ச்சியைக் காண்போர் நினைவில், கரிகால் வளவன் காவிரியில் புதுவெள்ளம் வருங்கால் கொண்டாடும் புது நீர் விழா தோன்றி மகிழ்விக்கின்றது என்று அடிகள் கூறுவதால், புதுநீர் விழாவயரும் வழக்கமும் சிலப்பதிகாரக் காலத்தே இருந்தமை தெரிகிறது.

“ கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனியரசு யாண்டுளன்”

என்று அடிகள் கூறுவதும், இப் பகுதிக்கு அரும்பதவுரை காரர் பொருள் கூறுவதும் நோக்கின், அடிகள் காலத்தே மதுரையில் காமவேளுக்குப் பங்குனித் திங்களில் வில்விழா நடந்த செய்தி தெரிகிறது.

காட்டுள் வாழும் வேட்டுவர் தமக்கு வேட்டையும் பிற வருவாயும் இன்றி வறனுற்று வருந்தும் காலமெய்தின் அவர்கள், காடுகிழாளாகிய கொற்றவைக்குப் பரவுக்கடன் செய்து, கொற்றவை, வள்ளிநாயகி முதலாயினோர் கோலம் தாங்கி வரிக்கூத்தாடி வழிபடுவதுண்டு. அவர்கள் பழங்குடியிற் பிறந்த ஒருத்தியை, தலைமயிரைப் பின்னிச் சடையிட்டு அதில் பாம்பு போலப் பொன் நாணைச் சுற்றி, பன்றிப் பல்லைப் பிடுங்கி அம் முடியில் பிறை போலச் சூட்டி, புலிப் பல்லால் மாலை யணிந்து, அதன் தோலை அவட்கு உடையாக உடுத்துக் கலைமான்மேல் ஏற்றிப் பல்வகை இயம் முழங்க ஐயைக் கோட்டத்திற்குச் சென்று வழிபடுவர். அவளும் அணங்கேறியாடுவள். அவள், அவர்கள் செய்யும் வழி பாட்டினை ஏற்றுக் கொண்டதாகக் கூறிய பின் பல வகைப் பாட்டுக்களைப் பாடி அக் கொற்றவையைப் பரவி முடிவில் தம் அரசன் வெற்றி மேம்பட்டு விளங்குமாறு வாழ்த்தி அமைவர்.

இடையர்சேரியில் வாழும் இடையர்கள் தம் இறைவனான கண்ணனைக் குரவைக் கூத்தாடிப் பரவுவர். பரவுதற்குரிய காலத்தே யன்றி, தங்கள் சேரியில் ஏதேனும் தீக்குறி நிகழினும் இக் குரவைக் கூத்தை யாடுவர். கண்ணகியும் கோவலனும் தங்கி யிருந்த ஆய்ச்சியர் சேரியில் தீக்குறி பல நிகழவே அவர்கள் குரவைக் கூத்து ஆடலாயினர்.

ஆயர்மகளிருள் எழுவரை வட்டமாக நிறுத்தி மேற்கிலிருந்து ஒவ்வொருத்திக்கும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று பெயரிட்டு, குரல் என்பவளை மாயவனாகவும், இளி என்பாளைப் பலதேவனாகவும், துத்தம் என்பாளை நப்பின்னை யாகவும் கொள்வர். பின்பு, மாயவன் அருகில் பின்னையும், தாரமும் நிற்ப, பலதேவனைச் சார உழையும், விளரியும் நிற்பர். கைக்கிளை பின்னைக்கு இடப்பக்கத்தேயும், விளரி தாரத்துக்கு வலத்தும் நிற்ப, அம் முறையே இசையும் இயக்கப்பெறும். இம்முறையே இவர் கண்ணனைப் பாராட்டத் தொடங்கி, ஆடுபவரைப் புகழ்ந்து உள்வரியை வாழ்த்தி முன்னிலைப் படுத்தியும் படர்க்கையில் வைத்தும் திருமாலைப் பரவி, தமக்குற்ற, இடர் நீங்கவும் தம்நாட்டு வேந்தன் வெற்றி யெய்தவும் பாடியும் பரவியும் வாழ்த்தியும் அமைவர்.

சேரநாட்டுக் குறவரும் கண்ணகியார் விண்புகுந்தது கண்டு பெருவியப்புற்றுக் கண்ணகியாரைத் தெய்வமாகக் கருதி முருகனைப் பரவிச் சேர மன்னனை வாழ்த்துகின்றனர். இதனால், தம் கூட்டத் திடையே ஏதேனும் புதிய அரிய நிகழ்ச்சி நிகழினும் தம் கடவுளரை வழிபட்டுக் குரவை முதலியன அயர்வர் என்று அறிகின்றோம்.

நாட்டு மக்களிடையே நிமித்தம் காண்பதும், நாள் பார்த்தலும், கனாப்பயன் கருதுதலும், வழக்கமாக உள்ளன. கண்ணகி, மாதவி முதலாயினார்க்குக் கண் துடிப்பதும், கண்ணகி, கோவலன், பாண்டியன் தேவி முதலாயினார் தீக்கனாக் காண்பதும்; கோவலன் சிலம்பு விற்கச் செல்வான், வழியில் தீக்குறி காண்பதும்; சேரன் செங்குட்டுவன் நன் முழுத்தம் பார்த்துக் குடை, வாள் என்பவற்றை முதற்கட் செலுத்துவதும்; கோயிலில் கடவுளை வணங்கி ஊர்விட்டு நீங்குபவன் அக்கடவுளின் அருட்கொடை (சேடம்) பெறுவதும்; பிறவும் மேற்கூறிய வழக்காற்றுக்குச் சான்று பகர்கின்றன. உரை காரர்கள் கனாநூல் என்றொரு நூலை மேற் கொள்ளலால், கனாப் பயன் காண்டல் சிலப்பதிகாரக் காலத்தே மக்களிடையே நன்கு வேரூன்றியிருத்தல் தெரிகிறது.

பூதங்கள் முதலியவற்றை நிறுவிப் பலியிட்டு வழிபடுவதும், அரசர், வணிகர், அந்தணர், வேளாளர் என்ற நால்வகை வருணத்துக்கும் காப்பாக நால்வகைப் பூதம் இருப்பதாகக் கருதுவதும் அக்கால வழக்கமாகும்.

மக்கள், தம் அரசனைத் திருமாலாகவே நினைந்து வழி பட்டிருக்கின்றனர். இது,

“ தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே
தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக்
கோகுல மேய்த்துக் குருந்தொசித்தான் என்பரால்.”

‘மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
பொன்னந் திகிரிப் பொருபடையான் என்பரால்’
‘மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
கன்னவில்தோ ளோச்சிக் கடல் கடைந்தான் என்பரால்’

(17; உள்வரி வாழ்த்து.1-2-3)
என அடிகள் கூறுமாற்றால் உணரப்படும். இவ் வழக்குப் பற்றியே போலும், “திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே” எனப் பிற்காலத்துப் பெரியோர்கள் பேசலாயினர்.

இனி, இவ் வேந்தர்கட்கு இவர்தம் நாட்டு யாறுகளைப் பெண்ணாக உருவகம் செய்து மனைவியராகப் புனைந்து பாராட்டு வதும் வழக்கமாக உளது. இதனைக் கானல்வரியில், கோவலன், காவிரியைப் பாடுவான்,

“ திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோ லதுவோச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி” (7:)

என்று பாடுவதால் அறியலாம்.

அடிகள் காலத்தே உழவுத்தொழிலால் நெல் முதலிய பல் வகைக் கூலங்களும் விளைக்கப்பெற்றதோடு பல வேறுகைத் தொழில்களும் நடந்திருக்கின்றன. தமிழ்மக்கள் அரசர், வணிகர், அந்தணர், வேளாளர் என உயர்ந்தோரும், இவர் தம் ஆதரவு பெற்றுக் கைத்தொழில் புரிவோருமாய்ப் பிரிந்திருக் கின்றனர்.

தொழில் புரிவோர், கம்மியர், குயவர், தச்சர், கொல்லர், துன்னர், கஞ்சர், கூவியர், காழியர், பாசவர், வாசவர், கணக்கர், பரதவர், குறவர், ஆயர், எயினர், கூத்தர், பாணர், பொருநர், கண்ணுளர், அம்பணவர், ஓவர், சூதர் முதலாகப் பலவேறு வகையினர் இருந்திருக்கின்றனர். இவர்கள் மேற் கொண்டிருந்த தொழில் வகைகள் புகார், மதுரை முதலிய நகரத்திடத்தே கூறப் பட்டிருக்கின்றன. அவற்றை ஓராற்றால் கூறலுறின், தச்சுவேலை, சுதைவேலை, மட்பாண்டம் செய்தல், மணிகடைதல், சங்கறுத்தல், வளைபோழ்தல், மாலை தொடுத்தல், கயிறுபின்னுதல், மரக்கலம் சமைத்தல், கலம் செலுத்துதல், படைக்கலம் செய்தல், பொன்மாற்றுக் காண்டல், கூலமளத்தல், துணி தைத்தல், தோல் தைத்தல், ஓவிய மெழுதுதல், கூத்தாடல், பாட்டிசைத்தல், இசைக்கருவியிசைத்தல், ஒலைப்பாய் முடை தல், செம்பு வெண்கலம் பொன் இரும்பு வெள்ளி என்ற இவற்றால் பணியும் பாண்டமும் செய்தல், அரசர் முதலி யோரிடம் பணிசெய்தல், போர்செய்தல், ஆனிரைமேய்த்தல், தேன் அழித்தல், மீன் பிடித்தல், முத்துக்குளித்தல் பவழம்ஈட்டல் முதலிய பலவாகும்.

மேலும், பெருங்குடிவணிகரேயன்றி, வேறேயும் சிலர் அப்பம், பிட்டு, வேறு பண்ணியாரம் விற்பர்; சிலர் கள், மீன், ஊன் முதலியவை விற்பர்; சிலர் உப்பு, எண்ணெய் முதலியவற்றை விலை செய்வர். உள்நாட்டிலிருந்து பல்வகைக் கூலங்களும் விரைப்
பொருளும் வண்டிகளிற் கொணர்ந்து விற்பர்; கடற்கரை வாழ்நர் உப்பு, மீன் முதலியவற்றை உள்நாட்டிற்கு வண்டிகளில் கொண்டு செல்வர். கூட்டம் கூட்டமாகச் செல்லும் இவர்கட்கு வாணிகச்சாத்து என்பது பெயர். மோர், நெய் முதலியவற்றை வேற்றிடம் கொண்டு சென்று ஆயர் விற்பர். பூ விற்போரும் உளர்.

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் மிக நயமான உடை நெய்து விற்பர். அவற்றுள் பல வெளிநாடுகட்குச் செல்கின்றன. கடலிற் கலஞ்செலுத்தி வாழ்வோர் பலர். கடலிடத்தேயன்றி யாறுகளிலும் பல்வகை நாவாய்களைச் செலுத்துவர். கப்பல்களின் நலத்தை அடிகள் வியந்து, “நீரணி மாடம்” என்று பாராட்டு கின்றார். கடல்வாணிகத்தின் நலம்,

“ அரும்பொருள் தரூஉம் விருந்திற் றேஎம்
ஒருங்கு தொக்கன்ன உடைப்பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவன ரீட்ட” (சிலப்.2:5-7)

என வருவனவற்றால் அறியலாம். இதன் பயனன்றோ வேற்று நாட்டு யவனர்களையும் இந் நாட்டிற்கு வருவித்து வாழ வைத்தது!

இவ்வாறு ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே ஆராயலுறின், இவ்வாராய்ச்சி வரம்பின்றிப் பெருகுமாதலின், இவற்றை இம்மட்டில் நிறுத்தி, ஆசிரியர் இளங்கோவடிகளின் புலமை நலத்தைச் சிறிது காண்பாம்.
XV. இளங்கோவடிகளின் குணமாண் புலமை நலம்.

இளங்கோவடிகளின் புலமைநலம் காணும் பகுதியே இந்நூலாராய்ச்சிப் பகுதிகளுள் மிக்க அரிய பகுதியாகும். “புலமை
மிக்க வரைப் புலமை தெரிதல் புலம்மிக்கவர்க்கே” உரிய தென்பது பண்டையோர் கொள்கை. அஃது எக்காலத் துக்கும் ஒப்ப முடிந்த உண்மையுமாகும். அடிகளின் பாட்டுக்களின் நலத்தைத் தம் அறிவு முழுதும் செலுத்தி ஆராய்ந்து நுகர்ந்த அடியார்க்கு நல்லார், “முழுத்தும், பழுதற்ற முத்தமிழின் பாடல்” என்று பாராட்டு கின்றார். இந்நூலெழுந்த காலம்தொடங்கி, இன்று வரை, அடிகளின் புலமைநலத்தைச் சிறிதேனும் சுவைத்தறியாத தமிழறிஞனே இத் தமிழகத்தில் இருந்ததில்லை யெனின், அது மிகையாகாது.

இவர் அரச குடும்பத்திற் பிறந்து, அரசர்க்குரிய கல்வியறிவும், செல்வாக்கும் பெற்று, அற நூல்களை நன்கு பயின்று, தம் தமையன் செங்குட்டுவன் மனம் வெறாவண்ணம் துறவு பூண்டு, குணவாயிற் கோட்டத்தே அறவோரும், புலவர் பெருமக்களும் உடன் சூழ இருந்து நல்லறிவு சிறந்தவ ரென்பது, இவர் வரலாறு கூறியவிடத்தே கூறினோம். உயர் நிலை, இடைநிலை, கீழ்நிலை யெனப்படும் மக்கள் வாழ்க்கை நிலையில், அடிகள், ஏனைய பெரும்பாலார் போல இடைநிலை, கீழ்நிலைகளில் தோன்றாது உயர்நிலையில் தோன்றி, உயர்நிலையில் வளர்ந்து, உயர்நிலையில் சிறந்த உயர் வாழ்வுடையர் என்பது துணிவாகிறது. இடை நிலையர், கீழ் நிலையர் போல, மக்கள் வாழ்வில் காணப்படும் குறைகளையும், புன்னெறிகளை யும், பிறவற்றையும் நேரிற்கண்டறியும் வாய்ப்பு இவர்க்குக் கிடையாது. துறவு மேற்கொள்ளும் காலம் வரையில், உலக வாழ்விலும் உயர் நிலை வாழ்வும், உயர்ந்தோர் கூட்டுறவுமே பெற்றதனாலும்; துறவு பூண்ட பின், உலக வாழ்வில் உவர்ப்புக் கொண்டுவிட்டதனாலும், இவர் செய்யுட்களில் பலவேறு நிலை யினையுடைய மக்களின் பண்பும், செயலும், விளங்கித் தோன்ற வில்லை. அல்லும் பகலும் நூற்பயிற்சியும், ஆராய்ச்சியும் செய்தவ ராதலின்;இவர் வழங்கிய கருத்துக்கள் பலவும் நூலறிவே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. கோவலன் தோற்றம் கண்டு ஐயுற்ற ஊர்காப் பாளர்க்குப் பொற்கொல்லன், கள்வர் செயல் வன்மையும் நுட்பமும் கூறுவான், களவுநூல் கருதுக்களை வகுத்தும் விரித்தும் எடுத்துக் காட்டோதியும் காவலரை மயக்குகின்றான். இவ்வாறே, கவுந்தியடிகள், கோவலன், கண்ணகி, மாதவி, அரசர், அந்தணர் என்று எவர் எது பேசினும், பண்டை நூற்கருத்துக்
களையே எடுத்துப் பேசுகின்றனர். இவற்றால், அடிகள் மிகப் பரந்த நூற்புலமை யுடையரென்பது புலனாம். இசை நாடக நூல்களைக் காட்டுவது மிகையன்றோ.

கோவலன் திருமணத்தில் மாமறை நூலும், மனை வாழ்வில் கண்ணகியைப் பாராட்டுமிடத்துப் பலவேறு புராண வரலாறுகளும், மாதவி அரங்கேறுமிடத்து இசை நாடக நூல்களும், அந்திமாலைச் சிறப்புரைக்குமிடத்து அரசியற் கருத்தும், இந்திர விழாவில், அறவோரும் புலவரும் உரைக்கும் அறநூற்கருத்தும், இவ்வாறே ஒவ்வொரு பகுதியிலும் பலப்பல நூல்களும், நூற் கருத்துக்களும் வருவன யாம் மேலே கூறிய உண்மையை வற்புறுத்து வனவாகும்.

அரசிளங்கோவாகிய இவர் மேற்கொண்டிருந்த துறவு மிகத் தூய்மையானது. பிற்காலத் துறவிகட்கும், இவர்க்கும் பெரியதோர் வேறுபாடு காணப்படுகிறது. பிற்காலத் துறவியர், தாம் உள்ளத்தே மிக்க தூயராய் இருந்தபோதும், பாடிய பாட்டுக்களை நோக்கின், இன்பச் சுவையில் ஈடும், எடுப்பும் இல்லையென்னுமாறு பாடியிருக் கின்றனர். திருத்தக்கதேவர் பாடிய சீவகசிந்தாமணியும், தோலா மொழித் தேவர் பாடிய சூளாமணியும், கச்சியப்பமுனிவர் பாடிய தணிகைப் புராணமும், ஏனைத் துறவிகள் பாடிய சிறு நூல்களும் இக் கருத்தை முற்றும் உண்மையே எனத் துணிவிக்கின்றன. ஆனால், இளங்கோவடிகள், இவர்கள் கையாண்ட இன்பத் துறையை எடுத்துரைக்கும் திறம் எண்ணுந்தோறும் இன்பம் பயக்கின்றது. கோவலன் இளமைச் செவ்வியும், செல்வச் செருக்கும் மிக்குக் காமுகனாய் மாதவிபால் ஒழுகும் திறம் இன்பச் சுவைக்கு இனிய இடமாகும். அதனைக் கூறும் அடிகள், இன்பச் சுவையும் கெடாது, தாம் அதனைக் கூறற்குக் கூசுகின்ற அக் குறிப்பும் மறையாது,

“ மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னோடு
இல்வளர் முல்லை மல்லிகை மயிலை
தாழிக் குவளை சூழ்செங் கழுநீர்
பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து
காமக் களிமகிழ் வெய்திக் காமர்
பூம்பொதி நறுவிரைப் பொழிலாட் டமர்ந்து
நாண்மகி ழிருக்கை நாளங் காடியில்
பூமலி கானத்துப் புதுமணம் புக்குப்
புகையும் சாந்தும் புலராது சிறந்து
நகையா டாயத்து நன்மொழி திளைத்துக்
குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபிற் கோவலன் போல
இளிவாய் வண்டினொடு இன்னிள வேனிலொடு
மலய மாருதம் திரிதரும்” (சிலப்.5:190-203)

எனத் தென்றல்மேல் வைத்து நயமுறக் கூறும் திறம் காணலாம். கானல்வரி, வேட்டுவவரி, குன்றக்குரவை, ஆய்ச்சியர் குரவை முதலிய விடத்தும் பல பாட்டுக்கள் இன்பச்சவை குறித்து வருவன உள. அவற்றிடையே அடிகள் தோற்று விக்கும் காதலின்பம் மிகத் தூய உயரிய காதலின்ப மாதலை நன்கு காட்டுகின்றார். அழகிய சோலையிடத்தே காளை யொருவன் தன் காதலியைக் கண்டு கூடி இன்புறுகின்றான். பின்பு அவளின் நீங்கித் தனித்திருக்கும்போது, அவளைக் கண்ட காட்சியைப் பாடுகின்றான். இக்கருத்தை அடிகள் நமக்கு உரைக்கப் புகுந்து,

“ திரைவிரி தருதுறையே, திருமணல் விரியிடமே,
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே.
மருவிரி புரிகுழலே, மதிபுரை திருமுகமே,
இருகய லிணைவிழியே எனையிடர் செய்தவையே”

(சிலப்.7:12-15)
என்று பாடிக்காட்டுகின்றார். இது கானல்வரி; கோவலன் பாடுவது, இதன்கண், அக்காளை சென்ற இடம் அலை யலைக்கும் நீர்த்துறை என்பதைத் “திரை விரிதரு துறை” என்றதனால் காட்டி, அவ்விடத்தே தூயவெண்மணல் விரிந்திருந்தது என்பதை, “திருமணல் விரியிடமே” என்றும், அவ்விடம் மிக்க நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த சோலை யென்றற்கு, “விரைவிரி நறுமலரே மிடைதருபொழிலிடமே” என்றும், மணம் விரிந்து கமழ்ந்ததே அக்காளை அப் பொழிற்குச் செல்ல ஏதுவாயிற் றென்றற்கு, “விரைவிரி நறுமலரே” என்றும், அவ்விடத்தே அவன் மனம் கவர்ந்த இளநங்கை, அவன் வரும் பக்கத்தே முதுகுகாட்டிக் குழல்தோன்ற நின்று கொண்டிருந்த
தோடு, ஆங்குள்ள பூக்களைக் கொய்து தலையில் சூடி யிருந்தாளென அவள் ஆங்கு வந்ததற்குக் காரணமும் தோன்ற, “மருவிரி புரிகுழலே” என்றும், அவன் வரக்கண்டு, அவளது அழகிய ஒளிதிகழும் மதிபோலும் முகம் அவன்பக்கம் திரும்பக் கண்டான் என்றற்கு “மதிபுரை திருமுகமே” என்றும், அவள் தன் காதற் குறிப்பும் உடன் பாடும் தோன்ற அவனைக் கண்டாள், இருவர்க்கும் கருத்து ஒன்றாயிற் றென்றற்கு, “இருகயல் இணை விழியே” என்றும், அப் பார்வை அவனுக்கு என்றும் மறவாத நிலையில் நெஞ்சில்நின்று வேட்கையுணர்வைக் கொளுத்திய வண்ணம் இருந்தது தோன்ற, “எனையிடர் செய்தவையே” என்றும் சொற் சுருக்கமும் பொருள் விளக்கமும் நவில்வோர்க்கு இனிமையும் பயப்ப அடிகள் கூறியிருத்தல் காண்க. இந்நலம், அடிகள் பாட்டு முழுதும் இருப்பது தமிழ் நலம் துய்க்கும் சான்றோர் பலரும் உணர்வராதலின், இம்மட்டில் நிறுத்தி மேற் செல்கின்றாம்.

தாம் சொல்லக் கருதும் கருத்தை, மயங்கவைத்தல், திரிசொற் புணர்த்தல் முதலியனவின்றி, கேட்போர் இனிதுணருமாறு தெளிய வுரைத்தல் வேண்டுமென்ற குறிக்கோள் அடிகளின் சிறப்பியல் பாகும். இதனைக் கண்ணகியார் வழக்குரைத்த பகுதிக்கண் காணலாம். அவ்வழக்குரையில் சில சொற்களால் கண்ணகியார் தம் கருத்தை அரசன் அறியுமாறு உரைக்கும் முறையினை ஆண்டுக் காண்க. ஈண்டுக் கூறுவது வேண்டா கூறலாம்.

இனி, அடிகள் சேரர் குலத்திற் பிறந்தாராயினும், துறவு பூண்டு, அருளும் அறமும் நிறைந்த உள்ளத்தராகலின், இந்நூற்கண் வரும் அனைவர்பாலும் யாவர்க்கும் வெறுப்பும், வெகுளியும் பிறவாவண்ணம் யாவர் நலமும் ஒளியாது உரைக்கின்றார். மூவேந் தருள் சோழவேந்தர் சிறப்பை மங்கலவாழ்த்துப் பாடலில், ஞாயிறு, திங்கள், மழை முதலிய வற்றை வாழ்த்து முகத்தாலும் இந்திரவிழவூ ரெடுத்த காதையில் “கரிகால் வளவன்” வடநாடு சென்று இமையத்திற் புலிப்பொறி வைத்து வடவேந்தர் சிலரை வென்று, வச்சிர நாடு, மகதநாடு, அவந்திநாடு முதலிய நாட்டவரைப் பணி வித்து அவரால் கொற்றப்பந்தரும், பட்டி மண்டபமும், தோரணவாயிலும் பிறவும்பெற்ற செய்தி கூறுமுகத்தாலும், கரிகாலன் கழார் முன்றுறைக்கண் புதுநீர் விழா அயர்ந்தது கூறுதலாலும், வழக்குரை காதைக்கண் கண்ணகியார் புகார் நகரத்தின் சிறப்போது மாற்றாலும் விரியக் கூறும் அடிகள், பின்னர் மாடலன் செங்குட்டுவனுக்கு இறுக்கும் விடை வாயிலாக, சோழ வேந்தரின் அரசுமாண்பினை வியந்து,

“ வெயில்விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப
எயில்மூன்றெறிந்த இகல்வேற் கொற்றமும்,
குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர
எறிதரும் பருந்தின் இடும்பை நீங்க
அறிந்துடம் பிட்டோன் அறந்தரு கோலும்
திரிந்து வேறாகும் காலமும் உண்டோ?
தீதோ இல்லைச் செல்லற் காலையும்
காவிரி புரக்கும் நாடுகிழ வோற்கு” (சிலப்.27:164-171)

என்று கூறி நம்மனோர் மனத்தே நன்மதிப்பு நிலவுவிக்கின்றார். காப்பியத் தலைமக்கள் பிறந்தநாடு சோழ நாடாதல் பற்றி அதனை அவ்வாறு புகழ்ந்து கூறல்வேண்டும் என்ற நியமமும் இன்றாதலின், உள்ளதன் உண்மை கூறும் கடப் பாட்டால் ஓதுகின்றாரென்றே கொள்ளல் வேண்டும். அடிகள், சேரர்குடிக் குரியோராதலின், அதனைப் பற்றிக் கூறுமிடத்தும் மிகைப்படுத்தியோ, புனைந்தோ அவர் கூறுகின்றாரோ எனின், அதுதான் கிடையாது. எங்கும் உண்மை கூறும் புலமைநலமே இவர்பால் மிக்கு நிற்கிறது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடற்கடம் பெறிந்த தும், அவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் பாலைக் கௌத மனார்க்குத் துறக்கம் நல்கியதும், இமயவரம்பன் இமயத்தில் விற்பொறி வைத்ததும், இவ்வாறே,

“ போற்றி மன்னுயிர் முறையிற் கொள்கஎனக்
கூற்றுவரை நிறுத்த கொற்றவ னாயினும்,
வன்சொல் யவனர் வளநாடாண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோ னாயினும்
மிகப்பெருந் தானையோடு இருஞ்செரு வோட்டி
அகப்பா எறிந்த அருந்திற லாயினும்,
உருகெழு மரபின் அயிரை மன்னி
இருகடல் நீரும் ஆடினோ னாயினும்,
சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோ னாயினும்”

(சிலப்.28;139-148)
எனச் சேரமன்னர் பலருடைய வெற்றி நலங்களையும், “எழுமுடி யாரம்” அணியும் சிறப்பும் பிறவும் கூறுவதும் இவர் சேர மன்னரின் சிறப்புக் கூறும் நல்லுரைகளாகும். இவற்றுட் பலவும் சங்க கால நல்லிசைச் சான்றோர்களால் அவ்விலக்கியங்களுட் கூறப் பட்டிருத் தலால் இவர் கூற்றின் மெய்ம்மை இனிது தெளிவாகின்றது.

கண்ணகியாரது இவ் வரலாறு காண்போர்க்கு, அவர் கற்புச் சிறப்பாலும், அவரால் பாராட்டப்படுதலாலும், சோழ மன்னர்பாலும், அவர்க்குக் கோயிலெடுத்துச் சிறப்பிப்ப தோடு, தமிழ்வேந்தரை இகழ்ந்த வடவாரியமன்னரை ஒறுத்துப் பணிவித்தும், சிறைப் படுத்தும், பின்பு சிறை வீடு செய்து சிறப்பித்தும் போற்று
வதாலும்; கண்ணகியார் வரலாற்றை நூல்வடிவில் தருவதாலும் சேரமன்னர் பாலும் வாரமுண்டாவது இயல்பேயன்றிக் கோவலனைக் கள்வன் என்ற பொற்கொல்லன் சொல் கேட்டு உண்மையாராயாது கொலை புரிவித்த பாண்டியன்பால் அண்புண்டாவதில்லை; கண்ணகியார் பாண்டியனை “இறைமுறைபிழைத்தோன்,” “தேரா மன்னன்” என்பனவும் பிறவுமே அவருள்ளத்தை மாற்றி விடுவனவாகும். அவன் அவ்வாறு செய்த குற்றத்தைக் கண்ணகியார் வாயிலாகக் கண்டித்த இளங்கோவடிகள், பாண்டியர் குடிக்குற்றம் கூற ஒருப் படாது பாண்டி வேந்தர் ஆட்சி நலத்தைப் பலவிடங்களில் பரிந்து பாராட்டுகின்றார். மாடலன் கூற்றாக,

“ அடியில் தன்னளவு அரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை யாண்ட தென்னவன் வாழி;
திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச்
செங்கணா யிரத்தோன் திறல்விளங்காரம்
பொங்கொளி மார்பில் பூண்டோன் வாழி;
முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னிஎன்று
இடியுடைப் பெருமழை யெய்தா தேகப்
பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்க”

(சிலப்.11:17-29)
என்பதும், மதுரைமாநகர் புகுந்து அதன் நலம் கண்டு திரும்பிய கோவலன் கூற்றாக,

    நிலம்தரு திருவின் நிழல்வாய் நேமி  

கடம்பூண் டுருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க்
கோலின் செம்மையும் குடையின் தண்மையும்
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்
பதியெழு வறியாப் பண்பு மேம்பட்ட…..
தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும்”

(சிலப்.13:5-10)
என எடுத்து மொழிவதும், கோவலன் கூறுவதாக,

“ கோள்வல் உளியமும் கொடும்புற் றகழா;
வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா;
அரவும் சூரும் இரைதேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா;
செங்கோல் தென்னவர் காக்கும் நாடென
எங்கணும் போகிய இசையோ பெரிதே”

என்பதும், மதுரையைக் கண்ணகியார் சீறியபோது மதுராபதி போந்து, பாண்டியன் சிறப்பை,

“ …………………………………காதில்
மறைநா ஓசை யல்லது யாவதும்
மணிநா ஓசை கேட்டது மிலனே;
அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது
குடிபழி தூற்றும் கோலனு மல்லன்;
இன்னும் கேட்டி; நன்னுதல் மடந்தையர்,
மடங்கெழு நோக்கின் மதமுகம் திறப்புண்டு
இடங்கழி நெஞ்சத்து இளமை யானை,
கல்விப் பாகன் கையகப் படாது
ஒல்கா உள்ளத் தோடு மாயினும்
ஒழுக்கொடு புணர்ந்த இவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு
இழுக்கம் தாராது” (23:30-47)

என்று கூறுவதும் பிறவும், பாண்டியன்பால் நம்மனோர் உள் ளத்தே அருவருப் புண்டாகாமைப் பாதுகாத்து, துறவுணர்வுக்கேற்ப, கோவலன் தீவினையை அவன் கொலைக்கு ஏதுவாக்கி, பாண்டியனை அவ்வினைக்குத் துணையாக்கி மிக்க சதுரப்பாடமைய அடிகள் இக்காப்பியத்தை அமைக்கின்றார்.

அடிகள், துறவுபூண்டிருத்தற்கேற்ப, உயிர்களிடத்தே தாம் கொண்டிருக்கும் அருளைக் கவுந்தியடிகளின் வாயிலாகப் புலப் படுக்கின்றார். வயல்வழியாகச் செல்லுமிடத்து, செல்வோர் அறியா வகையில் பல உயிர்கள் அவர்தம் காற் கீழ்ப்பட்டுத் துன்புறும் என்பதை நன்கறிந்து, கவுந்தியடிகள் கோவலற்குக் கூறுமிடத்தில்,

“ குறுநர் இட்ட குவளையம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீர் அஞர் எய்தி
அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும்;
எறிநீர் அடைகரை இயக்கந் தன்னில்
பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது
ஊழடி ஒதுக்கத்து உறுநோய் காணின்
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா” (சிலப்.10:86-93)

என்று கூறுவது அவருடைய உள்ளத்தையே யன்றி, உலகியற் பொருள்களை ஊன்றி நோக்கும் அவரது இயல்பையும் புலப் படுத்துகிறது.

மேலும், அடிகள் இயற்கைக் காட்சியில் மிக்க ஈடுபாடு டையர் என்பதை, அக் கவுந்தியடிகள் கூறும்,

“ வெயில்நிறம் பொறா மெல்லியற் கொண்டு
பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே,
மண்பக வீழ்ந்த கிழங்ககழ் குழியைச்
சண்பகம் நிறைத்த தாதுசோர் பொங்கர்
பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக்
கையறு துன்பம் காட்டினும் காட்டும்” (சிலப்.10:66-71)

என்பதும், நீர்நிறைந்த வளவயலிடத்தே பலவகைப் பறவை யினங்களைக் கண்டு,

“ கழனிச் செந்நெல் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியும், கனைகுரல் நாரையும்,
செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழூஉக்குரல்” பரந்து (சிலப். 10:112-119)

இருப்பதை எடுத்தோதுவதும் நமக்குக் காட்டி மகிழ்விக்கின்றன.

இனி, வஞ்சிமாநகரின் புறத்தேயுள்ள நானிலத்திலும் வாழும் மக்கள் பாடும் பாட்டிசையின் சிறப்பை நமக்கு அறிவிக்கின்றார். முதற்கண் குறவர் பாடும் பாணியைக் கூறுவாராய், “அருகே கானத்தே, மூங்கிலில் அமைந்த தேனை யுண்டுகளித்த குறவன் கையிற் கவண் ஏந்தி, புனம் மேயவரும் யானை ஒன்றை எய்யக் குறிவைக்கின்றான்; யானையும் வருகிறது; இவற்றை யறியாத குறமகள் ஒருத்தி பரண்மேல் இருந்துகொண்டு, திறத்திறம் என்னும் இசை கலந்து குறிஞ்சிப்பாணி பாடுகின்றாள்; அவ்விசையின்பத்தில் குறவன் மெய்ம்மறந்து கவணைக் கைவிடுகிறான்; மேயவந்த யானையும் மேய்வதை விட்டுத் தூங்குகிறது” என்பார்.

“ அமைவிளை தேறல் மாந்திய கானவன்
கவண்விடு புடையூஉக் காவல் கைவிட
வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த
ஒங்கியல் யானை தூங்குதுயில் எய்த….
திறத்திறம் பகர்ந்து சேணோங் கிதணத்துக்
குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணி” (சிலப்.27:217-224)

இருக்கிற தென்கின்றார். இவ்வாறே கோவலர் தம் ஆனிரைகளை நீர்த்துறையில் படிவித்துத் தம் தீங்குழல் ஊதுவதும் பிறவும் அழகு திகழ உரைக்கின்றனர்.

அந்திமாலைப்போக்கில் யாவும் ஒளியிழந்து இருள் மயங்கிப் பொலி வின்றியிருத்தலைக் கண்டு, அதனை, நில மடந்தை தன் அரசனையிழந்து அலமரும் அல்லற் காலம் என்றும், இருள் நன்கு படர்வது பகைவேந்தர் போந்து கைப்பற்றிச் செய்யும் கொடு மையாகவும் கூறுபவர், அக் காலத்து நிகழ்ச்சிகளை உள்ளவாறு சொல்லோவியம் செய்து,

“ தாழ்துணை துறந்தோர் தனித்துய ரெய்தக்
காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ் வெய்தக்
சூழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு
மழலைத் தும்பி வாய்வைத் தூத
அறுகாற் குறும்பெறிந்து அரும்புபொதி வாசம்
சிறுகாற் செல்வன் மறுகில் தூற்ற
எல்வளை மகளிர் மணிவிளக் கெடுப்ப
மல்லல் மூதூர் மாலைவந் திறுத்தது”

என்கின்றார். இக்காலத்தே காதலரைப் பிரிந்த மகளிர் பொலி விழந்திருக்கும் கோலத்தை, அடிகள், கண்ணகியாரின் நிலைமை கூறுவார்போல,

“ அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய,
மென்றுகில் அல்குல் மேகலை நீங்க
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்;
மங்கல அணியின் பிறிதணி மகிழாள்;
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்;
திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரிய,
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப,
பவள வாள்நுதல் திலகம் இழப்ப,
தவள வாள்நகை திலகம் இழப்ப,
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்ப” (சிலப்.4:47-56)

என்று புனைந்து கூறுகின்றார்.

இனி, இவர் காலத்தே உயர்நிலை மகளிர் பலவகை உயர்ந்த அணிகளை அணிந்திருந்தனர். அவற்றுட் சிலவற்றை மாதவி செய்துகொண்ட கோலத்தைக் கூறுமாற்றால் கூறுகின்றார். காலணிகள், பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை, அரியகம் என்பன. தொடைக்குக் குறங்கு செறியும்; முப்பத் திரண்டு வடங்கொண்ட மேகலை இடைக்கும்; தோளுக்குத் தோள்வளை, கண்டிகையும்; கைக்கு மணியிழைத்த சூடகம், பொன்வளை, பரியகம், வால் வளை, பவழவளை முதலியனவும்; கைவிரற்கு மோதிரமும், வயிரத்தாளும்; கழுத்திற்குச் சங்கிலியும், நுண்சரடும், பொற்கயிறும், ஆரமும், பின்தாலிகோத்த மணிமாலையும்; காதில் தோடு, குழை, நீலக்குதம்பை முதலியனவும்; தலைக்குத் தெய்வவுத்தி, வலம்புரி, தொய்யகம், புல்லகம் முதலியனவும் அணிந்து கொள்வர். எனவே, மூக்குத்தி, நத்து, புல்லாக்கு முதலியன அக் காலத்தில் இல்லை போலும்.

இனி, அடிகள் திருவேங்கடம் திருவரங்கம் முதலிய இடங் களில் கோயில் கொண்டிருக்கும் திருமாலைக் கண்டிருக்கிறார். திருவரங்கத் திருமால் தோற்றத்தை, அதைப்பற்றிக் கூறியவிடத்தே எடுத்துக் காட்டியுள்ளோம். திரு வேங்கடமுடைய திருமாலை,

“ வீங்குநீர் அருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக் கொடியுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையி னேந்தி
நலங்கிள ராரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன்” (சிலப். 11: 41-51)

என்று தான் கண்ட கோலத்தைக் கண்டவாறே கூறுகின்றார். இன்றும் திருவேங்கடம் வருவோர், நிலத்திருந்தே மலைமேற் செல்லும் வழி நோக்குவரேல், அவர் ஆழ்வார் தீர்த்தம் எனப்படும். “வீங்கு நீர் அருவி” வீழ்வதைக் காண்பர். மீமிசைச் செல்லின், பாபநாசனம், கோகருப்பம், ஆகாய கங்கை என்ற மூன்று அருவி களைக் காண்பர். இஃதொன்றே, அடிகள் “வீங்குநீர் அருவிவேங் கடம்” என்றதன் உண்மையினை நன்கு வற்புறுத்துகிறது. சங்கத் தொகை நூல்களிலும் இவ்வேங்கடம் புல்லி யென்பானுக்கு உரியதென்றும், இது மொழிபெயர் தேயத்தது என்றும் மாமூலனார் முதலிய சான்றோரால் குறிக்கப்பட்டுளது; என்றாலும், இவ் வேங்கடத்தில் திருமாலின் இருப்புக் கூறப்படவில்லை. “மழபுலம் வணக்கிய மாவண்புல்லி, விழவுடை விழுச்சீர் வேங்கடம்”; “கல்லா இளையர் பெருமகன் புல்லி, வியன்றலை நன்னாட்டு வேங்கடம்”; “மா அல் யானை மறப்போர் புல்லி, காம்புடை நெடுவரை வேங்கடம்”; “நெடுமொழிப் புல்லி, தேன்தூங் குயர்வரை நன்னாட்டும்பர், வேங்கடம்” (அகம். 61, 83, 209, 393) என்று வருதல் காண்க. எனவே, இவ் வேங்கடத்தே திருமாலுக்குக்கோயிலுண்டானது, மாமூலனார் முதலிய சங்க கால நல்லிசைச் சான்றோர்கள் இருந்த காலத்துக்குப் பின்பும், இளங்கோவடிகள் காலத்துக்கு முன்புமாம் என்பது உணரப்படும்.

அடிகள் காலத்தே வடநூற்புராண இதிகாசக் கதைகள் தமிழ்நாட்டில் வந்திருக்கின்றன. அவை வாயிலாக வடவர் வழக்க ஒழுக்கங்களுட் பல தமிழகத்தே புகுந்திருக்கின்றன.

XVI. உரைநலம்: இப்பேரிலக்கியத்துக்கு அரும் பதவுரை யொன்றுண்டு; அதன் பிற்போந்த அடியார்க்கு நல்லார் என்னும் பேராசிரியர் அழகியதொரு விரிவுரை எழுதியுள்ளார். அரும்
    பதவுரை நூல் முழுமைக்கும் உண்டு; அடியார்க்கு நல்லார் உரை தொடக்க முதல் வழக்குரை காதை வரையில் தான் உளது. இவற்றின் இடையே கானல் வரிக்கு இவரது உரை கிடைத்திலது. இஞ்ஞான்று, நடுக் காவேரி நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் நன்காராய்ந்து நூன் முழுமைக்கும் எழுதிய நல்லுரை, தமிழ் மக்கள் தவப்பேற்றால் வெளிவந்திருக்கின்றது. இப்பெரு மக்களின் உரை நலத்தை முதனூலைப்படித்து இன்புறுதல் வேண்டும். எனினும், இவ்வுரைகளின் திறத்தை ஒரு சிறிது இங்கேயும் காண்பாம்.

இப் பழையவுரை இரண்டனுள், அரும்பதவுரையே முற்பட்ட தாகும். அடியார்க் குநல்லாரும் இந் நூற்கண்வரும் இசை நாடகப் பகுதிகட்கு இவ்வரும்பதவுரையையே பெரிதும் தழுவியும் மேற்கொண்டும் உரை வகுத்துள்ளார். இவ்வுரையாசிரியரின் பெயர், ஊர், காலம் முதலியன தெரிந்தில. அரும்பதவுரையின் தொடக்கத்தே, “கரும்பும் இளநீரும் கட்டிக் கனியும், விரும்பும் விநாயகனை வேண்டி-அரும்பவிழ்தார்ச், சேரமான் செய்த சிலப்பதி காரக்கதை யைச், சாரமாய் நாவே தரி” என விநாயகக் கடவுளை வணங்குதலால், இவ் வரும்பதவுரைகாரர் சைவசமயத்தவர் என்று துணி தற்கு இடமுண்டாகிறது.

இனி, இவ் வுரையைப் பற்றிக் கூறுமிடத்து, காலஞ் சென்ற டாக்டர். உ.வே. சாமிநாதையரவர்கள் தமது, பதிப்புரையில், “அடியார்க்குநல்லார் உரையிற் காணப்படாத பல மேற்கோள் களும், சில நூற்பெயர்களும் இவ்வுரையிற் காணப்படுகின்றன…. சங்கச் செய்யுட்களுடைய கருத்து முதலியவற்றை இவர் ஆங்காங்கு விளக்கியிருப்பதுடன் சில சில விடத்து மிகச் செவ்விதாகப் பதசாரமும் எழுதியிருக்கிறார்; அடியார்க்குநல்லார் உரையாற் புலப்படாத சில செய்திகள் இவ் வரும்பத வுரையில் விளங்கு கின்றன. …” என்று கூறியுள்ளார்.

“எறிநீரடைகரை இயக்கந்தன்னில்” (10:90) என்ற விடத்து, அரும்பதவுரைகாரர், “எறிநீரடைகரை-நீர்க்கரை; கடற்கரை யென்பாரு முளர்” என்று கூறுவதை நோக்கின், இவர் காலத்தோ, முன்னோ, இச் சிலப்பதிகாரத்துக்கு வேறே உரை இருந்திருக்கலாமென்று எண்ணு தற்கு வாய்ப்புண்டாகிறது.

கண்ணகியார் விண்ணாடு சென்றதனைக் கண்ட குறவர்கள், சேரன் செங்குட்டுவனுக்கும், இளங்கோவடிகட்கும் தெரிவித்திருக் கின்றார்கள். இளங்கோவடிகட்கு அவர்கள் எப்போது சொன்னார்கள் என்ற செய்தி விளக்கமாக இல்லை. இதனை நன்கு தெளியக்கண்டு, அரும்பதவுரைகாரர், “இளங்கோவடிகட்குக் கண்ணகி வானவர் போற்றத் தன்கணவனோடு கூடியது கண்டு, செங்குட்டுவனுக்கு உரைத்த குறவர் வந்து, ‘எல்லா மறிந்தோய், இதனை அறிந்தருள்’ என்று கூறிப்போக, பின்பு, செங்குட்டுவனைக் கண்டுபோந்து, அடிகளுழைவந்த சாத்தன் அதுபட்டவாறெல்லாம் கூற” என்று உரைத்துத் தெளிவிக்கின்றார்.

இந்நூல் மங்கல வாழ்த்துப் பாடற் பகுதியில், கண்ணகியார் கோவலனுக்கு முற்கூறப்பட்டதற்கு அரும்பதவுரைகாரர், “இவளை முன் கூறிற்று, கதைக்கு நாயகி யாதலின்” என்கின்றார். இவ்வாறே, நச்சினார்க்கினியரும், சீவகசிந்தா மணி உரையில், “சீவகனை முற்கூறினார், கதைக்கு நாயகனா தலின்” என்று எழுதுகின்றார். ஆனால், அடியார்க்கு நல்லார், இவரை மறுக்காதே, “கண்ணகியை முற்கூறினார், பத்தினியை யேத்துதல் உட்கோளாகலான்” என்று உரைக்கின்றார். இவ்வுரை விகற்பத்தை நன்கு அராய்ந்து கண்ட நாவலர் பண்டித. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள், “பத்தினியை ஏத்துதல் கருத்தாகலானும், கதைக்கு நாயகியாகலானும் கண்ணகியை முற்கூறினார் என்க” என்கின்றனர். “அரைசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின், உரியவெல்லாம் ஒரு முறை கழித்து” (16:44-5) என்பதற்கு அரும்பதவுரை, “அருமறை மருங்கின் உரிய வெல்லாம் - பலியிடுதல் முதலா யின; வாய்பூசல் முதலாயினவுமாம். தன்னூரிற் செய்வன எல்லாம் செய்யப் பெறாமையின் ‘ஒருமுறை கழித்து’ என்றார். என்று கூறுகிறது. அடியார்க்கு நல்லார், அருமறை யென்பதற்கு, “ஓதவும் உணரவும் அரியமறை”யென்றும், உரிய வெல்லாம் என்பதற்கு, “உரியவாய் விதித்த வாய்பூச்சுப் பலியிடுதல் முதலிய வெல்லாம்” என்றும், ஒருமுறை யென்றதற்கு, “ஒரு முறையால்” என்றும் கூறி யொழிகின்றார். இவ்வுரை வேறுபாடு களுள், அரும்பத வுரைகாரர் ஒருமுறை கழித்து என்றதற்குரைத்த விசேடத்தை நாவலர் பண்டித ரவர்கள் தாம் மேற்கொண்டிருப்பது மிக்க இன்பம் தருகிறது. ஆய்ச்சியர் குரவையில் உரைப்பாட்டு மடையில் வரும் “நான் முலை யாயம் நடுங்குபு நின்றிரங்கும், மான்மணி வீழும்” என்றவிடத்து, “நான்முலையாயம் பசு; ஆயம் மணி வீழும்; இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்திலே முடிந்தது” என்பது முதலியன அரும்பதவுரைகாரரின் இலக்கணப் புலமையின் நுட்பத்தைத் தெரிவிப்பனவாகும்.

அரும்பத வுரைகாரர்க்குப் பிற்பட்டவரான அடியார்க்கு நல்லார், இன்ன மரபின ரென்றும் சமயம் காலம் இவை யென்றும் விளங்கத் தெரிந்தில. இவர் காலம் நச்சினார்க் கினியர்க்கு முற்பட்டதாகலாம் என்று நாட்டார்வர்கள் குறிக்கின்றார்கள். இராமச்சந்திர தீட்சீதரவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்கின்றனர்.

இனி, நாட்டாரவர்கள், “இவர் உரைக்குச் சிறப்புப் பாயிர மாகக் காணப்படும் செய்யுட்களால் இவருக்கு நிரம்பையர் காவலர் என ஓர் பெயருண்டென்பதும், அக்காலத் திருந்த பொப்பண்ண காங்கெயர்கோன் என்னும் தோன்றல், இவருக்கு உதவி செய்து இவ்வுரையைச் செய்வித்தான் என்பதும் விளங்குகின்றன” என்பர். டாக்டர் . உ. வே. சாமிநாதையரவர்கள், “இவருக்கு நிரம்பையர் காவலர் என்னும் பெயர் ஊரால் வந்த தென்றும், நிரம்பை யென்னும் ஊர் கொங்குமண்டலத்தில் குறும்பு நாட்டில் பெருங்கதையின் ஆசிரியராகிய கொங்குவேளிர் பிறந்த விசயமங் கலத்தின் பக்கத் திலுள்ள தென்றும் கொங்கு மண்டல சதகம் தெரிவிக்கின்றது” என்று கூறுகின்றார்.

இவர் உரையை நோக்குமிடத்து, இவர், இயல், இசை, நாடகம் என்ற மூன்று வகைத் தமிழ்ப் புலமையும் நன்கு பெற்றவர் என்பது இனிது விளங்கும். இந் நூலுரையில் இசை நாடகப் பகுதிகட்கு உரை விரிக்குமிடத்து இவர் காட்டும் நூல்கள், இசை நுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரத சேனாபதியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் முதலியன வாகும். இந் நூல்கள் பலவும் இக்காலத்தே கிடைத்தில. இவற்றின் துணைகொண்டு இசை நாடகப் பகுதிகட்கு இவர் கூறுவனவற்றை நோக்கும் போதே, இவரது இசை நாடகப் புலமை நம் மனக்கண்ணில் மிக விரிந்து தோன்றிப் பெரு மதிப்பை உண்டு பண்ணுகின்றது. கூத்துவகை, அவிநய வியல்பு, பண்ணீர் மை முதலியனவும் பிறவும் நல்லறிவுடை யோர் ஆராய்ச்சிக்குப் பெருவிருந்து செய்வதுடன், பண்டைத் தமிழ் மக்களின் இசை நாடகப் புலமையை நமக்கு ஓர ளவு காட்டாதொழிவதில்லை. சுமார் ஐஞ்ஞூறு அறுநூறி யாண்டுகட்கு முன்பிருந்த இசை நாடக நூல்கள் இப்போது கிடைக்காமல் இருப்பது தமிழன்பர்களுக்குப் பெரு வருத் தத்தை உண்டு பண்ணு கின்றது. இவை எங்கேனும் கிடைக்குமோ என்ற ஏக்கம் இன்னும் இருந்து கொண்டேயிருக்கிறது.

இவ்விசை நாடகப் பகுதிபற்றி ஆராய்ந்த திரு. நாவலர் பண்டிதரவர்கள், அரும்பதவுரைகாரர் அடியார்க்கு நல்லார் இருவரும், “பன்னிரு பாலையாவன இவையெனப் பெயர் கூறிற்றிலர்; பண்கள் நூற்றுமூன்றாதலை விளக்கிற்று மிலர்” என்றும், “அடி யார்க்கு நல்லார் வேனிற்காதையில், ‘குரல் வாய் கிளிவாய்க் கேட்டனள்’ என்பதே பற்றுக் கோடாகச் செம்பாலை முதலிய ஏழ் பெரும்பாலையும் பிறக்குமாறு கூறி ‘இவ்வேழு பெரும்பாலை யினையும் முதலடுத்து நூற்றுமூன்று பண்ணும் பிறக்கும்’ என்றார். மற்றும் அவர் புறஞ்சேரியிறுத்த காதையில் ‘பாய்கலைப்பாவை பாடற்பாணி, ஆசான் திறத்தின் அமைவரக்கேட்டு’ என்பதற்கு, ‘சதி பாய்ந்து செல்லும் கலையையுடைய பாவைபோல்வாளது பாடற் பண்ணை ஆசானென்னும் பண்ணியலாகிய நால்வகைச் சாதியினும் பொருந்துதல் வரச் செவிப் புலத்தான் அறிந்து’ எனப் பொருள் கூறி, “ஆசான் சாதி நால்வகையாவன ஆசானுக்கு அகச்சாதிகாந்தாரம், புறச்சாதி சிகண்டி, அருகுசாதி தசாக்கரி, பெருகுசாதி சுத்த காந்தாரமெனக் கொள்க. பண்நூற்று மூன்று; அவை நால்வகைப்படும். பண், பண்ணியல், திறம், திறத்திறமென அவற்றுள் இது திறம் கூறிற்று எனவிளக்க முரைத்தனர். இவ்வீரிடத்தும் பண்நூற்று மூன்றாதலை விளக்கிற்றிலர்” என்று கூறுகின்றார்கள். இப்போதும் இவ்விசையியல்புகளை யறிதற்குத் திரு ஆபிரகாம் பண்டிதரவர்கள் எழுதிய கருணாமிர்த சாகரம், விபுலானந்த அடிகளின் தமிழிசைக் கட்டுரை முதலியன துணை செய்கின்றன என்று திரு. நாட்டாரவர்களே விளம்பியுள்ளார்கள். இக்கூறியவாற்றால், அடியார்க்கு நல்லார் உரைப்பகுதியிலும் விளக்கம் பெறவேண்டிய பகுதிகள் பல உள்ளமை தெளியப்படும்.”

அடியார்க்கு நல்லார் முத்தமிழ்ப் புலவர் என முன்பே கூறியவாறு, இனி அவர்தம் இயற்றமிழ்ப் புலமை சிறிது காணப் படுகிறது. இக்காப்பியத் தலைவியாகிய கண்ணகியை, அடியார்க்கு நல்லார்தான் முதன்முதலில் “கண்ணகியார்” என்று கூறத் தொடங்கிய வராவர்; “இக் கருத்தானன்றே, கொலைக்களக் காதையில் கண்ணகியார் அற வோர்க்களித்தலும்….. என்னை யென்றது மென்க” (2:85-6உரை) என்று கூறுவது காண்க. இவ் வண்ணமே, கண்ணகி யாரின் வரலாற்றை யுரைக்கும் இளங்கோவடிகள் பாலும் இவருக்குப் பெருமதிப்புண்டென்பதை, இவர், “இக் காப்பி யஞ் செய்தவர் விழைவு வெறுப்பற்ற சேரமுனி” (17: உள்வரி வாழ்த்து, உரை) என்பதனால் காணலாம்.

இவரது இலக்கணப் புலமை மிகப் பரந்துபட்ட தென்பது, இவர் பதிகத்து, “குணவாயில் கோட்டத்தரசு துறந்திருந்த, குடக்கோச் சேரல் இளங்கோவடிகட்கு” என்ற இரண்டடிகட்கும் பொருளெழுதிப் பின்பு, எழுத்து, சொல், பொருள் என்ற மூவகை நெறியாலும் மிக விரிவாக எழுதியுள்ள இலக்கணத்தால் தெரிகிறது. ஆங்காங்குக் காணப்படும் அணியிலக்கணமும், காதை இறுதியில் யாப்பிலக்கணமும கூறுகின்றனர். கொலைக்களக்காதையில், “செய்யாக் கோல மொடு வந்தீர்க்கு என்மகள் ஐயை காணீர்…. புனை பூங் கோதை என்னுடன் நங்கை இருக்க” (11-14) என்ற விடத்து, “வந்தீர்க்கு என்றும் காணீரென்றும் உயர் சொல்லால் ஒருவரைக் கூறும் பன்மையாற் கூறினவள் (மாதரி), ஈண்டு நங்கையென்றது, ஒருமை பன்மை மயக்கம் எனின், அற்றன்று; நம்பீயெனப் பல் லோர்க் குறித்த முறைநிலைப் பெயர் நங்கை யென்று புதல்வர் மனைவியரைக் கூறும் முறைப்பெயராதலின் நங்கை யென்றாள் என்க ….. இஃது அக்கால வழக்கு. கோவலனைத் தனக்கு மகனாகக் கருதி இங்ஙனம் கூறினாள்” என்று கூறுவதும் பிறவும் மிக்க நயமாக இருக்கின்றன.

சில தொடர்களின் ஆற்றல் நோக்கி நயவுரை காட்ட லிலும் இவர் மிக்க சிறப்புற்று விளங்குகிறார். கவுந்தியடிகளார் குறுநரியாக வெகுளப்பட்ட வம்பப்பரத்தையும் வறுமொழியாளனும் “அறியாமையின் இன்று இழிபிறப்புற் றோர்” (10:241) எனப்படு மிடத்தே, இன்று இழிபிறப் புற்றோர் என்றதற்கு உரை விளக்கும் இவர் இன்று இழிபிறப்புற்றோர் என்றது நெடுங்காலம் தவம் செய்து பெற்ற மக்களுடம்பை ஒரு வார்த்தையின் இழந்து இழிபிறப் புற்றாரென்ற வாறு; எனவே, யாகாவாராயினும் நா காத்தல் வேண்டு மென்பதாயிற்று” என்பதும், கோவலனை மயக்க வந்த தெய்வம் வயந்தமாலை உருக்கொண்டுவந்து அவன் முன் கண்ணீரு குத்துநின்றதைக் கூறும், ‘அடிமேல் வீழ்ந்தாங்கு அருங் கணீர்ருகுத்து’ (11:175) என்பதில், அருங்கணீர் என்பதற்கு, “பொய்க்கண்ணீர்” என்று பொருளும், “அருங் கண்ணீர் - அன்பு இன்மையின் உகுத்தமை தோன்ற நின்றது” என விளக்கமும் கூறுவதும், கவுந்தியடிகளும் கோவலனும் கண்ணகியும் வையை யாற்றைக் கடந்த செய்தி கூறுமிடத்து வரும் “பெருந்துறை மருங்கிற் பெயராது” (13:178) என்பதில் பெருந்துறை மருங்கில் பெயராமைக்கு ஏதுக் கூறலுற்ற இவர், “முன்னர் வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு சாபமுறுதலின் ஈண்டு மருங்கிற் பெயராது என்றார்” என்பதும், பிறவும் இவரது உரைநலத்தைப் புலப்படுத்துவனவாகும்.

கோவலன் காட்டிய சிலம்பைப் பொற்கொல்லன் பார்த்த பார்வையை, அடிகள், “பொய்த் தொழிற் கொல்லன்” புரிந்துடன் நோக்கி” (16:120) என்றாராக, “புரிந்துடன் நோக்கி” என்றதற்கு அரும்பதவுரைகாரர், “கொல்லன் தான் மறைத்த சிலம்போடு ஒக்கும்படியைப் பார்த்து” என்றனர். ஆனால், இவர், “பொற் கொல்லன் நெஞ்சம் இடுவந்தி கூறுதலைப் புரிந்து நோக்க, கண்கள் சிலம்பை நோக்க, இவ் விருநோக்கும் கண்டார்க்கு ஒரு நோக்கம் போல நோக்கி யென்க” என்று கூறி, “புரிந்துடன் நோக்கி யென்பதற்குப் பணியும் விலையும் நோக்காது அவனை இடுவந்தி யிடுவதற்கு இசைந்து தான் வஞ்சித்துக் கொண்ட சிலம்போடு ஒக்கும் படியைப் பார்த்தென்பாரு முளர்” என்று உரைக்கின்றார்.

இவ்வாறு அரும்பதவுரையைத் தழீஇக்கொள்பவர் சில விடங்களில் அரும்பத வுரையை மறுக்கின்றார். முறஞ்செவி வாரணம் முன்சம முருக்கிய புறஞ்சிறை வாரணம்” (10:247-248) என்றவிடத்து அரும்பதவுரைகாரரை மறுத்ததேயன்றி, ஆய்ச்சியர் குரவைக்கண், பாட்டு என்ற தலைப்பில் வரும் தாழிசைகளில் உள்ள கொன்றை, ஆம்பல், குழல் என்பவற்றிற்கு, அரும்பதவுரைகாரர், “ஆம்பல் முத லானவை சில கருவி. ஆம்பல், பண்ணுமாம்” என்றாராக, “கொன்றை, ஆம்பல், முல்லை யென்பன சில கருவி, இனி அவற்றைப் பண்ணென்று கூறுபவெனின், அங்ஙனம் கூறுவாரும் ஆம்பலும் முல்லையுமே பண்ணாதற்குப் பொருந்தக் கூறினல்லது கொன்றையென ஒரு பண்ணில்லை யாதலானும், கலியுள் முல்லைத் திணையின்கண் ஆறாம்பாட்டினுள்,”

“ கழுவொடு சுடுபடை சுருக்கிய தோற்கண்,
இமிழிசை மண்டை உறியொடு தூக்கி
ஒழுகிய கொன்றைத் தீங்குழல் முரற்சியர்
வழூஉச்சொற் கோவலர் தத்தம் இனநிரை
பொழுதொடு தோன்றிய கார்நனைவியன்புலத்தார்”

எனக் கருவி கூறினமையானும்,

‘ அன்றைப் பகற்கழிந் தாளின் றிராப்பகல்
கன்றின் குரலும் கறவை மணி கறங்கக்
கொன்றைப் பழக்குழல் கோவல ராம்பலும்

என வளையாபதியுள்ளும் கருவி கூறிப் பண் கூறுதலானும், இவை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்த ஒத்தாழிசை யாதலானும் இரண்டு பண்ணும், ஒன்று கருவியுமாகக் கூறின், செய்யுட்கும் பொருட்கும் வழூஉச் சேறலானும் அங்ஙனம் கூறுதல் அமையா தென்க” என இவர் மறுத்து விடுகின்றார்.

இனி, இவருக்குக் கணிதப் பயிற்சியும் சோதிடப் பயிற்சியும் உண்டு என்பது இவர் இந்திர விழவூரெடுத்த காதை, கட்டுரை காதைகளில் கூறும் குறிப்புக்களால் தெரிகிறது. ஆனால், “ஒரோ வழி இவர் கூறுவன வழுவுடையவெனத் தோன்றுகிறது; கட்டுரை காதையிற் கூறப்பட்டுள்ளபடி, ஆடித் திங்களும் இருட் பக்கத்து அட்டமியும் வெள்ளிக் கிழமையும் அழற் குட்டமும் ஒத்து வரும் காலம் யாதெனக் கணித்தறியின் இக் கதை நிகழ்ச்சியின் காலத்தை உள்ளபடி அறிந்தவாறாகும்” என்பர் நாவலர் பண்டித நாட்டார வர்கள். *திரு. இராமச்சந்திர தீட்சத ரவர்கள் இக்காலக்
குறிப்பை யாராய்ந்து கயவாகு முதலிய மன்னர் காலத்தோடு படுத்து நோக்கின், இக்குறிப்பு உண்மையாகவே இருக்கிறதென்கின்றார்.

இவர் ஆங்காங்குக் குறிக்கும் சில குறிப்புக்களை நோக்கும் போது, இவர் இந்நூல் முழுதிற்கும் உரை யெழுதினார் என்றும், அவ்வுரையில், கானல் வரி, வழக்குரை காதை, வஞ்சினமாலை, அழற்படுகாதை, கட்டுரை காதை, வஞ்சிக் காண்டம் என்ற இப்பகுதி
கட்குரிய உரைகிடைப்ப தரி தாயிற்றென்றும் நாம் துணிய வேண்டியவர் களாகின்றோம். நாட்டாரவர்கள், “மதுரைக் காண்டத்தில் இறுதி நான்கு உறுப்புக்களுக்கும் வஞ்சிக் காண்டத் திற்கும் இவரால் உரை இயற்றப்பட வில்லையோ, அன்றி, இயற்றிய உரை இறந்து பட்டதோ என்பது தெரியவில்லை” என்று குறிக் கின்றார்கள்.

இனி, இந்நூல் முழுதிற்கும் நாவலர் பண்டித ந.மு. வேங்கட சாமி நாட்டாரவர்கள் இனிய உரை வகுத்துள்ளார்கள். “சர்க்கரைக் கட்டியான் இயன்ற ஓவியம் எப்பாலும் தித்திப்பது போல” அவர்தம் உரையின் எப்பகுதியும் இன்பந்தருகின்றது. அவர்களது இவ் வரிய உதவிக்குத் தமிழ் மக்கள் என்றும் நன்றி செலுத்தும் கடப்பாடுடையர். அவ்வுரை வெளியீட்டிற்கு முதல்வரான பெருஞ் செல்வர் பாகனேரி தனவைசிய இளைஞர் தமிழ்ச்சங்கத் தலைவர் உயர் திரு. வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன் செட்டியார் அவர்களின் பேருதவியும் தமிழ் வளர்ச்சிக்கண் அவர் கொண்டிருக்கும் பேரார்வமும் நினைக்குந்தோறும் நம்மனோர்க்கு இறும்பூது பயக்கின்றது. அவர்கள் பெருகிய செல்வமும் நீடிய வாணாளும் பெற்று நம் தமிழன்னையின் புகழொளி போல் நின்று நிலவ வேண்டுமென இறைவனை வேண்டு வதல்லது வேறு செய்தற்கில்லேம்.

     **cமுடிப்புரை  

புகார் நகரத்தே பிறந்து; சிறந்து மதுரை; நகரத்தே தம் கற்பு மாண்பை நிறுவி வஞ்சி நகரத்தே கோயில்கொண்ட மாபெரும் பத்தினியாரின் வரலாறு சேரர்வேந்தர் குலக்குரிசில் இளங் கோவடிகளால் சிலப்பதிகாரத்தே பொன்றா வைப்பாகப் புகழப் பட்டிருப்பவும்; இப் பத்தினிக் கடவுளின் வரலாறு வேறு நாடுகளில் வேறுவேறு வகையாகத் திரிந்து வழங்குகிறது.

இலங்கைத் தீவில் இப் பத்தினி வழிபாடு இன்னும் நடை பெறுகிறது. கண்ணகியாரைத் துர்க்கையாகக் கருதி வழிபடுவது பெரும்பான்மையாக உளது. அவரது சிலம்பும் அங்கே வழிபடப் பெறுகிறது. கண்ணகியார் மறுபிறப்பில் தெய்வமாகத்தோன்றி, பாண்டியன் மக்கள் இருவரைக் கொண்டு சென்றார் என்றும், அப்போது அவ் விலங்கைத் தீவின் காவற் கடவுளர் நால்வரும் எதிர்த்தும் கண்ணகிக் கடவுளை மறுத்தற்கியலவில்லையென்றும், அவர்க்கென்றே தீமிதிப்புவிழா நடைபெறுகிறதென்றும் கூறுப. அங்கே இவர்தம் வரலாறு வேறு விதமாகவும் கூறப்படுகிறது. கண்ணகியார் பாண்டியற்கு மகள் என்றும், அவர் பிறந்த போது சோதிடர் அவளால் பாண்டிநாடு சீரழியுமெனக் கூறினரென்றும், அதனால் அவ்வேந்தன் அக்குழவியை ஒரு பேழையில் வைத்து ஆற்றில்விட, அது மிதந்து செல்லக் கண்ட மாநாக்கர், மாச்சாத்தர் என்ற இரு வணிகர் எடுத்து வளர்க்க, மாச்சாத்தர் மகனே பின்பு அவளை மணந்து கொண்டானென்றும் பிறவாறும் கூறுவர்.*

கண்ணகியார் வரலாறுதான் நம்நாட்டில் நாளடைவில் திரிந்து திரௌபதியம்மன் திருவிழாவாக மாறியதென்றும், அவ் விழாவில் நடைபெறும் தீமிதிப்புவிழா அதன் பண்டைத் தொடர்பு என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

கேரள நாட்டில் திருவஞ்சைக்களம் (Modern Cranga nore) முதலிய இடங்களில் கண்ணகியாரைக் காளியாக்கி வழிபடு கின்றனர். இவ்விடத்தில் வாழ்பவர், அக்காளியை “ஒற்றை முலைச்சி” என்று பெயரிட்டழைக்கின்றனர். இவ்வாறு கற்புடைய வணிகர் மகளாக விளங்கிய கண்ணகியாரை, காளியாகத் திரித்து வழிபடும் முறை எக்காலத்து உளதாயிற் றென்பது தெரியவில்லை என்று திரு. இராமச் சந்திர தீட்சதரவர்கள் கூறுகின்றார்கள்.

திரு. தீட்சதரவர்கள் கண்ணகியார் வரலாறு தக்கண நாட்டிலும் வழங்குகிறதெனவும், அதன்கண் கோவலன் கோயிலனாகவும், கண்ணகி, சந்திரையாகவும், மாதவி மவுலியாகவும் பெயர் திரிக்கப் பட்டுள்ளனர் என்றும், கோவலன் மதுரையில் கொலை யுண்டபின் சந்திரை சிவபெருமானை வழிபட்டுத் தன் கணவனது உயிரைப் பெற்றாளென்றும் திரிக்கப்பட்டிருக்கிறதெனவும் தம் சிலப்பதிகார மொழி பெயர்ப்பில் (பக். 372) குறித்திருக்கின்றார்.

இவற்றை நோக்கின், கண்ணகியார் வரலாறு பண்டை நாளில் வடக்கே விந்தமலை முதல் தெற்கே இலங்கை வரையும் மேற்கே சேரநாடு முதல் கிழக்கே கீழ்க் கடற்கரை வரையும் நன்கு பரவியிருந்தது தெரிகிறது. இக்காலத்துப் போல, அக்காலத்தே அச்சுப்பொறியும் பிறவும் இன்மையின், இவ்வரலாறு பல வகையாகத் திரிக்கப்படுதற்கு வழியிருந்தது. இப்போதில் கண்ணகியார் வரலாறு உண்மை வடிவில் உரைக்கப்பெற்ற காவியமும் பிறவும் கிடைத்திருப்பவும், கல்லா நாடகமாக்களும், பேசும் படக்காரர்களும் திரிந்தவற்றின் மேலும் திரிபுகள் பல தாமே தொடுத்துத் தமது மடமையின் மிகுதியை நாட்டிற்குக் காட்டுகின்றனரே! இவர்கட்குத் தம்மானமும் உண்மையறிவும் உண்டாதல் வேண்டாவா? கற்புக் கடம்பூண்ட பொற்புடைக் கண்ணகி, “வானவர் மகளிர் சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய, பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை”யாகிய மாதவி முதலியோர் உண்மை வரலாறு இனியேனும் நாட்ட வர்க்குத் தூய நிலையில் பரவுதற் கேற்ற முயற்சிகள் நாட்டில் உண்டாகுக என வேண்டு
கின்றோம்.

இப் பெருநூல், பண்டைத் தமிழ் வாழ்வும், தமிழறிஞர் அறிவு நுண்மையும், பிறவும் நாம் அறிந்து கோடற்கு ஏற்ற பெரு மணி யாய்த் திகழ்கின்றது.

குறிப்புரை
(எண்-பக்கவெண்)
நிழல்-ஒளி.நிழல் காலுமண்டி லம் - ஞாயிறு. 3

செல்லல் - துன்பம். ‘சேண் நெடுந்தூரத்து’என்றது, உணர் விறந்த நிலை கருதிற்று 5

உலகுபொதியுருவத்துயர்ந்தோன்-சிவபிரான். 7

ஆடகமாடம்-திருவனந்த புரம். 7

கலுழ்ந்து - வருந்தி. 9

உலந்த - கெட்ட. ஐயை - காடுகிழாள். 10

குரவை - மகளிர் கைகோத்து ஆடுங் கூத்து. 11,12

பரிவு-கவலை.பொருள் மொழி-மெய்யுரை. பிறவோர் - அற வோரல்லாதார். வெள்ளைக் கோட்டி – அறிவிலார் கூட்டம். தேஎத்துக்கு - தேயத்துக்கு; மறுமை யுலகிற்கு. 15

கையறு நெஞ்சம் - வருத்தத்தாற் செயலற்ற நெஞ்சம். 21

தேற்றரவு- தேறுதல்.வேளாண் பகுதி - உபகாரத்திறம். 22

கோடிய -கோணிய.கழுவாய்-‘பிராயச்சித்தம்’. 22

படிமம்-உருவம். செலவு-போக்கு. 23

அம்பணவர்-பாணர் 25

அந்தரி- கொற்றவை. கூலமறுகு -தானியத்தெரு. 25

குற்றிளையோர்-குற்றேவல் செய்வோர். தேற்றா-பகுத் துணர்ந்து தெளியப்படாத சிறுமுதுக் குறைவிக்கு-சிறிய பருவத்திற் பெரிய அறிவிற் கிடமாயிருக்கும் நினக்கு; சிறுமை-துன்பம். 26

திருத்தகு மாமணிக் கொழுந்து -கண்ணகி. 28

நீர்ப்படுத்தது-நீரிற் கிடத்தியது.கடவுள்தேர்-விழுமியதேர். 28

திங்கள் வழியோன்-பாண்டியன். வெயில் - ஒளி. ஆன்பொருநை-ஓர் ஆறு. ஐயைந் திரட்டி -ஐம்பது. 29

பொற்படி - பொன்னுலகு. அற்பு-அன்பு.தொன்று இயல்-பழமையாக நடைபெறுகின்ற. படிவமும் - திருவுருவமும். 30

கணி-நிமித்திகன்.உளை வனன் - வருந்து வோனாய். புதுவது - வியப்புத் தருவது. 31

மருட்கை-புதுமை முடித்தலை- முடியில். வாய் வாள்-குறி பிழையாத வாள். நடுக்குறூஉம்-நடுக்குறுத்தும். 32

சேடம்-மாலை 33

வான் பேர்-மிகப் பெரிய. 34

நறியர் - நல்லவர். 36

முந்தை நில்லா முனிவு-நீர் என் முன்பு நில்லாமையாற் றோன்றிய வெறுப்பு. ஏற்பாராட்ட என்னைப் பாராட்ட. வாய் அல் முறுவல் - உண்மை
யல்லாத புன் முறுவல். 37

பீடு அன்று - பெருமையன்று சலம்-பொய். சலதி-பொய்யள், இலம்பாடு-வறுமை. 37

உம்பர்-அப்பால், நாறைங் கூந்தல் -கண்ணகி, நணித்து- அருகுடையது.
வம்பப் பரத்தை-புதிய பரத்தைத் தன்மையுடையாள். 39

குமரி வாழை-ஈனாத இளைய வாழை மாற்றா-மறுக்காத.பரிசாரம்-தொண்டு. 40

புரையறம்-உயர்ந்த அறம். 41

எங்கணா-எவ்விடத்தாய். 42

நோதக்க-வருந்தத் தக்கன. 43

மறமகள்-வீரமகள். பேதுறுவிக்கின்றது. நிலைகலங்கச் செய்கின்றது மன்பதை-உலக மக்கள். 45

கொற்றம்-வெற்றி. 47

கஞ்சுகம் - சட்டை. அறைபோகிய-கீழற்றுப் போகிய. பொறி-அறம். இறை

முறை-ஆட்சி முறை. கைக்கும்-கடுக்கும். 47

குருதி-இரத்தம். பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம்-பசிய துண்டமாகிய பிடரோடு கூடிய மயிடன் தலையாகிய பீடம். மடக் கொடியாகிய கொற்ற வை என்க. 48

வார்-ஒழுகும். குறுகினள்-அணுகி. 49

நடுங்க - அதிர. ஆவின் கடை மணி - ஆவின் கண்மணியின் கடை. ஆழியில் - தேரில். பெயர் - புகழ். 49

பகர்தல் - விலைபகர்தல் 51

கவற்றுகின்றன-வருத்து கின்றன. கோறல்-கொல்லல். 51

நற்றிறம்-அறத்தின் கூறுபாடு. படரா-செல்லா. உள்ளீடு-உள்ளிட்ட பொருள் ; அரி 51

பட்டாங்கு - உண்மையில். ஒட்டேன்-இதோடுவிட இசையேன். பூட்கை - கொள் கை. 53

ஒய்யா - போக்கமுடியாத. கையாறு வருத்தம். 54

எம்இறை - எம் தந்தை. விண் ணவர்- விண்ணவரோடு, அடு சினம் - பாண்டி மன்னனும் அவன் மனைவியும் இறக்கவும், மதுரை அழியவும் ஏதுவாகிய சினம். 55

வகுத்தென - கூத்து வகுத்தென 56

விரை-மணம். 57

வையம்-வண்டி. 58

குறுநர்-களைபறிப்பர். பொறிப்புள்ளி. வரி-கீற்று. அஞர் - வருத்தம்.இயக்கம்-வழி. அலவன்-நண்டு.நந்து-நத்தை. 59

ஊழ்அடி-முறையான் அடியிடுதலின் ஒதுக்கத்து-செல் கையில் சுடர் - விளக்கு 60

ஒருமூன்றவித்தோன் - அருகன். ஐவர் - புலன்கள். கை வரை - கையகத்தே. மறுதர - திரும்பத்திரும்ப. சாபவிடை-சாப விடுதலை. பிலம்பாதலநெறி. 60

மடி-உடை. 62

கஞ்சகாரர்-வெண்கலக் கன்னார். கருங்கை-வலியகை. கண்ணுள்வினைஞர்-சித்திர காரிகள். மண்ஈட்டாளர்-சுதையாற் பாவைமுதலியன செய்வார். துன்னகாரர்-தையற்காரர்.கால் அதர் - காற்றுப் போகும் வழி சன்னல் 64

பண்ணியம்-தின்பண்டம். காழியர்-பிட்டு விற்போர். மோதகம் - ஈண்டுப் பிட்டு. கூலியர்-அப்ப வாணிகர். நொடை-விலை. திமில் - படகு தாரம் - பண்டம். நாள்அங் காடி-பகற் காலக்கடை!
ஓதை-ஒசை. 65

உவந்தனன்-உவந்து. மரபின -தன்மைய பெரியோன்-சிவபிரான். மன்னவன் - இந்திரன். 66
கலையிலாளன் - உடம்பில்லா தவன்; காமன். காமர்-அழகிய இறுக்கும் - திரையிடுகின்றன இலவந்திகை-வசந்தச் சோலை. பரிமுக அம்பி-குதிரை முக வடிவாகச் செய்யப்பட்ட ஓடம், கரி- யானை. அரி-சிங்கம் 67

அயிர்ப்பு-ஐயம். வண்ணக்கர் - நாணயசோதகர்
அம்பணம்-மரக்கால். 67
கறி-மிளகு. மூடை-மூட்டை. வையம்-ஒரு வகை ஊர்தி கொல்லாப்பண்டி யென்ப. 68

வேதினத் துப்ப-ஈர்வாள் முதலிய கருவிகள். கோடு-தந்தம். ஊகம்-குரங்குபோன்ற பொறி -பரிவுஉறு-துன்புறுத்துகின்ற தொடக்கு- சங்கிலி. புதை- அம்புக்கட்டு. ஐயவித்துலாம்-தலையைத் திருகும் மரங்கள் சிரல்-சிச்சிலிப் பொறி. எழுவுஞ் சீப்பு - வீழவிடு மரங்கள் 69

சிலாதலம் -கல் இடம். 69
பாயல் பள்ளி - நாகணை.
துருத்தி-ஆற்றிடைக் குறை.முருக்கிய - அழித்த. 70

நிக்கந்தன் - அருகன். பிண்டி
அசோகு 71

மண்ணீட்டரங்கம் - சுதை பூசிய அரங்கம். விதானவேதி கைகள்-மேற்கட்டியினையுடைய
மேடைகள். 73

பூப்பலி-’அருச்சனை.’ கட வுண் மங்கலம்-’பிரதிட்டை’. 75

ஆர்-ஆத்திமாலை. வஞ்சினம் - சூள். வாய்த்தபின் அல்ல தை-நிறைவுற்றபின் அல்லது, விளியர்-நீங்கார். 76
கொற்றவற்கு - அரசற்கு.
தவாத்தொழில் - பிழைத்த லில்லாத செயல். இவுளி-குதிரை. 76

பரதர்-வணிகர். அங்காடி. கடை கயவாய் மருங்கில் - புகார்முகப் பக்கங்களில். பயனறவு - பயன் தொலைதல். 77

தென்புலங் காவல் - பாண்டி நாட்டு ஆட்சி. உயிர்பதிப் பெயர்த்தமை - இறந்தமை 79

அவம்-குற்றம். அலவைப் பெண்டிர் - தீயவொழுக்க முடைய பெண்டிர். அறை போகமைச்சர்-கீழறுத்தலுடைய அமைச்சர். 81

திருகிய - வெம்மை முறுகி யோடும். பசுங்கொடி-புதிய கொடி. படாகை-பெரிய கொடி சுருங்கையிடம்-கோட்டை யிற் கள்ளவழி. 82

முட்டா முறைமையின் என்க. 83

கொல்லாக் கோலம்-தவக் கோல முதலியன. வெற்றம்-வெற்றி. 85

கவயம்- கவசம். 85

கோளி-பூவாது காய்க்கும் மரம். பாகல்-பலா
போனகம்-உணவு. 91

புழுக்கல் - அவரை, துவரை முதலியவற்றின் புழுக்கல்.
நோலை-எள்ளுருண்டை.
விழுக்கு-நிணம். மடை-சோறு. பொங்கல் - பொங்கற் சோறு. வசி-மழை. 92

கொண்டல்-கீழ்க்காற்று. 93
குருந்து - குருந்த மரம். திகிரிப் பொருபடை - சக்கரப் படை.
நவில் - ஒத்த. பாசவர்-வெற்றிலை கட்டு வோர் முதலியோர். எயினர் - வேடுவர். ஓவர்-எத்தாளர். சூதர் நின்றேத்துவார். 94

கால்-வண்டி. தருவனர்-தந்து. முழுத்தும் - முழுதும். 96

மாதர் - அழகிய. மயிலை - இருவாட்சி. தாழி-பூத்தொட்டி. இளிவாய் வண்டு - இளி யென்னும் இசையைப் பாடும் வாயினையுடைய வண்டு 99

மிடைதரு-செறிந்த.
மரு - மணம். 100

பொன்படுநெடுவரை-இமயமலை; மேருமலையுமாம். அகப்பா - மதில்.. அயிரை-சேரநாட்டு ள்ளதொரு மலை; இங்கே அதன்கண் உறையுந் தெய்வத்தை உணர்த்தும். மண்ணி - நீராட்டி வழிபட்டு. வாரம் - அன்பு 102

நிழல் - அருள். நேமி - ஆணை. கடம் - முறைமை.
கௌரியர் - பாண்டியர். 103

கோள் வல் உளியம் - கொள்ளுதல் வல்ல கரடி. மான்கணம் மறலா - மான்கணத்தோடு மாறுபடா. சூர் - சூர்த்தெய்வம். 103

கேட்டி - கேட்பாய். 104

தண்டலை - சோலை. படர்குவம் - செல்வோம். மண் பக - நிலம் பிளக்க. பொங்கர் - பழம் பூ - போற்றா - கருதிச் செல்லாத 105

கம்புட்கோழி - சம்பங்கோழி. உள் - உள்ளான் என்னும் பறவை. ஊரல் - குளுவை யென்னும் பறவை. புள் - ஈண்டுக் கணந்துட் பறவை. புதா - பெரு நாரை. 105

அமை - மூங்கில். இதண் -பரண் 105

முல்லை - முல்லைப்பண் - மழலைத் தும்பி - இளமையுடையவண்டு. 106

எல் - ஒளி. வியர் - வியர்வை. 106

கோடி - புத்தாடை. அணங்கு - வருத்தும். தகை - அழகு. 107

மழபுலம் - மழநாடு.
காம்பு - மூங்கில். 108

பாய்கலைப்பாவை - கொற்றவை 112

யா - யாவை 112

இடுவந்தி -பொய்யப்பழி. பணி - வேலைப்பாடு .114

கழு - ‘கறத்தற்கரிய பசுக்களைக் கறத்தற்கு இரண்டு தலையுஞ் சீவி மாலையாகக் கட்டிக் கழுத்தில் இடுவது’ என்பர் நச். சுடுபடை - சூட்டுக்கோல். தோல் - தோற்பை. நனை - நனைந்த. 114

பொன்றாவைப்பு - அழியாத நிதியம். பேழை - பெட்டி. 116

கேரள நாடு - சேரநாடு 117

தமிழ்த்தாய் வாழ்க!
Lord Macaulay.
* இச்சிலப்பதிகாரத்தின் மூன்றாம் காண்டமாகிய வஞ்சிக் காண்டம் இளங் கோவடிகள் எழுதியதன்று என்பாரும், பதிகத்தை வேறு எவரேனும் எழுதியிருப்பர் என்பாருமாகப் பலதிறத்து ஆராய்ச்சியாளர் உளர்:- History of the Tamils by P.T.S. Ayyengar.
1. இதனை டிரைடன் (Dryden), என்பாரும் இவ்வாறே Poetic Prose என்று கூறுவர்.
2. இதனை இக் கட்டுரைக்குப் பின் காண்க.
38. * கண்ணகியென்னும் பெயர் பண்டைத் தமிழ் மகளிர்க்கு இடப்பெற்றுப் பயில வழங்கிய பெயர்களுன் ஒன்று. வையாவிக் கோப்பெரும் பேகன் என்னும் வள்ளலின் மனைவியார் பெயரும் கண்ணகி யென்பது புறநானூற்றால் தெரிகின்றது.
ஒருகால், இக் கண்ணகியாரும் கணவனான பெரும்பேகனால் துறக்கப்பட்டுப் பின்பு அரிசில் கிழார், கபிலர், பாணர் முதலிய புலவர் பெருமக்களின் உதவியால் கணவன்பால் கூட்டப்பட்டனர்.
இனி, நம் கண்ணகியார் தம் மார்பொன் றைத் திருகியெறிந்த செய்தி போல்வ தொரு செய்தி நற்றிணையில் ஆசிரியர் மதுரை மருதனிளநாகனாரால் குறிக்கப் பெறுகின்றது. “இதணத் தாங்கண், ஏதிலாளன் கவலை கவற்ற, ஒரு முலையறுத்த திருமா வுண்ணிக், கேட்டோ ரனைய ராயினும், வேட்டோரல்லது பிறர் இன்னாரே” (நற். 216) என்பது அக்குறிப்பு. இதன் உரைகாரர் திருமாவுண்ணி யென்றது நம் கண்ணகி யாரையே என்று உரைக்கின்றார். இஃது ஆராய்தற்குரியது.
* “ஆயிரம் பரிசத்துக்கும் எண் கழஞ்சு மெய்ப்போகத்துக்கும்” என்பர் அடியார்க்கு நல்லார். (3:162-3 உரை)
* The Silapadikaram pp. 362.
_Astronomical date and the date of the Silappadikaram pp. 354-9.
_ “In pressing into service the astronomical data, though not in a way warranted by the original. the Commentator shows himself an able astronomer and we may add an astrologer too” (Introduction to Silappadikaram in English)
* Ancient Ceylon by P.H. Parker.
* திருவள்ளுவமாலையில் இவர் பாடியதாக ஒரு வெண்பா காணப்படுகிறது.
* ஆயின் - ஆராய்ந்து நோக்கின்.
_The Journal of Oriental Research, Madras, Vol. XI. part II page 118-128
கரந்தை கட்டுரை. பக். 226.8
_கரந்தைக் கட்டுரை.பக்.224 _சிலப்பதிகார ஆராய்ச்சி. பக்.81.
‡குறள். புலால் மறுத்தல். †சீவக.1242
_சம்பந்தர் தேவாரம்
_சீவக சிந்தாமணி - சமாசப்பதிப்பு, முன்னரை, பக். 27.
+ Ancient India PP. 375.
_ சிவக. சிந்தாமணி, சமா. பதிப்பு பக்-19.
* Ibid - pp.21,22
* சீவக சிந்தாமணி - சமாசப் பதிப்பு. முக. பக். 22.
_சிலப்பதிகார ஆராய்ச்சி, பக். 19.
1 தொல்-கற். 44.
_ “Four things turneth not back; a spoken word, a sped arrow,
neglected opportunity and past life” - என ஆங்கிலேயர் கூறுப.
* “சிந்தாமணியும் சைவமும்” என்ற பொருள் பற்றி இந் நூலாசிரியர் செய்துள்ள சொற்பொழிவினைச் “சித்தாந்தம்” Vol. 15. பக். 206,211,250 காண்க.
* “எங்கெழிலன் ஞாயி றெளியோமல்லோம்” (6:95-2) எனத் திருநாவுக்
கரசரும் கூறியிருத்தல் காண்க.
* கரந்தைக் கட்டுரை பக். 57-67.
* The Cholas by K.A, Nilakanta Sastri. Vol. II. Part I. P. 516.
* The Cholas. Vol. PP. 134,135: 147,149:185-7.
* Journal of the S.V. Oriental Institute Vol. 1 (Tamil p.1.1)
* “பைந்தொடி மகளிராவார் பாவத்தாற் பெரிய நீரார்” (738), “காரிகையார்கள் (வீட்டைச்) செல்லார்” (737), “கணவற் பேணுங் கற்புடைமகளிர் இந்த உருவத்தின் நீங்கிக் கற்பத்துத்தம் தேவராவர்” (739). “மாதவந் தாங்கி வையத்து ஐயராய் வந்து தோன்றி, ஏதமொன் றின்றி வீடு எய்துவர்” (740) என்று மேருமந்தரபுராணம் கூறுகிறது. பிராப்பிரதத் திரயம், பிரசுவ சனசாரம் முதலிய சமண்சமய நூல்களும் பெண்கட்கு வீடு பேறு கிடையாது என்கின்றன.
* ஈண்டுக் காட்டிய ஞாயிற்றின் செய்கை, சங்ககாலத்தமிழ் மகனொரு வன் தன் மனக்கினிய தமிழ்மகளை மணம் செய்து கொண்ட பிற்றை நாள், தன்னையும் அவளையும் மணவறையில் தமர் விட்டகாலை, “ஓரிற் கூடிய வுடன்புணர் கங்குல், கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து, ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ, முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப” (அகம். 86) தாகிய செய்கையை நினைப்பிப்பது காண்மின். தமிழ் மகன் தமிழ்மகளின் “முகம்புதை”திறக்குங்கால் மணமுரசு மழங்குமென வறிக.
* கொண்ட - கொள்ளுதற்கு இடமாகிய மார்பம், என்று பொருள் கொள்க.
* இப் பகுதிக்கண் வரும் செய்யுளெண்கள், சாமிநாதையரவர்களின் உரையோடு கூடிய பிரதி யெண்களாகும்.
* சீவக சிந்தாமணி மூலமும் உரையும், 3-ஆம் பதிப்பு, முன்னுரை பக்.1,22.